ஜி.பாலன் |
லட்சுமி மூவீ மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், வி.சாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் இணைந்து சரத்குமார்
நடித்த அரண்மனைக் காவலன், வேலுச்சாமி ஆகிய படங்களை தயாரித்திருந்தனர்.
இவர்களில் கே.முரளிதரன் பைனான்சியராகவும் இருந்தார்.
மறைந்த தயாரிப்பாளர் தரங்கை சண்முகம் அவர்கள் தயாரித்தப் படங்களுக்கு
கே.முரளிதரன் பைனான்ஸ் செய்திருந்தார். தயாரிப்பாளர் – பைனான்சியர் என்பதைத்
தாண்டி அவர்களுக்குள் நல்ல நட்பும், புரிதலும் இருந்தது.
அதனால், முரளிதரன் அவர்களை, ‘’டார்லிங்’’ என்றுதான் போனில் செல்லமாக அழைப்பார்
தரங்கை சண்முகம்.
தரங்கை சண்முகம் அவர்களின் மறைவுக்கு பிறகு, அவர்
வகித்த பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரன் அவர்களை செயற்குழுவில் வைத்து தேர்வு
செய்தார் கே.ஆர்.ஜி.
சங்க அறங்காவளாராக இருந்த டி.ஆர்.ராமண்ணா அவர்கள் காலமானதால், அந்த அறங்காவலர் பதவிக்கு செயற்குழு ஒப்புதலுடன் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
அவர்களை கொண்டு வந்தார் கே.ஆர்.ஜி.
பிலிம் சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி, அதன் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும்.
தலைவர் பதவிக்கு ஒரு ஆண்டு மலையாளம், ஒரு ஆண்டு கன்னடம், ஒரு ஆண்டு தெலுங்கு, ஒரு ஆண்டு தமிழ் என சுழற்சி முறையில் தலைவர் பதவிக்கு
தயாரிப்பாளரை கொண்டு வருவார்கள்.
இந்த முறை தமிழில் இருந்து தலைவர் வர வேண்டும் என்பதால், அவரை தேர்வு செய்து அனுப்பும் வேலையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்
சங்கத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
மூத்த உறுப்பினர்களான முக்தா சீனிவாசன் அவர்களும்,
கேயார் என்று அழைக்கப்படும் கோதண்ட ராமைய்யா அவர்களும் தலைவர் பதவியை ஏற்க விரும்பினார்கள்.
இருவருமே சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பவர்கள். இவர்களில் யாரை தேர்வு
செய்து அனுப்புவது என்பதில் கே.ஆர்.ஜி. அவர்களுக்கு குழப்பம் இருந்தது.
ஏற்கனவே பிலிம் சேம்பர் தலைவர் பதவியில் முக்தா சீனிவாசன் அவர்கள்
இருந்திருக்கிறார். அதனால், இந்த முறை கேயாருக்கு கொடுக்கலாம் என்று
இறுதியில் முடிவு செய்தார்.
இதனால், முக்தா சீனிவாசன் அவர்கள் கோவித்துக் கொண்டு
சில மாதங்கள் சங்கத்திற்கு வரவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதில் முதல்வராக கலைஞர் அவர்கள்
பொறுப்பேற்றிருந்தார். அதனால் திரைத்துறையில் அனுபவம் உள்ள தயாரிப்பாளர் ஒருவரை
பிலிம் சிட்டி தலைவராக நியமிக்க வேண்டும் என்று,
முக்தா சீனிவாசன் அவர்களை நியமித்தார் கலைஞர்.
அதே அப்பொது நடந்த போல
தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் கே.ஆர்.ஜி. அணியினரே வெற்றி பெற்றனர். செயலாளர்களாக
கே.எஸ்.சீனிவாசன், கே.விஜயகுமார் ஆகியோரும், துணைதலைவர்களாக ஆர்.பி.சௌத்திரி, ஏ.ஜி.சுப்பிரமணியம் ஆகியோரும்
தேர்வாகி இருந்தனர். பொதுக் குழு உறுப்பினர்களுக்கு சைவம்,
அசைவம் என இரு வகை உணவுகள் விருந்து வைக்கப்பட்டன.
முதல் செய்ற்குழு கூட்டத்தை வெளியில் நடத்தலாம் என்று முடிவு
செய்யப்பட்டது. திருப்பதி செல்லலாம் என்றார்கள். சீசன் நன்றாக இருக்கிறது
குற்றாலம் செல்லாம் என்றார்கள். ஏசி பெட்டி ஒன்று முன்பதிவு செய்து நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரும் ரயிலில் பயணம் செய்தார்கள்.
மறுநாள் காலை தென்காசி ரயில் நிலையத்தில் நெல்லை மாவட்ட விநியோகஸ்தர்
சங்கம் சார்பில், அதன் தலைவர் சூரிய நாராயணன் அவர்கள் தலைமையில்
பெரும் கோஷத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தனை தயாரிப்பாளர்களுக்கும்
பூங்கொத்து கொடுத்து வரவேற்றர்கள்.
தென்காசி பாலகிருஷ்ணா திரையரங்கத்திற்கு சொந்தமான தாய்பாலா கார்டன் குற்றாலம்
செல்லும்ன் பாதையில் இருந்தது. அங்கு அனைவரும் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
மெயின் அருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி
என்று மூன்று வேலையும் அருவி குளியல், காற்று வீசும் இடத்தில் செயற்குழு
கூட்டம் என்று மூன்று நாட்கள் நடந்தன. அனைத்து தயாரிப்பாளர்களும் ஒரு குழந்தையைப்
போல, சிறுவர்களைப் போல விளையாடி மகிழ்ந்த அந்த நாட்கள்
மறக்க முடியாத அனுபவம்.
தயாரிப்பு செலவு கட்டு படுத்துதல்,
வியாபார விஷயத்தில் சுதந்திரம் என்று பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதை நடைமுறை
படுத்துவது என்று முடிவானது.
அனைத்து உறுப்பினர்களுக்கும் திருநெல்வேலி அல்வா ஸ்பெஷலாக வரவழைத்து
விநியோகிக்கப்பட்டது.
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment