ஜி.பாலன் |
திரைப்படத் துறையில் இயக்குநர் சங்கம், கதையாசிரியர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம், கலை இயக்குநர் சங்கம், நடன இயக்குநர் சங்கம், சண்டைப் பயிற்சி இயக்குநர் சங்கம், படத் தொகுப்பாளர் சங்கம், போட்டோகிராபர் சங்கம், துணை நடிகர்கள் சங்கம், தயாரிப்பு நிர்வாகிகள்
சங்கம், உடையலங்காரம் சங்கம்,
ஒப்பனையாளர்கள் சங்கம், அவுட்டோர் யூனிட் டெக்னீசியன் சங்கம், டப்பிங் பேசும் கலைஞர்கள் சங்கம், கார் ஓட்டுனர் சங்கம், உணவு பரிமாறுபவர்கள் சங்கம், நளபாகம் சங்கம் என
இருபத்தி நான்கு சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்களில் உறுப்பினர் அல்லாதவர்கள்
திரைத்துறையில் பணியாற்ற முடியாது.
இந்த இருபத்தி நான்கு சங்கங்களையும் இணைக்கும் தாய் சங்கமாக
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEPSI-பெப்சி) என்கிற அமைப்பு செயல்படுகிறது.
இந்த சம்மேளனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில், இந்த இருபத்தி நான்கு
சங்கங்களின் தலைவர், செயலாளர் பதவியில் இருப்பவர்கள்
தேர்தலில் நின்று வாக்களித்து முக்கிய பதவிகளுக்கு வருவார்கள்.
அப்போது சண்டைப் பயிற்சி இயக்குனர்களின் சங்கத்தில் இருந்து
வந்த விஜயன் அவர்கள் தலைவராக இருந்தார்.
திடீர் என தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்த
போராட்டம் கண்டு தொழிலாளர் அமைப்பு அதிர்ச்சி அடைந்தது.
வேலை இல்லாமல் தொழிலாளர்கள் எதற்கு இந்தப் போராட்டாம் என்று
பேசத் தொடங்கினார்கள்.
உடனடியாக அன்று கூடிய தொழிலாளர் சம்மேளன் கூட்டம், முன் அறிவிப்பின்றி
வேலைநிறுத்தம் செய்த தயாரிப்பாளர்கள் சங்கத்தை கண்டித்ததோடு,
தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு கேட்கும் வரை வேலை தொடங்குவதில்லை என்று பதிலுக்கு
அறிவித்தது.
இதைக் கேட்ட தயாரிப்பாளர் சங்கம் கோபம் அடைந்தது.
தயாரிப்பாளர்களும் கூடினர். விவாதித்தனர். இனி சம்மேளன உறுப்பினர்களை வைத்து
தொழிலில் ஈடுபட மாட்டோம் என பதிலுக்கு இவர்களும் அறிவித்தனர்.
நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. வேலை நிறுத்தம்
தொடர்ந்தது. இது குறித்து விவாதிக்க, இயக்குனர்கள் பலர் தி.நகரில் இருக்கும் மீனாட்சி கல்யாண மண்டபத்தில்
ஒன்று கூடினர். ஒருவித இருக்கமும், பீதியும், பதற்றமும் அங்கு நிலவியது.
‘’திரைத்துறையில் எட்டு சங்கங்கள் படைப்பாளிகளாகவும்,
மற்ற சங்கங்கள் படைப்புக்கு உதவும் தொழிலாளர்களுமாக இருக்கிறோம்’’ என்று இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா
பேச ஆரம்பிதார்.
எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், அதை விளக்க வேண்டும்
என்று கேள்வி எழுப்பினார்.
தொழிலாளர் இல்லாமல் உங்களால் படம் எடுக்க முடியுமா? என்று ஒருவர் கேள்வியை
எழுப்பினார்.
நாற்காலியை தூக்கி மேடை நோக்கி ஒருவர் வீசினார். சிலர்
கூச்சல் போட்டனர். அதனைத் தொடர்ந்து கூட்டம் நடந்த இடம் களேபரமானது.
அசம்பாவிதம் எதுவும் நடந்து விடுமோ என்று அச்சம் நிலவியது.
வெளியில் நின்றிருந்த இயக்குனர் மனோஜ்குமார் மூலமாக காவல்துறைக்கு தகவல்
அளிக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
கலவரம் தவிர்க்கப்பட்டு கூட்டம் கலைந்தது.
இதனால், இனி ஒன்றிணைந்து வேலைசெய்ய முடியாது. அதனால்,
புதிதாக தொழிலார் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களும்,
இயக்குநர்களும் விரும்பினர்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆண்டாள்
பிரிவியூ தியேட்டரில் நடந்தது. அங்கும் தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த பலர் வந்து
கலவரத்தில் ஈடுபட்டனர். வாசலில் நின்றிருந்த இயக்குநர் பாரதிராஜாவின் கார்
உடைக்கப்பட்டது.
கே.பாலசந்தர் உட்பட முன்னணி இயக்குநர்கள் பலர் உயிரை கையில்
பிடித்துக் கொண்டு பாதுகாப்பு தேடவேண்டிய நிலைக்கு ஆளானார்கள். எனக்கு தொலைபேசி
மூலம் தகவல் வந்தது. உடனே இந்தத் தகவலை தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களிடம்
தெரிவித்தேன்
.
அவர் மூலமாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான்
மீடியாவினருக்கு தகவல் தெரிவித்தேன்.
நடிகர் ராதாரவி உட்பட சிலர் வந்து அமைதி படுத்த முயன்றனர்.
காவல்துறை வந்த பிறகுதான் அங்கு அமைதி திரும்பியது.
தொடர்ந்து பல நாட்கள் ஆண்டாள் திரையரங்கில் இயக்குநர்களின் கூட்டம்
நடைபெற்றது. அதன் விளைவாக படைப்பாளிகள் சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் பெப்சி- படைப்பாளி என இரு குழுவாக தொழிலாளர்கள் பிரிந்தனர்.
(என் திரையுலக அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment