Monday, September 14, 2015

56. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும், படப்பிடிப்பும் - ஜி.பாலன்



கேபிள் டிவியின் வளர்ச்சி பெரிதாக பேசப்பட்ட நேரம். தங்களுடைய சந்தாதாரர்களை உற்சாகப்படுத்த போட்டிப் போட்டுக் கொண்டு புதியப் படங்களை கேபிள் டிவியில் ஒளிபரப்பினார்கள். இதனால், திரையரங்கிற்கு வரும் கூட்டம் பெருமளவு குறைந்தது. 

திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறைந்ததால், வசூல் இல்லாமல் விநியோகஸ்தர் தரும் படங்களுக்கு திரையரங்கினாரால், பணம் கொடுக்க முடியவில்லை. 

வினியோகஸ்தர்களுக்கு பணம் வராததால், தயாரிப்பாளரிடம் போட்ட ஒப்பந்தபடி, பணம் கொடுக்க விநியோகஸ்தரால் முடியவில்லை.

விநியோகஸ்தர்களிடம் இருந்து பணம் வராததால், தயாரிப்பாளரால் படத்தை தொடர முடியவில்லை. 

தயாரிப்பாளர் படத்தை தொடர முடியாததைப் பார்த்து பைனான்சியர்கள் எதை நம்பி பணம் கொடுப்பது என்று பயந்து ஒதுங்கினர். 

இப்படிபட்ட சூழ் நிலையில் படப்பிடிப்பு எப்படி நடத்துவது என்று வழி தெரியாமல் தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தொழிலாளர் பிரச்சனை வெடித்தது. 

இதனால், சில தயாரிப்பாளர்களை தவிர, பல தயாரிப்பாளர்களுக்கு இந்தப் போராட்டம் பெரிய பாதிப்பில்லை. பணம் இருந்தால்தானே படம் எடுக்க முடியும்

தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம், போராட்டம் என்று களத்தில் இறங்கினர். 

தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவாக செயல்பட இயக்குநர்கள் புதிய படைப்பாளி - தொழிலாளர் அமைப்பை உருவாக்கினர். புதிய உறுப்பினர்களை சேர்த்து நிர்வாகிகளை தேர்வு செய்து படப்பிடிப்புக்கு  தயாரானார்கள். 

எல்லாத் துறைக்கும் தொழிலாளர்கள் சேர்ந்தாலும், கேமிராவை ஆன் செய்யும் தொழிலாளர்கள் மட்டும் சேரவில்லை. இதனால், மும்பையில் இருந்து கேமிராவும், அதற்கான தொழிலாளர்களையும் வர வழைத்து படப்பிடிப்பு தொடங்குவது என முடிவானது.  

மும்பையில் இருந்து கேமிரா வரவழைக்கப்பட்டு, பொட்டானிக்கல் கார்டனில் ஜெயராம் நடித்த ஒரு படம், பிலிம் சிட்டியில் கஸ்தூரிராஜா இயக்கிய ஒரு படம், திரிசூலம் மலையில் குஷ்பு நடித்த ஒரு படம் என மூன்று படங்களின் படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது 

அந்த கேமிரா எந்தெந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்கிறது. அவர்களிடம் வாடகை வசூலிக்க வேண்டியது என அந்த பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்திருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி. 

ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்தாலும், இன்னோரு பக்கம் பசி, பட்டினி என தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். 

எந்தப் பக்கமும் இறங்கி வந்து பேச யாரும் முன்வரவில்லை. ஆறு மாத காலம் போராட்டம் தொடர்ந்தது. 

ஆரம்பத்தில் இணைந்து விடுவார்கள் என எதிர்ப் பார்த்த அரசியல் கட்சிகள், பிறகு தங்களுடைய ஆதரவினை தெரிவிக்க முயன்ற போது, இது அரசியலாகும் நிலைக்கு ஆளானது. 

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொழிலாளர்களுக்கு உணவுக்கு உதவிகள் செய்தார். அப்போதை முதல்வர் கலைஞர், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என விரும்பினார்.  

இரு துருவங்களாக இருந்த  கே.ஆர்.ஜி.யும், சிந்தாமணி முருகேசனும் இணைந்தனர். அரசின் எண்ணத்தை புரிந்து கொண்ட இவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர்.
அதனை தொழிலாளர் அமைப்பு வரவேற்றது. தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர். இயக்குநர் கே.பாலசந்தர் அந்த அமைப்புக்கு தலைவராக தேர்வானார்.

தொழிலாளர்கள் ஒன்றிணைந்தாலும், தொழிலை பாதிக்கும் பிரச்சனைக்கு யார் நடவடிக்கை எடுப்பார்

கேபிள் டிவியில் படம் ஒளிபரப்பாமல் இருக்கவும், திருட்டு விசிடியை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே?. அதுவும் நடந்தது. அது எப்படி நடந்தது என்பதை அடுத்தக் கட்டுரையில் சொல்கிறேன்.
  
 (என் திரையுலக அனுபவங்கள் தொடரும்)

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...