ஜி.பாலன் |
தமிழக அரசு திரையுலகிற்கு உதவும் வகையில் தரமணியில்
பிலிம்சிட்டி ஒன்றை உருவாக்கி இருந்தது. பணப் பெட்டியோடு சென்றால் படப் பெட்டியோடு
திரும்பலாம் என்கிற அளவுக்கு உள்ளே படப்பிடிப்பு தளங்கள் உருவாகி இருந்தது.
கிராமம், கோவில், தெருக்கள், வீடுகள், பாலம், பஸ் ஸ்டாப், ஃப்ளோர், கார்டன் என படப்பிடிப்பு நடத்த பல இடங்கள் அதனுள் இருந்தன.
அதன் திறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி, பிரபுதேவாவின் நடனம் என பலவகையான நிகழ்ச்சிகள் அங்கு அமர்க்களப்பட்டது.
அப்போது முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.
முதல்வருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்
சார்பில் நினைவு பரிசு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, ராணி சீதை ஹால்
கட்டிடத்தில் உள்ள உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் ஒரு பெரிய பரிசு
பொருள் இரண்டு லட்சம் செலவில் தயாரானது. அது கனமாகவும்,
உயராமாகவும் இருந்ததால், அதை நானும்,
சுப்பாராவும் எடுத்துக் கொண்டு பிலிம் சிட்டிக்கு சென்றிருந்தோம். விழா மேடைக்கு
பின்புறம் பல சோதனைகளுக்கு பிறகு அனுமதித்திருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் முடிந்து விழா துவங்கிய போது முதல்வரை
கௌரவிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. அப்போது தலைவர் கே.ஆர்.ஜி., கேயார் இருவரும்
இணைந்து அந்தப் பரிசை முதல்வரிடம் வழங்கினார்கள்.
அதை தூக்க முடியாமல் நானும் சுப்பராவும் தூக்கி சென்றது, அப்போது சுப்பாராவ்
நடந்து கொண்ட விதம் என பல நினைவுகள் மனதிற்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அதே போல திரு.ஏவி.எம்.சரவணன் அவர்கள் பிலிம் பெடரேஷன்
இந்தியா தலைவராக பொறுப்பேற்ற போது, ஒரு தமிழன் அகில இந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகி இருக்கிறார்
என்று பெருமைப்பட்ட கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர் சங்கம்
சார்பில் அவருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தார். அதற்கு
உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
அடையாரில் உள்ள பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டலில்
பிரமாண்ட விழா எடுத்து, அதில் ஏராளமான நடசத்திரங்கள் கலந்து கொண்டு அவரைப் பாராட்டினார்கள். கௌரவப்
படுத்தினார்கள்.
அந்த விழா தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.
கே.ஆர்.ஜி. என்ன நினைக்கிறாரோ அதை செயல்படுத்தும் வேலை எனக்கு அதிகமாக இருந்தது.
தமிழ்த் திரையுலகில் நல்லது நடக்கும் போது அதைப் பாராட்டவும், கெட்டது நடக்கும் போது
அதை சுயநலம் பாராமல் எதிர்க்கவும் தயாராக இருந்தார் கே.ஆர்.ஜி.
முன்பு கூறி இருந்ததைப் போல விநியோகஸ்தர் சங்கம் மூலம்
படங்களுக்கு ரெட் அடிப்பது வழக்கத்தில் இருந்தது. சில விநியோகஸ்தர் சங்கங்கள், தயாரிப்பாளர்
சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் வந்தனர்.
சில சங்கங்கள் அதில் பிடிவாதமாக இருந்தனர்.
அதில் திரு.சிந்தாமணி முருகேசன் அவர்கள் தலைமையில் இருந்த
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கம் கடுமையான நடவடிக்கைகளை
எடுத்து அவர்களது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. அந்த அமைப்பின்
வலிமையும்,
உறுதியும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்ச்னையாக இருந்தது.
அதனால், படங்களை வெளியிட விடாமல் தடை செய்யும் ரெட் அடிபதற்கு எதிராக போராட்டம்
நடத்த முடிவு செய்தார் தலைவர் கே.ஆர்.ஜி. அப்படி அப்போது ரெட் அடிக்கப்பட்ட படம்
காதலன். கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில்
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்தப் படம்
அது.
பிலிம் சேம்பர் வாசலில் ரெட் அடிப்பதற்கு எதிராக
உண்ணாவிரதம் என்கிற பெரும் போராட்டத்தை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்
சார்பில் துவங்கினார் கே.ஆர்.ஜி. தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்பக்
கலைஞர்கள், தொழிலாளர்கள் என திரையுலகின் இருபத்தி நான்கு
அமைப்புகளும் அதற்கு ஆதரவு அளித்து அந்த உண்ணாவிரத்ததில் கலந்து கொண்டனர். அன்று
படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை.
காலையில் துவங்கிய போராட்டம் மாலை ஐந்து மணி வரை நீடித்தது.
முடிவில் அரசிடம் அந்த கோரிக்கை ஒப்படைக்கப்பட்டது. மறுநாள் படங்களை எந்த காரணம்
கொண்டும் தடை செய்யக் கூடாது என்று அரசு சார்பில் தெரிவித்தனர். மீறி செய்தால், நடவடிக்கை
எடுக்கப்படும் என்று கூறி இருந்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு கிடைத்த மரியாதையை, திரையுலகினர் தந்த
உதவியை நினைத்து பெருமைப் பட்டார் கே.ஆர்.ஜி. அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
அவர்.
ஆனால் பிறகு அவர்களுக்குள் பிரச்சனை எழும் என்று அவருக்கு
அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
(என்
திரையுலக வாழ்க்கை
அனுபவங்கள் தொடரும்)