Saturday, August 8, 2015

28. மாமனாருக்கு சிரிப்பு? - ஜி.பாலன்


எடையூர் ஆர்.ஆர்.நாடிமுத்து

ஒரு வாரத்திற்குள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால் அவளை அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொள்வேன் என்று நான் சொன்ன அந்த வார்த்தை அண்ணனின் இதயத்தில் அழுத்தமாக பதிவாகி இருக்கிறது.  

இவன் அப்படி செய்தாலும் செய்வான் என்று நினைத்தவர், இவனுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் சிந்தித்திருக்கிறார். 
 
எடையூர் கடைத் தெருவில் சைக்கிள் கம்பெனி வைத்திருந்தார். கடையில் அமர்ந்து கொண்டு உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் உடனடியாக பெண் தருபவர் யார் இருக்கிறார் என்று யோசித்திருக்கிறார்.

அண்ணனின் நண்பன் நாடிமுத்து, கடைக்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவரிடமும் பெண் பற்றி விசாரித்திருக்கிறார். என் சித்தப்பா மகள் இருக்கிறாள் என்று அவரும் பதில் சொல்லி இருக்கிறார். 

பெண் பற்றியும் அவர்கள் குடும்ப சூழல் பற்றியும் விசாரித்தவர், பிறகு அவரை அழைத்துச் சென்று அவரது தந்தையிடம் பேசி இருக்கிறார். 

தம்பி, தர்மலிங்கம் காலமாகிவிட்டதால், அவரது மகளுக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமையில் இருந்தார் அவர். 

எனது அண்ணனின் விருப்பத்தை புரிந்து கொண்டு முதலில் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் படி கேட்டுக் கொண்டதோடு, அவரது மகன் நாடிமுத்துவை கூடவே அனுப்பி வைத்திருக்கிறார். 

நான் ஜோதிடத்தை நம்பாதவன் என்றும், ஜோதிட குறிப்பை கிழித்து எரிந்துவிட்டேன் என்று ஜோதிடர் கணபதி பண்டாரம் அவர்களிடம் சொல்லி, பெயர் ராசிக்கு பொருத்தம் பார்க்க வைத்திருக்கிறார்கள். இருவருக்கும் ஏக பொருத்தம் இருக்கிறது என்று அவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். 

மாரிநகரி ஆத்தா வீட்டு வயலில் மீன்முள் புல்லு செத்துகிற வேலை மதியம் வரைப் பார்த்துவிட்டு, ஐயன் குளத்தில் ஒரு நல்ல குளியலைப் போட்டுவிட்டு, வயிறு புடைக்க தின்றுவிட்டு தெற்கு காற்றை வாங்கிக் கொண்டு பெஞ்சு மீது படுத்திருந்தேன். 

தூக்கம் கண்களை தழுவும் போது, ஆரியலூர் செல்லும் ஒரு நபர் வந்து என்னை எழுப்பினார்.

திரும்பிப் பார்த்தேன். 

உங்களை உடனே அண்ணன் வரச் சொன்னார் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.

நான் பதிலுக்கு சரி என்பது போல தலையை ஆட்டினேன். 

அவர் திரும்பி சென்றதும், நான் திரும்பிப் படுத்துக் கொண்டேன். 

அடுத்த அரை மணியில் இன்னொருவர் வந்தார். 

அண்ணன் அழைத்ததாக அவரும் தகவல் கொண்டு வந்தார்.

அவருக்கும் அதே பதில். ஆனால், அவர் செல்வதாக இல்லை. 

உள்ளே இருந்து வந்த என்னுடைய பெரியம்மா மங்கையாகராசி, அவரிடம் விசாரித்தார். 

ஏதோ முக்கியமான சோலியாம். தம்பியை உடனே வரச்சொல்லி சொன்னார் என்று பெரியம்மாவிடம் தெரிவித்தார் அவர்.

இதோடு இரண்டு பேர் வந்து சொல்லி இருக்கிறார்கள். இப்படி படுத்திருந்தால் அண்ணனுக்கு என்ன மரியாதை. போய் என்ன? ஏது? என்று கேட்டு வா? என்று பெரியம்மா உரிமையுடன் அதட்டினார்.

எனது தந்தை படுக்கையில் விழுந்தது முதல், அவர் இறந்த பிறகும் எங்களுக்காக கஷ்டப்பட்டவர் அண்ணன். தவறு செய்தால் கூட, எங்களை ஒரு முறை கூட கை நீட்டி அடித்ததில்லை. திட்டியதில்லை. தம்பிகளை அடித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். 

அதே போல அவர் மீது நாங்கள் அளவு கடந்த அன்பும், அதற்கு மேலான  மரியாதையும் இன்று வரை வைத்திருக்கிறோம். அவர் நிற்கும் இடத்தில் கூட நாங்கள் நின்றதில்லை. 

உதவுகிறேன் என்று சொல்கிற பெண்ணை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாரே என்கிற ஆதங்கத்தில், ஒரு வார்த்தைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று பதிவு திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னேனே தவிர, அப்படி மீறிச் சென்று திருமணம் செய்து கொள்கிற அளவுக்கு மரியாதை தெரியாதவன் கிடையாது,

அப்போதே அதை மறந்துவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். ஆனால், கடுமையான உழைப்பும், அதனால் ஏற்பட்ட சோர்வும் தூக்கத்தை ஏற்படுத்தின. ஐந்து மணிக்கு கடைத்தெரு செல்ல வேண்டிய வேலை இருக்கிறது. அப்போது செல்லலாம் என்று படுத்திருந்தேன்
.
ஆனால், பெரியம்மாள் வார்த்தைக்கு உடனே மதிப்பு தர வேண்டிய கட்டாயம். உடனே சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எடையூருக்கு பறந்தேன். 

என்னைக் கண்ட அண்ணன் சண்முகம், வேஷ்டி கட்டி வந்திருக்கலாம் என்று ஒரு கேள்வியை எழுப்பியவர், எதிரில் இருந்த பழக்கடைக்கு சென்றார். பிறகு அவருடன் நாடிமுத்துவும் வந்தார். என்னைப் பார்த்து அவர் ஒரு சிரிப்பை உதிர்த்தார். மரியாதை நிமித்தமாக பதிலுக்கு நான் தலையாட்டினேன். 

அவருடன் செல்லுமாறு அண்ணன் சொல்ல, ஏதோ ஒரு பொருள் எடுத்து வர அனுப்புகிறார் என்று, அவருடன் சென்றேன். 

அவரது வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தச் சொன்னார். இறங்கி உள்ளே ஓடினார். பிறகு விறுவிறு என்று திரும்பி வந்தவர், கடைத் தெருவுக்கு சைக்கிளை செலுத்தச் சொன்னார். 

பழக்கடை வாசலில் சைக்கிள் நின்றதும், இறங்கி சுற்றி ஒரு ரவுண்டு பார்த்தவர், பிறகு அவரது தந்தையைக் கன்டதும், அருகில் சென்று என்னை காட்டி கை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். .

நடு ரோட்டில் ஒத்தை காலை தரையில் ஊன்றி, ஒத்தை காலை சைக்கிள் பெடலில் வைத்து நின்ற என்னை, அவர் பார்த்தார். 

நானும் அவரைப் பார்த்தேன்.  

அவரது பார்வை என்னை எடைப் போட்டது. 

பிறகு, அருகில் வந்து ஒரு வெட்கம் கலந்த சிரிப்புடன் தலையாட்டியவர், என்னை அவரது கடைக்குள் அழைத்தார். 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பரவா இல்லை என்பது போல பதிலுக்கு தலையாட்டி சைக்கிளை விட்டு இறங்கி, எதிரே இருந்த அண்ணனின் கடை வாசலுக்கு சென்று சைக்கிளை நிறுத்தினேன். 

அண்ணன் என்னை பார்த்தார். 

யார் அவர்? கடைக்கு கூப்பிடுகிறார்? என்று அண்ணனிடம் கேள்வியை எழுப்பினேன். 

‘’அவர் பேரு ராமையாத் தேவர். அவரது தம்பி மகளை உனக்கு கேட்டிருக்கேன். உன்னைப் பாக்கணும்னு சொன்னார். அதான்...’’ என்று அண்ணன் முடிப்பதற்குள் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘’நடு ரோட்டில் வைத்தா மாப்பிளைப் பார்ப்பார்கள். அதுவும் இந்த அழுக்கு லுங்கி, கசங்கிய சட்டையோட’’ என்று அண்ணனிடம் கேட்டுக் கொண்டிருந்த போது, அண்ணன் எழுந்து நின்றார்.

திரும்பிப் பார்த்தால், அருகே வந்து நின்ற அவர், ‘’பொண்ணைப் பார்ப்பது என்றால், நாளைக்கே வந்து பாருங்கள். நல்ல நாள்தான். என்று அண்ணனிடம் சொல்லியபடி, மீண்டும் என் முகத்தைப் பார்த்தார்.

அவருக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்தார். 
ட்
 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
 

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...