கிராமத்தில் தங்கி விவசாய வேலை செய்து கொண்டு, வீடு
கட்டும் வேலையிலும் இருந்ததால், எனக்கு பெண் தருவதற்கு சிலர் பேசி
இருக்கிறார்கள். அதில் வேப்பஞ்சேரி முருகேசன் மாமா,
தேவதானம் கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் பற்றி அண்ணனிடம் சொல்லி இருக்கிறார்.
அதுப் பற்றி என்னிடமும் தனியாக அழைத்து தெரிவித்தார்.
தங்கை திருமணம் முதலில் நடக்கட்டும். அதன் பிறகு நான் சினிமாவுக்கு சென்று
படம் இயக்கி வந்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்பதை தெரிவித்து, எனது தந்தை வழி உறவில் எனக்கு பெண் தருவதாக சொல்லி இருக்கிறார்கள்
என்பதையும் அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர், ‘’உனக்கு அந்த விஷயமே தெரியாதா?. நீ சினிமா சினிமான்னு ஓடுவதால் அந்த பொண்ணை உனக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
உங்க சித்தப்பார் மகன் முருகேசனுக்கு அந்தப் பெண்ணை கொடுக்க விரும்புகிறார்கள். அதனால், உனக்கு வேறு வரன் பார்க்கிறார் உங்க அண்ணன்’’
என்று பதில் சொன்னார்.
அந்த வார்த்தைகளை கேட்டதும் எனக்கு பெரிய அதிர்ச்சி. என் நெஞ்சை பிடுங்கி
வெளியே வீசியது போல இருந்தது. அவரிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து
புறப்பட்டேன்.
பக்கத்து கிராமத்தை சேர்ந்த என் தந்தை வழி உறவில் பிறந்திருந்தால் ‘அவள்’. பார்க்க செக்க
செவேல்ன்னு குள்ளமாக இருந்தாள். சிறு வயதில் என்னோடுதான் விளையாடுவாள். பள்ளிக்கு
விடுமுறை விட்டால் ‘அவள்’
வீட்டில்தான் நான் இருப்பேன்.
எங்க வீட்டுக்கும் அவளை அழைத்து வந்திருக்கிறேன். ஆற்றை கடக்கும் போது அவளை
உப்பு மூட்டை சுமந்து வந்திருக்கிறேன். பல வருடம் பாசமாக பழகி இருக்கிறேன். சிறு
வயதில் பார்த்த அவள் முகம் நினைவில் இருந்தது. பெரியவள் ஆன பிறகு எப்படி இருப்பாள்
என்று கூட எனக்கு தெரியாது.
முதலில் ஊருக்கு வந்து போது, அவளை திருமணம் செய்ய
வேண்டும் என்பதை மனதில் வைத்து, என்னை சென்னைக்கு செல்ல கூடாது என்று
தடுத்தார் அண்ணன்.
சித்தப்பா வீட்டில் பல முறை அவர்களிடம் சென்று பொண்ணு கேட்டதற்கு, நீ எப்படியாவது எங்கே இருந்தாவது வந்து விடுவே என்று அவள் வீட்டில் பதில்
சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. நீ நல்லபடியாக வந்து விட்டாய்.
அதனால், அவளை திருமணம் செய்து முடிக்கும் வரை நீ இங்குதான்
இருக்க வேண்டும் என்று என் தங்கை பிடிவாதமாக எடுத்துச் சொன்னார்.
எனது ஊரைச் சேர்ந்த வாத்தியாரைப் பார்த்த போது,
அவரும் அப்படித்தான் சொன்னார்.
என் வகுப்பில் மாணவியாக இருந்தாள். அப்போது ஒவ்வொரு மாணவியையும் அடுத்து
என்ன படிக்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக பதில்
சொன்னார்கள். ஆனால், ‘அவள்’ பத்தாவதுக்கு மேல படிக்க
மாட்டேன் என்று சொன்னாள். ஏன் என்று கேட்டதற்கு, நீ
பத்தாவதுக்கு மேல படிக்கவில்லை என்று, அவளும்
படிக்க மாட்டேன் என்று சொன்னாள். அவளது பதிலைக் கேட்டு மற்ற மாணவ மாணவிகளும்
சிரித்தார்கள் என்று வேடிக்கையாக சொன்னார், அவர்.
என்னையும் ஒருத்தி நினைக்கிறாளா? என்னால் நம்ப
முடியவில்லை?!.
சிறு வயதில் அவளது தாய் வழி உறவினர் வீட்டுக்கு அவள் விருந்தினராக செல்லும்
போது, அவளுடைய மாமன் மகன் அவளை அடித்து விட்டால், ‘’எங்க பாலு புள்ளைக்கிட்டா சொல்லி... திருப்பி அடிக்க சொல்வேன்’’ என்று சொல்வாளாம்.
‘’நீ
கட்டிக்கப் போறவன்தானே அடிக்கிறான்’’ என்று அவளது மாமி முறை
உள்ளவர் கேட்டதற்கு, ‘’நான் பாலு புள்ளையைத்தான் கட்டிக்குவேன்’’ என்று சொல்லி அழுது அடம்பிடிப்பாளாம்.
அதெல்லாம் அப்போது கேள்விப்பட்டது.
ஒரு முறை அவளுடைய அக்காள் கணவனிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘’என்ன தம்பி... நீதான் எனக்கு சகளப்பாடியா வரப் போறியாமே’’ என்று சாடை மாடையாக கேட்டார்.
மறுபடியும் எங்கேயும் போகாமல் ஊரோடு இருங்கள் என்று சொல்லி ஒரு வெட்கம்
கலந்த சிரிப்பை உதிர்த்தார் அவளுடைய தந்தை.
இப்படி பலருடைய எண்ணமும் வெளிப்பாடும், ’அவள்’ எனக்குத்தான் சொந்தம் என்று மனதிற்குள் விழுந்தாள்.
சினிமாவில் வெற்றிப் பெற்றதும், ஒரு வெற்றியாளனாக வந்து அவளை
வெகு விமரிசையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் கனவு.
எனது சித்தப்பா மகள் கௌசல்யாவின் திருமண ஆல்பத்தில் சிறுமியாக இருந்தாள் ’அவள்’. அந்தப் போட்டோவை
பிய்த்து எடுத்து மனிபார்சில் வைத்துக் கொண்டேன்.
சமோசா கம்பெனியில் இருந்த போதும், சென்னையில் பட வேலையாக
இருந்த போதும் அவள் போட்டோவை பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்தது கிடையாது. ஒரு
நாளைக்கு நாலைந்து முறைப் பார்த்து சிரித்துக் கொள்வேன். தனியாக இருக்கும் போது
அந்த நிழற் படத்தோடு பேசிக் கொண்டிருப்பேன். இவளை திருமணம் செய்து கொள்ளும் போது
நான் வசந்த காலத்தில் இருப்பேன் என்று நம்பியிருந்தேன்.
இப்படி ஓராண்டுக்கும் மேலாக மனதில் கலந்து என் சிந்தனையில் வாழ்ந்து
கொண்டிருந்தவள், எனக்கு இல்லை என்றதும் அதிர்ச்சியாகமல் எப்படி
இருக்க முடியும்?
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment