Friday, August 21, 2015

41.தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், நானும் – ஜி. பாலன்

தலைவர்.கே.ஆர்.ஜி.. 
பிலிம் சேம்பர் வளாகத்தின் பின்புறம் அமைந்திருந்த ஒரு பழைய கட்டிடத்தில், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சேப் யூனியன் ஆகிய சங்கங்களின் அலுவலகங்கள் வரிசையாக இருந்தன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளே, தலைவர் அமர்வதற்கு ஒரு மேஜை நாற்காலியும், ஒரு மடக்கு சோபாவும், மேனேஜருக்கு ஒரு மேஜை, நாற்காலி மட்டுமே இருந்தன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி. அவர்கள் வெற்றி பெற்றதும், அவருடன் பொருளாளராக பதவிக்கு வந்திருந்த மறைந்த தரங்கை சண்முகம் அவர்கள், தனது சொந்த செலவில் அலுவலகத்தை வெள்ளை அடித்து, வவுச்சர் மற்றும் ரசீது புத்தகங்களை அச்சடித்து கொடுத்திருந்தார்.

செயலாளருக்கு ஒரு மேஜை நாற்காலியும், செயற்குழு கூட்டம் நடத்த வசதியாக இருபத்தி நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகளும் அப்போது புதிதாக வாங்கப்பட்டன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி. பதவிக்கு வந்த போது, அவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்காக எனது குருநாதர் டைமண்ட் பாபு சங்க அலுவலகத்திற்கு செல்வார். அவருடன் நானும் சென்று வருவேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து மறுநாள் செய்தி வெளிவந்த பத்திரிகைகளை எடுத்துச் சென்று கே.ஆர்.ஜியிடம் காண்பித்து வரவேண்டும். அப்படித்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் எனக்குமான தொடர்பு இருந்தது.

கே.ஆர்.ஜி. பற்றிய செய்தி வந்த ஒரு ஆங்கில வார இதழை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் சென்ற போது, திரு.டைமண்ட் பாபு அவர்களை உடனே தொலைபேசியில் அழைக்க சொன்னார் கே.ஆர்.ஜி
.
மும்பை மற்றும் டில்லியில் ராஜமுத்திரை படத்தின் படப்பிடிப்புக்காக லொக்கேஷன் அனுமதி பெற டைமண்ட் பாபு அவர்கள் சென்று இருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.

தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டமும், அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்த முடிவு செய்திருந்தார் கே.ஆர்.ஜி.
சிறிது நேரம் யோசித்தவர், ‘பத்திரிகையாளர் கூட்டத்திற்கு நீ ஏற்பாடு செய் என்று கட்டளையிட்டார்.

குருநாதர் இல்லாமல் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்வதா?: என்று  தயங்கினேன். ஆனால் கே.ஆர்.ஜி. வார்த்தைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதால், மறுக்க முடியாமல் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன்.

பத்திரிகையாளர் கூட்டம் சிறப்பாக நடந்தது. மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியானது. அந்த பத்திரிகை செய்திகளை எடுத்து கொண்டு திரு.கே.ஆர்.ஜியிடம் காண்பிப்பதற்காக சென்ற போது, அவர் அத்தனை பத்திரிகைகளையும் ஆர்வத்துடன் பார்த்தார். எனது வேலையை பாராட்டினார்.

நான் டைமண்ட் பாபுவிடம் எத்தனை ஆண்டுகளாக உதவியாளராக வேலை செய்கிறேன் என்பதை கேட்டறிந்தவர், பிறகு என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் வருமானம் குறித்தும் விசாரித்தார்.

காலையில் இருந்து இரவு வரை நேரம் காலம் பார்க்காமல் சங்கத்துக்கும், உறுப்பினர்களுக்கும் விசுவாசமாக வேலை செய்ய ஒரு ஆள் தேவை. நீ என் கூட இங்கே இரு. நான் டைமண்ட் பாபுவிடம் சொல்லி அவருக்கு வேறு உதவியாளர் வைத்துக்கொள்ள சொல்கிறேன் என்று கூறினார்

அருகில் இருந்த மேனேஜர் சீனிவாசன், செயலாளர் டி.என்.ஜானகிராமன் ஆகியோரிடம் ‘’இன்னையிலிருர்ந்து சங்கத்துக்கு மக்கள் தொடர்பாளராக பாலனை நியமித்திருக்கிறேன். அவனிடம் கடிதம் வாங்கி கொண்டு வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றவர், என்னைப் பார்த்து, ‘’உனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நாளை முதல் அந்த வேலைகளை செய்ய வேண்டும்’’  என்று கூறினார்.

பிலிம் சேம்பர் அளவுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்காக படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களை தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

செயற்குழு கூட்ட அழைப்பு கடிதத்தை நேரில் சென்று நிர்வாக குழு, மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். கூட்டம் நடக்கும் போது அங்கு பேசப்படும், விவாதிக்கப்படும் நடவடிக்கைகளை குறிப்பெடுத்து புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். முக்கிய தீர்மானங்களை உடனடியாக சுற்றறிக்கை மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தல், திரைப்பட சம்பந்தமான துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களை உறுப்பினரிடம் இருந்து பெற்று செயற்குழு உறுப்பினர்களுக்கு நேரில் கொண்டு சேர்த்தல் உட்பட பல வேலைகளை செய்ய எனக்கு உத்தரவிட்டார்.

இப்படித்தான் 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நான் வேலைக்கு சேர்ந்தேன்.
அன்று மாலை ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பில் எனக்கு மகன் பிறந்த தகவலை அண்ணன் தெரிவித்தார். 


(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...