Thursday, August 6, 2015

26. அவள் மீது மரியாதை கூடியது? - ஜி.பாலன்



என் உறவுக்கார பெண் மனதில் வாழ்ந்து கொண்டிருந்தாள். மறக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலன் இல்லை. அதற்கு காரணம் என் சித்தப்பார் மகன். 

அவனுக்கு அவளை திருமணம் செய்து கொடுத்தால், அவள் முன்னே ஊருக்குள் நான் வாழ முடியுமா? என்று கேள்விகள் மனதை தொலைத்தெடுத்தன. 

வசதிக்காக நான் வாழ்க்கைப்பட்டிருக்கிறேன். நீ ஒண்ணும் இல்லாதவன் என்று என்னைப் பார்த்து அவள் ஏளனம் செய்வது போல கற்பனை குதிரைகள் பறந்தன.

விரைந்து தங்கை திருமணத்தை முடிக்க வேண்டும். அவள் மருமகளாக கிராமத்திற்கு வருவதற்குள் ஊரைவிட்டு சென்றுவிட வேண்டும் என்கிற மனப் போராட்டத்தில் இருந்தேன். 

அந்த நேரத்தில்தான் என் சித்தப்பா மகனுக்கும், அவனுடைய மாமன் மகளுக்கும் திருமணம் செய்வது என்று பேசப்பட்டது. அதனால், அவள் சிந்தனையில் இருந்து அவன் எனக்கு விடுதலை தரப் போகிறான் என்று ஆறுதலாக இருந்தது.

அவன் வேறு ரூட்டைப் பிடித்து சென்றாலும், மறுபடியும் எனக்கு பெண் தருகிறேன் என்று அவளுடைய குடும்பத்தார் வந்தால்

மீண்டும் குழப்பம். 

வயலில் கதிர் அறுக்கும் போது இடுப்பு வலியால் நிமிர்ந்து நின்றேன். அப்போது தூரத்தில் ஒரு பெண் கையில் தூக்கு வாலியுடன் சென்று கொண்டிருந்தாள். யாராக இருக்கும் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

பக்கத்தில் கதிர் அறுத்துக் கொண்டிருந்த எனது அண்ணி முறையுள்ள பெண்மணி, அவள் செல்வதையும், நான் கவனிப்பதையும் பார்த்துவிட்டு கிண்டலாக ‘’என்ன தம்பி என் தங்கச்சி போறதயே பாக்குறீங்க? என்று கேட்டார். 

அவரைத் திரும்பிப் பார்த்து, ‘’உங்க தங்கையா?’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். 

தனது சித்தப்பா மகள் என்றும், சரியான உழைப்பாளி என்றும் அவரைப் பற்றிய பெருமையாக சொன்னார் அண்ணி.  

எனக்குள் ஏனோ அந்தப் பெண் மீது மரியாதை கூடியது. 

சிறு வயதில் அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். மூக்கு ஒழுகியபடி அரைப் பாவாடையுடன் ஞாபகத்திற்கு வந்தாள். 

எங்களில் பெரும்பாலும் பெண் பெரியவள் ஆனதும் தலைக்கு தண்ணிஊத்திசடங்கு கழித்த பிறகு வெளியே அனுப்ப மாட்டார்கள். 

அப்படி மீறி சென்றால், சமஞ்ச கொமரின்னாபேயி‌, பிசாசெல்லாம் அவளை பிடித்துக் கொள்ளும். துணைஇல்லாமால் அவள் எங்கும் செல்லக் கூடாது என்று பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.

அதே போல ஆண்களை பார்க்க கூடாது. பார்த்தாலும்படக்குன்னு ஒதுங்கிவிட வேண்டும். அவர்களிடம் பேசக் கூடாது. அப்படி பேசி சிரித்தாள் வாழ்க்கை சிரிப்பாசிரிச்சு போயிடும்என்று மிரட்டி வைத்திருந்தார்கள். 

அப்படிப் பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் சாதியில் இருந்து வேலைக்கு ஒரு பெண் செல்கிறாள் என்றால்? பாராட்டாமல் இருக்க முடியுமா?. 

அவளை மனதாரா பாராட்டினேன். 

சாப்பிடும் போது, ‘’அவளை திருமணம் செய்து கொள்ளுங்களேன் தம்பி’’ என்று விளையாட்டாக சொன்னார், அண்ணி. 

நான் வெற்றிப் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன். அதுவரை திருமணத்தைப் பற்றி நினைக்கவே மாட்டேன் என்று வசனம் பேசினேன். 

நீங்கள் ஜெயிப்பதற்கு அவள் உதவியாக இருப்பாள் என்று ஆலோசனையை அண்ணி கூறினார். இவருக்கும் எப்படியோ என் தலையில் அவளை கட்டி வைக்க வேண்டும் என்று எண்ணம் பிறந்து விட்டது. 

அந்தப் பேச்சில் இருந்து விடுபட்டு வேறு பேச்சு வேறு பேசலாம் என்றால் அண்ணி விடுவதாக இல்லை. 

எனது தங்கை திருமணம் தான் முக்கியம் என்று நான் முடிவாக சொல்லிவிட்டேன். அதற்கு அவர், நீங்கள் அவளை திருமணம் செய்து கொள்ளுங்கள் அவளுடைய அண்ணன் உங்கள் தங்கையை திருமணம் செய்து கொள்வான் என்று ‘’பெண் கொடுத்து பெண் எடுக்கும்’’ ஆலோசனை கூறினார். 

என் தங்கைக்கு வரதட்சனையாக என்னையே கொடுக்க வேண்டுமா? என்பது போல கேள்விகள் மனதில் எழுந்தாலும், அது நல்ல ஆலோசனையாகவும் இருந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. 

மறுநாள் அவளிடம் இருந்து பதில் கொண்டு வந்திருந்தாள் அண்ணி. 

என்னை அவளுக்கு பிடித்திருக்கிறது. அதனால் என்னை அவள் திருமணம் செய்து கொள்ள தயார். அவளுடைய அண்ணன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான். அதனால், தன்னிடம் இருக்கும் நகைகளை கொடுத்து உங்கள் தங்கையை திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறாள். 
.
திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு அழைத்துக் கொண்டாலும் செல்கிறேன். இல்லை கிராமத்தில் இருக்கச் சொன்னாலும் இருக்கிறேன். அவருடைய சினிமா கனவுகளுக்கு துணையாக இருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறாள்.  
  
எனக்கு அவள் மீது மரியாதை மேலும் மேலும் கூடியது. அவளைப் நேரில் பார்த்து பேச ஆசைப்பட்டேன். அதுப் பற்றி அண்ணியிடம் கேட்டேன். 

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
 

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...