Monday, August 10, 2015

30. பத்திரிகையில் சாதி பெயர் வேண்டாம்? - ஜி.பாலன்



திருமண அழைப்பிதழ்
திருமணத்திற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. அண்ணன் அமைதியாக இருந்தார். நான் வீடு கட்டி முடிக்கும் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். 

பக்கிரிசாமி மாமா ஒரு நாள் அழைத்து, திருமண மணடபத்திற்கு முன்பணம் கொடுத்தாகிவிட்டது. மப்பிள்ளைக்கு சட்டை தைப்பதற்கு அளவு வேண்டும், இரு வீட்டாரும் அழைப்பது போல பத்திரிக்கை அடிக்க வேண்டும் என்றார்கள். நீங்கள் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்? என்று  விசாரித்தார்.

நிகழ்ச்சி நிரல்
அண்ணன் அமைதியாக இருந்தார். பிறகு என்னிடம் கேட்டார். அண்ணன் என்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு  நான் விலகிக் கொள்ள முயற்சித்தேன். 

அவர் விடவில்லை. ’’பெரியார் கட்சிக்காரர்களை வைத்து சுயமரியாதை திருமணம் நடத்தனும்னு சொன்னியாமே?’’ என்று என்னிடம் கேட்டார்.

’’என்னுடைய திருமணம் அப்படி நடக்கனும்னு ஆசைப்படுகிறேன். அண்ணனுக்கு விருப்பம் இல்லை என்றால், அவர் விருப்பபடி செய்யட்டும்’’ என்று சொல்லி அவரைப் பார்த்தேன்.

எங்க வீட்டுக்கு நான் பெரிய மனுஷன். நான் சொல்வதைத்தான் அவன் கேட்கனும். அவன் முடிவு செய்தால் நான் எதற்கு’’ என்று கோபப்பட்டவர், பிறகு, ’’உரிமையாகத்தானே கேட்கிறேன்’’ என்று மாமா சொன்னதும் அமைதியானார்.

’’பத்திரிகை அடிக்கிற விஷயத்தில் அவன் யாரை அழைக்கிறானோ, அப்படியே செய்யட்டும். பெண் வீட்டார் சார்பில் நாடிமுத்து அத்தானை கலந்து ஆலோசித்து, செய்யச் சொல்லுங்கள்’’ என்றார். 

காலை டிபன், மதியம் சாப்பாடு. இரண்டுக்கும் என்னென்ன செய்யச் சொல்லலாம் என்று கேட்டதற்கு, ஒரு வேலை டிபன் கொடுத்தாலும் குறையில்லாமல் செய்ய வேண்டும், ரசத்தில் உப்பு இல்லை. சாம்பார் தண்ணி மாதிரி இருந்தது என்று சொல்லக் கூடாது. 

அதனால், மாலை நேரத்து திருமணம் செய்யலாம். புரோட்டா, சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சட்ணி, சாம்பார், வடை, போண்டா, கேசரி, என ஒரு வேளை டிபன் வித்தியாசமாக கொடுக்கலாம் என்று ஆலோசனை கூறினேன். 

டிபன் கடையா வைக்கப் போறே?. சூரியன் உதிக்கிற நேரம் கல்யாணம் வைக்கணும்.  நீ மறைகிற நேரமாக வைக்க சொல்கிறாயே? என்று கடுகடுத்தார் மாமா

’’மாலை நேரம் என்றால் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு எல்லோரும் விழாவில் கலந்து ஏதுவாக இருக்கும். அதனால், சொன்னேன்’’ என்று விளக்கம் கூறினேன். 

’’அவன் கிட்ட எதற்கு இதெல்லாம் கேட்கிறீங்க… ‘’ என்று முடித்துக் கொண்டார் அண்ணன்.

பெண்ணின் பெரியப்பாவிடம், இதுப் பற்றி கலந்து பேசிய போது, அவருக்கு நான் சொன்னது சரி என்று தோன்றியிருக்கிறது. அவரும் இதற்கு சம்மதிக்க, வே மாலை நேர திருமணம், அதே போல டிபன் என்று முடிவானது. 

எங்கள் பகுதில் மாலை நேரத்து திருமணத்தை நான் தான் முதலில் துவக்கி வைத்தேன். இப்போது பல திருமணங்கள் மாலை நேரத்தில் நடைபெறுகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சியே!.

பெண்ணின் பெரியப்பா மகன் நாடி முத்துவிடம் பத்திரிகை சம்பந்தமாக பேசும் போது, நீங்கள் தனியாக பத்திரிகை அடித்தால், உங்கள் விருப்படி சாதிப் பெயர் போடாமல், செய்யலாம். இரு வீட்டரும் சேர்ந்து பத்திரிகை அடிக்கும் போது, சாதி பெயர் போடாமல் அப்படி அடிக்க முடியாது. 

எனது தந்தை எங்களுடைய ஊரில் பெரிய மிராசுதாரார்.  சுத்துப்பட்டு எல்லா கிராமத்திலும் மீன் பிடிக்க குளம் குத்தகைக்கு எடுப்பார். அதனால், அவரை எல்லோருக்கும், ராமைய்யாத் தேவர்,  ஆர்.ஆர்.தேவர் என்றுதான் தெரியும். நீங்கள் மொட்டையாக ராமையன் என்று பத்திரிகையில் போட்டால், இவர்தான் என்று பலருக்கு தெரியாமல் போய்விடும். அதனால், அவர் பெயரை ராமையாத் தேவர் என்றே பிரசுரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நான் விரும்புகிறேன் என்று, மற்றவர்களிடம் தெரிவிக்கலாமே தவிர, அவர்களிடம் என்னுடைய கருத்தை திணிக்க விரும்பாதவன். அதனால், எனது உறவினர்கள் பெயரின் பின்னால் சாதிப் பெயர் போடாமல் பத்திரிகை அடிக்க எழுதி கொடுத்தேன். 

பத்திரிக்கை வந்ததும் எனது அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. ’’அவர்தான் தேவர் என்றால், நாம் என்ன ஆளு?’’ என்று பத்திரிகையை தூக்கி விசிறி எறிந்தார். என்னை எல்லோரும் கலகக்காரணாகவே பார்த்தார்கள்.  

மப்பிள்ளை அழைப்புக்கு பெண் வீட்டார் வந்த போது, கருப்பு சட்டையுடன் நின்றேன் என்று தாண்டி தலை குப்புற விழுந்தார் பக்கிரிசாமி மாமா.

அவர்களுக்கு எல்லாம் கருப்பு என்றால் அப்படி ஒரு வெறுப்பு. எல்லாவற்றிலும் சகுனம் பார்த்தார்கள். இதற்கு எதிராக இருக்கிறேன் என்று கடிந்து கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் அப்படித்தானே கருப்பு சட்டையுடன் வளர்ந்தேன். திடீர் என கொள்கையை மற்றிக் கொள்ள முடியுமா என்ன?

பத்திரிக்கை கொடுக்க தூரத்தில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்ற போது, ஒவ்வொரு ஊராக அலைந்து, சிலர் வீட்டில் இரவு தங்கி, இப்படி மூன்று நாட்கள் ஊருக்கு திரும்பாமல் இருந்தேன்.

பெண் பிடிக்கவில்லை. பத்திரிகை பிரச்சனை என்று கோபத்தை காட்டியதால், நான் மீண்டும் சென்னைக்கு சென்றிருப்பேன் என்று கணக்கு போட்டார்கள். அதனால், கோவையில் இருந்த எனது தம்பி சிவாவை உடனடியாக ஊருக்கு வர வைத்து, அவனுக்கு திருமணத்தை நடத்திவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...