ஜி.பாலன் |
என் மனைவியின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்றாலும் அவர்களை மீறி
தங்கையின் திருமணத்திற்கு நகைகளை கொடுத்து உதவினாள் என் மனைவி தமிழ்செல்வி. மேலும்
அறுவடை வயலில் நாங்கள் இருவருமாக உழைத்து சம்பாதித்த பத்து மூட்டை நெல்லையும்
கொடுத்து உதவினாள்.
அண்ணன் சண்முகம் கொஞ்சம் பணம் திரட்டி திருமண ஏற்பாடுகளை கவனித்தார்.
எடையூரில் டீ கடை நடத்திக் கொண்டிருந்த தம்பி நமசிவாயம்,
வியாபாரம் சரி இல்லை என்று கடையை அக்காள் மகன் குமாரிடம் கொடுத்துவிட்டு, வேலைக்காக கோயம்புத்தூர் சென்றிருந்தான். அங்கு அவனுக்கு உடல் நிலை
சரியில்லாமல் போனதால், கொஞ்சம் பணம் கொடுத்து அவனை ஊருக்கு அழைத்து வர
ஆள் அனுப்பினோம்.
கோடை காலத்தில் வயல் வேலை நான்கு மாதம் இருக்காது என்பதால், திருத்துறைப்பூண்டி பஸ் ஸ்டாண்டில் என்னுடைய தென்பாதி பரஞ்சோதி மாமா
நடத்திய கூல் டிரிங்ஸ் கடையை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் திருமணம் செய்து கொண்ட எடையூர் வெங்கடாஜலபதி கோவில் திருமண
மண்டபத்திலேயே தங்கை திருமணமும் சிறப்பாக நடைபெற்றது. உறவினர்களும் ஊர்காரர்களும்
நண்பர்களும் வந்து கௌரவப் படுத்தினார்கள்.
கூல் டிரிங்ஸ் கடை வியாபாரம் சுமாராக இருந்ததால்,
கடையை விட்டுவிட முடிவு செய்தார் பரஞ்சோதி மாமா. அதனால்,
அவருடைய சின்ன மாமனார் சுப்பிரமணியம், அதே பஸ் ஸ்டாண்ட்
கட்டிடத்தில் நடத்திய பாம்பே ஸ்வீட் ஸ்டாலில் வேலைக்கு சேர்த்துவிட்டார். ஒரு
வாரம் பகல் டூட்டி. ஒரு வாரம் இரவு டூட்டி என்று நாட்கள் நகர்ந்தன.
நைட் டூட்டி என்றால் இரவு இரண்டு மணியில் இருந்து காலை நான்கு மணிவரை
வியாபாரம் இருக்காது. கடைத் தெரு கடைகளில் வேலை செய்கிற நாங்கள் அனைவரும் ஒரு
இடத்தில் கூடி கதைகளை பேசி அரட்டை அடிப்போம். அதில் எனக்கு நெருங்கிய நண்பன் ஆனான்
நீர்மூளை முத்து.
சினிமா உலகை தேர்ந்தெடுத்து சென்ற நான்,
மீண்டும் குடும்பம், வறுமை என கிராமத்தில் நான் மாட்டிக் கொண்டதை
அவனிடம் சொல்லி இருக்கிறேன். அதற்கு அவன், தங்கை
திருமணம் முடிந்து விட்டதால், உடனே திரையுலகிற்கு போக வேண்டியது தானே என்று
சிந்தனையை சிதறடிப்பான். அவனிடம் பேசுகிற ஒவ்வொரு நாளும் எனக்கு ஆறுதலாக இருக்கும்.
மனைவியோடு சென்னைக்கு சென்றால், வீட்டு வாடகை, குடும்பம் நடத்த செலவு என பெரிய வருமானம் தேவையாக இருக்கும். உதவியாளராக
வேலை செய்யும் போது அந்த அளவுக்கு வருமானம் கிடைக்காது. அதனால், அடமானத்தில் இருக்கும் நிலத்தை திருப்பி சாகுபடிக்கு என் மனைவியிடம்
ஒப்படைத்துவிட்டு சென்றால் பிரச்சனை இருக்காது. அதற்காக தான் கடைகளில் வேலை
செய்கிறேன் என்று அவனிடம் தெரிவித்திருந்தேன்.
இப்படி நாட்கள் சினிமா கனவுகளோடும் பேச்சுக்களுமாக நகர்ந்தன.
அந்த கடைக்கு கணேசன் என்கிற ரவுடி அடிக்கடி வந்து பணம் கேட்டு இம்சைக்
கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அடிக்க திட்டம் போட்டார் கடையின் முதலாளியான
சுப்பிரமணியம்.
அன்று எனக்கு இரவு டூட்டி. இன்று அவன் வந்தால் உடனே எனக்கு தகவல் கொடு
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அவர். அன்று இரவு அவன் வரவில்லை. மறுநாள் பகல்
டூட்டியும் சேர்த்து பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினேன்.
மறுநாள் பகல் டூட்டிக்கு வேலைக்கு வந்தேன். சுப்பிரமணியம் நடத்திய
பெட்டிக்கடை, ஸ்வீட் ஸ்டால், டீ
கடை என தார்பாய் போட்டு மூடிக் கிடந்தது. எனக்கு புரிந்துவிட்டது. ரவுடி கணேசனால்
ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று.
மாமூல் கேட்டு வந்த ரவுடி கணேசனை கத்தியால் குத்தியது காரணமாக முதலாளி
சுப்பிரமணியன் உட்பட கடையில் வேலை செய்த அனைவரையும் போலீஸ் கைது செய்துவிட்டனர். நாகப்பட்டினம்
மருத்துவமனையில் கணேசன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான் என்கிற தகவல்
கிடைத்தது.
பகல் டூட்டிக்கு சிப்ட்டு மாறியதால் இந்த பிரச்சனையில் இருந்து நீ தப்பித்துவிட்டாய்.
இல்லை என்றால், உன்னையும் உடைகளை உருவி ஜட்டியோடு அடித்து
பிணைத்து இழுத்து சென்றிருப்பார்கள் போலீஸ்காரர்கள் என்று நீர்மூளை முத்து கமெண்ட்
அடித்தான்.
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment