Wednesday, September 30, 2015

85. கரு.பழனியப்பன் இயக்கிய 'சதுரங்கம்'

இயக்குநர் கரு பழனியப்பன் 
அந்த காலத்தில் கைகளால் வரைந்து, படங்களை கத்தரித்தி வெட்டி ஒட்டும் அழகு சார்ந்த வசீகரமான வேலை அது. ஒரு படத்தின் டிசைனைப் பார்த்தால் அந்தப் படத்தின் லட்சணம் என்ன என்று தெரிந்துவிடும், என்பார்கள். அதைப் போல படத்தின் முகமாக முதலில் மக்களுக்கு தெரிவது இந்த டிசைன்தான்.

போலீஸ் கதை என்றால் சிவப்பு, கிராமம் என்றால் பச்சை, காதல் என்றால் நீலம் என்று எந்த கதைக்கு என்ன மாதிரி பின்னணி நிறத்தில் டிசைன் செய்வது என்று அவர்களுக்கு அத்துப்படி.

அப்படி ஏராளமான படங்களுக்கு டிசைன் செய்து புகழ் பெற்று அதில் டாக்டர் பட்டம் பெற்றவர் உபால்டு. இவரது அலுவலகத்தில் சென்று, அவர் மூலம் வாய்ப்பு பெற்று திரைத் துறைக்கு வந்தவர்கள் பலர். அதில் கவியரசு வைரமுத்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


செ.கண்ணப்பன், எஸ்.எஸ்.துரைராஜ்
அவருக்கு பிறகு, அவரது உதவியளர் மேக்ஸ், ஸ்ரீதர் என பலர் டிசைனர்களாக புகழ்ப் பெற்றார்கள். இதில் மேக்ஸ் எனது குருநாதர் டைமண்ட் பாபுவுக்கு நெருங்கிய நண்பர். டைமண்ட் பாபு நடத்தும் பல  விழாக்களுக்கு அவர்தான் டிசைன் வரைவார். அப்படி டைமண்ட் பாபுவுடன் அவரது அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று, மேக்ஸ் அலுவலமும் எனது  சொந்த அலுவலகம் போல ஆனது.

ஒரு சகோதரனைப் போல நலம் விசாரிப்பார் மேக்ஸ். ஆலோசனை சொல்வார். கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர். விஜயகாந்த் நடிக்கும் படங்கள், விஜய் நடிக்கும் படங்கள், ராஜ்கிரண் நடிக்கும் படங்கள், இராம.நாராயணன், வி.சேகர் இயக்கும் படங்கள் என பல முன்னணி பட நிறுவனங்கள், நடிகர்களின் படங்களுக்கு விளம்பர டிசைன்கள் செய்து கொடுத்து எப்போதும் பிஸியாக இருப்பார் மேக்ஸ்.

பல விளம்பர நிறுவனங்களும், லட்சுமன் ஸ்ருதி போன்று விழாக்கள் நடத்தும் அமைப்புகளும் அவரிடம்தான் டிசைன் செய்தனர். விளம்பரம் முதல், டிக்கெட், கார் பாஸ் வரை அனைத்தையும் மிகஅழகாக செய்து கொடுப்பார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் லோகோ வரைந்தது முதல், இப்பவும் திரையுலகம் சார்பில் நடக்கும் பல விழாக்களுக்கும் அவர்தான் டிசைன் வரைவார். நான் எழுதிய ஏழு புத்தகங்களுக்கும் அவர்தான் அட்டைப் படம் வரைந்து கொடுத்தார். அதற்காக எந்த உதவியும் பெற்றவர் கிடையாது. ஒரு தம்பியைப் போல அரவணைத்து செல்கிறவர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இருந்து வேலையை விட்டு நான் நின்றுவிட்டேன் என்பதை  அவரிடம் தெரிவித்தேன். அமைதியாக கேட்ட மேக்ஸ், பிறகு கண்டிப்புடன், ‘’பிள்ளைகள் படிப்பு, வாடகை, aசாப்பாட்டுக்கு வருமானத்திற்கு என்ன செய்யப் போறே’’ என்று உரிமையுடன் கேட்டார்.

அதைக் கேட்டுக் கொண்டே வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ், ‘’பாலனை விட்டுட்டுவோமா என்ன?’’ என்று பதில் சொல்லிக் கொண்டே நுழைந்தார்.

நான் எழுந்து நின்றேன். அவர் அமரச் சொன்னார்.

வீ.சேகர் இயக்கத்தில் பல வெற்றிப் படங்களை செ.கண்ணப்பனுடன் இணைந்து  திருவள்ளுவர் கலைக் கூடம் பட நிறுவனம் சார்பில் தயாரித்தவர், எஸ்.எஸ்.துரைராஜ்,

தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு அடிக்கடி வருவதால் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்.

வேலையைவிட்டு நின்றதற்கான காரணத்தை அவர் கேட்கவில்லை. இருந்தாலும் நான் அவரிடம் சொன்னேன்.

சங்கத்தில் தயாரிப்பாளர் ஒற்றுமையாக இருந்த போது நான் நல்லவனாக தெரிந்தேன். இப்போது தேர்தல் காரணமாக குழுவாக பிரிவதால், ஒரு பிரிவினருக்கு நான் கெட்டவனாக தெரிகிறேன். இதை கே.ஆர்.ஜியிடம் சென்று தெரிவித்தேன். அவர் பொறுமையாக இரு என்றார்.

ஆனால், கே.ஆர்.ஜி. தலைமையிலான அணியில் ராவுத்தர் தலைவராக போட்டியிட இருக்கிறார். அவருக்கு வாக்கு சேகரிக்க என்னை பயன் படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.  ஏதாவது ஒரு அணிக்கு எதிராக இருந்து செயல்படுவதைவிட, எல்லோருக்கும் நல்லவனாக வெளியேறுவதே மேல் என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் வேலையில் இருந்து விலகிவிட்டேன் என்று தெரிவித்தேன்.

சங்கத்தில் பார்த்தவரை உன்னுடைய வேலையில் எனக்கு முழு திருப்தி இருந்தது. அதனால், திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிக்கும் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக நீ வேலை செய்ய வா? என்று சொல்லி தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் அழைத்தார்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Tuesday, September 29, 2015

62. என் மீது கோபப்பட்ட கே.ஆர்.ஜி.யின் மனைவி - ஜி.பாலன்


தலைவர் கே.ஆர்.ஜி.

உன்னுடைய திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதுகிறேன் என்று அறிவித்துவிட்டு, கடந்த சில பகுதிகளில் தயாரிப்பாளர் சங்கம், கே.ஆர்.ஜி. பற்றிய அனுபவங்களை எழுதுகிறாயே என்று சிலர் கேட்கலாம்.

என்னைப் பொருத்தவரை நான் தயாரிப்பாளர் சங்கத்தையும், என்னையும் தனிதனியே பிரித்துப் பார்த்ததில்லை. வயிற்று பிழைப்புக்கான வேலை என்றாலும், அந்த வேலையை விரும்பி ஈடுபாட்டோடு செய்தேன். அதில் நிறைவு இருந்தது. இல்லை என்றால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்திருக்க முடியாது.

என்னுடைய நேர்மையான உழைப்பு சங்கத்திற்கு இருந்தது. தலைவருக்கும் சங்கத்திற்கும் உண்மையாக இருந்தேன். தலமைக்கு விசுவாசமாக வேலை செய்தேன். உறுப்பினர்கள் அனைவருக்கும் அது தெரியும். கே.ஆர்.ஜியிடம் பேசுவது என்றால் கூட, அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? அல்லது, கோபமாக இருக்கிறாரா? என்று என்னிடம் கேட்டு விசாரித்துத் தெரிந்து கொண்டு பல தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசுவார்கள்.

நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பொய் சொல்ல தெரியாது. ஏமாற்ற தெரியாது என்பதை என்னிடம் தெரிந்து கொண்டார் தலைவர் கே.ஆர்.ஜி..

அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மரியாதைக்குரியது.

என்னை ’கவுன்சிலின் பில்லர்’ என்றுதான் அழைப்பார்.

தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஒரு நாள் வேலைக்கார பையன் என்னிடம் சொன்னான்.

‘’அம்மா உங்கள் மீது கோபமாக இருக்கிறார்? என்று.

’’எதற்கு?’’ என்று கேட்டேன்.

’’அய்யா... சாப்பிடும் போது கூட... பாலா சாம்பார் ஊத்து என்று ....  உங்கள் பெயரைத்தான் சொல்கிறார். அம்மா பெயரை மறந்து விடுகிறார்.... ‘’ என்று சொன்னான்.

கே.ஆர்.ஜி. அவர்களின் துணைவியார் பெயர் சாந்தா. அவரை சாந்தா என்று அழைப்பதற்கு பதிலாக, பாலா என்று அழைத்தால்.... அவர் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும்?.

அந்த அளவிற்கு தலைவர் கே.ஆர்.ஜி.அவர்களின் கூப்பிட்டக் குரலுக்கு வேலை செய்பவனாக இருந்தேன். என் பெயரை அதிகம் உச்சரிக்கும் அளவிற்கு என் வேலை இருந்தது என்பதை இங்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

சங்கத்தின் செயலாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, “என்ன செயலாளர்... என்ன நடக்குது சங்கத்தில்’’ என்று கிண்டலாக கேட்பார். அவர் செயலாளர். என்னை செயலாளர் என்று அழைப்பார்.

அந்தளவுக்கு கே.ஆர்.ஜி. தலைவர் என்றால், அவர் சொன்ன வேலையை செயல் படுத்தும் வேலைக்காரனாக  நான் இருந்திருக்கிறேன்.

இந்த விசுவாசம், கே.ஆர்.ஜி. அவர்களை எதிர்க்கும் சிலருக்கு பிடிக்காமல் போனது. அதனால், என்னை சங்கத்தில் இருந்து வெளியேற்றினால், கே.ஆர்.ஜி.க்கு பாதி பலம் குறையும் என நினைத்தார்கள்.

இந்த நிலையில், தலைவரின் உத்தரவின் பேரில் அடுத்த தலைமைக்கு இப்ராஹிம் ராவுத்தரை நிற்க வைக்க, நான் நேரில் சென்று பேசி வந்த தகவல், அந்த குழுவுக்கு தெரிந்திருக்கிறது. அது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், பல தயாரிப்பாளர்களை நேரில் சென்று உறுப்பினராக சேர்த்தவன் என்பதால், வாக்கு சேகரிக்க நான் உதவியாக இருந்துவிடுவேன் என்கிற அச்சமும் அவர்களிடத்தில் இருந்தது.

அதனால், என்னை சங்கத்தில் இருந்து அனுப்ப, தீவிரம் காட்டினார்கள்.

பாலனை வேலையை விட்டு அனுப்புகிற வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரு விளம்பர ஸ்டண்ட் பார்ட்டி முன் வந்திருக்கிறது.

மறுநாளில் இருந்து அந்த விளம்பர பிரியர் என்னை அவமானப் படுத்துகிற காரியங்களை செய்தார். இதை அவருக்கு வேண்டிய பொறுப்புள்ள நண்பரிடம் தெரிவித்த போது, அவர்கள் கூடிய கூட்டத்தில் என்னைப் பற்றி பேசியதையும், அதில் எடுத்த முடிவின் படிதான் அப்படி நடந்து கொள்கிறார் என்றும், அதனால், ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுமாறும் எச்சரித்தார்.

குறை உள்ளவன் குற்றம் கண்டுபிடிப்பான். குறையே இல்லாத என்னை என்ன செய்ய முடியும்?. இருந்தாலும், அரசியல் என்று வரும் போது, இவர்கள் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!.

விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படம் வெளியாகி, அடுத்து அர்ஜுன் நடித்த ’சுதந்திரம்’ பட தயாரிப்பு வேலைகளில் பிசியாக இருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி.

அவரிடம் சென்று, என்னை அவர் நடத்திய விதத்தையும்,  என்னை உங்கள் ஆள், உங்களின் ஒற்றன் என்று நினைக்கிறார்கள். என்னை குறை சொல்லி அனுப்பவும் முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், நீங்கள் இல்லாமல் அங்கு என்னால் வேலை செய்ய முடியாது என்பதை தெரிவித்தேன்.

நான் இல்லை என்றாலும், எனக்கு பிறகு ராவுத்தர் தலைவராக இருப்பார். அவரை ஜெயிக்க வைப்போம். நீ உன் வேலையைப் பாரு என்று அமைதிப் படுத்தினார் தலைவர் கே.ஆர்.ஜி..

அதை அப்போது ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் நான் இல்லாமல் இருந்தேன். சங்கமே கோவில், நீங்களே கடவுள் என நினைத்து வேலை செய்தேன். இப்போது என்னை அவமானப் படுத்த நினைக்கும் சக்திகளுக்கு முன்பு நான் எப்படி வேலைப் பார்ப்பது. நிம்மதியாக என்னால் வேலை செய்ய முடியாது. அதே போல அவமானப்பட்டும் என்னால் வேலை செய்ய முடியாது. வேலையில் இருந்து நானே விலகிக் கொள்கிறேன் என்றேன்.

இதைக் கேட்டு, தலைவர் கே.ஆர்.ஜி. அதிர்ந்து போனார்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Friday, September 25, 2015

61. தலைவர் பதவிக்கு இப்ராஹிம் ராவுத்தர் சம்மதம் - ஜி.பாலன்

புலன் விசாரணை, கேப்டன் பிராபாகரன், என் ஆசை மச்சான், என ஏராளமான படங்களை தயாரித்தவர், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். 

விஜயகாந்தின் நண்பர். விஜயகந்தின் வெற்றிக்காக பல ஆண்டுகள் அவரோடு இணைந்து பயணித்தவர். கஷ்ட நஷ்ட காலங்களில் அவரோடு இருந்தவர். நட்புக்கு உதாரணமாக திகழ்ந்தவர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் திரு.கே.ஆர்.ஜி அவர்கள் தலைவராக இருந்த போது, அச்சங்கத்தின் கௌரவ ஆலோசராக இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர். ராவுத்தர் பிலிம்ஸ், சேரநாடு மூவி கிரியேஷன்ஸ், ஆண்டாள் அழகர் என சில பட நிறுவனங்களை உருவாக்கி பல படங்களை தயாரித்தவர்.

தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் ஒரு பதவியை வகிக்க கூடாது என்கிற சூழல் எழுந்த போது, சுயநலமின்றி தயாரிப்பாளர்களுக்கு சர்வீஸ் செய்ய எந்த தயாரிப்பாளர் சரியாக இருப்பார் என்று தலைவர் திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

தயாரிப்பாளர் சங்கத்தை பலமாக உருவாக்கிய அவர், அதற்கு சரியான தலமையை கொடுத்து செல்ல வேண்டும் என்கிற கவலையில் இருந்தார். பலரை எழுதிப் பார்த்து, கடைசியில் இப்ராஹிம் ராவுத்தரை முடிவு செய்திருக்கிறார். 

வெளியில் சென்றிருந்த நான் அப்போதுதான் அலுவலகத்தில் நூழைந்தேன். ’’பாலா இங்கே வா’’ என்று அழைத்த திரு. கே.ஆர்.ஜி. அவர்கள், என்னிடமும் அதனைப் பற்றி விவாதித்தார்.

கடைசியில் ’’ராவுத்தர் எப்படிடா’’ என்று கேட்டார். உங்கள் யோசனை சரியாக இருக்கும் முதலாளி என்று பதில் சொன்னேன்.

நாம் முடிவு செய்தால் மட்டும் போதாது. அவர் இந்தப் பதவியை ஒப்புக் கொள்ள வேண்டும். கடைசியில் மறுத்துவிட்டால் அந்த சமயத்தில் வேறு ஒருவரை திடீர் என முடிவு செய்ய முடியாது என்று அவரிடம் இதுப் பற்றி கேட்டு வர அனுப்பினார்.

நான் ராவுத்தரின் உதவியாளர், குமார் அண்ணன் அவர்களை தொடர்பு கொண்டு ‘’ராவுத்தர் சார் எங்கே இருக்கிறார்?’’ என்று விசாரித்தேன். ’’வீட்டில் இருந்து கிளம்புகிறார். நூறடி ரோடு அலுவலகம் செல்கிறார்’’ என்று தெரிவித்தார் குமார்.

நான் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு சென்றேன்.

’’வா... பாலா’’ என்று எழுந்து நின்று வரவேற்றார். அப்படி எழுந்து நின்று வரவேற்பது அவரது பண்பாடு. 

அவரிடம் கே.ஆர்.ஜி. அவர்களின் எண்ண ஓட்டங்களைச் சொன்னேன்.

தலைமை பதவி என்பது ரொம்ப முக்கியமான பொறுப்பு. கொஞ்சம் அசைந்தால் கூட தலையில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். அனைவரையும் அனுசரித்து அன்புகாட்டி அடக்கி வைக்கும் குணம் உள்ளவர்கள்தான், அந்தப் பதவியை வகிக்க முடியும். அது என்னால் முடியாது பாலா, என்று சொன்னவர், பிறகு, ’’அறக்கட்டளையில் என்னதான் பிரச்சனை’’ என்கிற கேள்வியை எழுப்பினார்.

அறக்கட்டளை உருவானது. அதற்கு திரு.கே.ஆர்.ஜி. திரு.கேயார், திரு.டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் அறங்காவலராக இருந்தது, பிறகு டி.ஆர்.ராமண்ணா மறைவுக்கு பிறகு, திரு.கே.பாலசந்தர் அவர்களை  செயற்குழுவில் தேர்வு செய்தது, நமக்கு இந்த பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டவர்கள் ஏமாந்து, குழு மனப்பான்மையோடு செயல்படுவது என அன்றைய உண்மை நிலவரத்தை சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டவர், பிறகு சிந்தித்தார். அரை மணி நேரத்திற்கு பிறகு, ’’தலைவரிடம் சென்று நான் சம்மதித்துவிட்டேன்’’ என்று நல்ல பதிலைச் சொல்லி அனுப்பி வைத்தார்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Thursday, September 24, 2015

60. ரஜினி பராட்டிய விஜய் படத்தின் பெயர்? - ஜி.பாலன்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க இருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி. அதற்காக ரவிக்குமாரிடமும் முன்பணம் கொடுத்திருந்தார்.

டூயட் படத்தின் தோல்வியால், கவிதாலாயா நிறுவனத்திற்கு உடனடியாக ஒரு படம் நடித்து தரவேண்டும் என்று ரஜினியிடம் கே.பாலசந்தர் கேட்டுக் கொண்டார். இதனால் ரஜினியை வைத்து கே.ஆர்.ஜி எடுக்க இருந்த படத்தின் முயற்சி தள்ளிப் போனது.

ஒரு நாள் கே.ஆர்.ஜியைப் பார்க்க, அவரது வீட்டுக்கு வந்திருந்தார் ரஜினி. கவிதாலாயா தயாரிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க வேண்டும். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி உருவானதுதான் முத்து படம்.

அதன் பிறகு பல முன்னணி தயாரிப்பாளர்கள் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டிருந்தனர். அதனால், யாருக்கு நடிப்பது என்று ரஜினி யோசித்திருக்க வேண்டும். அதனால், நாகராஜன் ராஜா நிர்வாக தயாரிப்பில் அருணாசலம் படத்தை தயாரித்து அதில் வரும் வருமானத்தில் சில தயாரிப்பாளர்களுக்கு உதவுவது என்று முடிவு செய்திருந்தார் ரஜினி.

அதனால், ரஜினி நடிக்கும் படத்தை அப்போது தயாரிக்க வாய்ப்பு இல்லாமல் போனது. ஏற்கனவே ரஜினி நடித்த ஜானி, துடிக்கும் கரங்கள் போன்ற படங்களை தயாரித்தவர் கே.ஆர்.ஜி.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசிக் கொண்டிருந்த தலைவர் கே.ஆர்.ஜி., விஜய் கால்ஷீட் விஷயமாகவும் அவரிடம் பேசினார்

அவரும் கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்டார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம், தேவா இசை என்று முடிவு செய்து, என்னை அழைத்து இவர்களது கூட்டணி எப்படி இருக்கும் என்று எதிர்ப்பார்ப்போடு கேட்டார், தலைவர் கே.ஆர்.ஜி.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ‘’நீங்கள் இப்பவே வெற்றிப் பெற்று விட்டீர்கள் முதலாளி’’ என்று அவரிடம் தெரிவித்தேன். அதைக் கேட்டதும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.

அதன் பிறகு கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்து பேசினார் கே.ஆர்.ஜி. அப்போது ரஜினி நடித்த படையப்பா படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற மின்சார கண்ணா பாடல் எடுத்துக் கொண்டிருந்த நேரம் என்பதால், விஜய் நடிக்க இருந்தப் படத்திற்கும் மின்சார கண்ணா என்று பெயர் வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

உடனடியாக மின்சார கண்ணா படப் பெயரை பதிவு செய்து டிசைன் செய்ய உத்தரவிட்டார் கே.ஆர்.ஜி.. டிசைன் தயாராகி வந்ததும் அதைப் பார்த்தவர், அதை உடனடியாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்று காட்டி வரச் சொன்னார்.

ஏவி.எம்.ஸ்டுடியோவில் உள்ள கார்டனில் படையப்பா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘’நீ மீசை வச்ச குழந்தையப்பா’’ என்கிற ஷாட்டில் வரும் குழந்தையின் முகத்தை படமாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த ஷாட் முடிந்ததும் அவரிடம் சென்று டிசைனை காட்டினேன். அதைப் பார்த்தவர், அருகில் இருந்த ரஜினியிடமும் காட்டினார். படக்கென்று எழுந்து டிசைனைப் பார்த்த ரஜினி, சூப்பர் சூப்பர் என்று பாராட்டினார். 

தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் மின்சார கண்ணா படத்தின் பிரமாண்ட துவக்க விழாவும், பிறகு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் படப்பிடிப்பும் துவங்கியது.

தினமும் காலை பதினொரு மணிக்கு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வரும் தலைவர் கே.ஆர்.ஜி., மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு செல்வார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் வரும் அவர், இரவு எட்டு மணி வரை சங்கத்தில் இருப்பார்.

இப்படி 1994 முதல் 1999 வரை ஆறு வருடங்கள் சங்கத்தின் வளர்சியிலும், முன்னேற்றத்திலும் முழு கவனம் செலுத்தியவர், இப்போது படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்த துவங்கியதால், இரண்டு வேலைகளையும் கவனிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

படத் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்த ஒரு குழுவை தேர்வு செய்தார் கே.ஆர்.ஜி. அந்த குழு அவருக்கு எதிரான ஒரு குழுவாக மாறும் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.


 (என் திரையுலக அனுபவங்கள் தொடரும்)

Wednesday, September 23, 2015

59. நட்சத்திர கிரிக்கெட் போட்டியும், கார்க்கில் நிவாரண நிதியும் – ஜி.பாலன்முதன் முறையாக நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்று மேயராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின். அவரை தமிழ்த் திரையுலகம் சார்பில் தலைவர் கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ஆர்.பி.சௌத்ரி, கே.முரளிதரன், ஏ.எல்.அழகப்பன் உட்பட பலர் ரிப்பன் மாளிகையில் நேரில் சென்று வாழ்த்தினார்கள். 

திரு.அபிராமி ராமநாதன் ரோட்டரி கிளப் தலைவராக இருந்த போது, போலியோ சொட்டு, மற்றும் மாநராட்சி பள்ளிகளுக்கு கணிணி வழங்க உதவும் வகையில் நிதி திரட்ட ஒரு நட்சத்திர கிரிகெட் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று விரும்பினார். 

எனது குருநாதர் டைமண்ட் பாபு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் கே.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு அந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். 

அப்போது கார்க்கில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால், ராணுவத்தினர்களுக்கு உதவும் வகையில் மதுரையில் ஒரு நட்சத்திர கலை நிகழ்ச்சியும், சென்னையில் நட்சத்திரங்களும், கிரிக்கெட்  வீரர்களும் கலந்துகொண்டு விளையாடும் கிரிக்கெட் போட்டியும் நடத்தி, தமிழ்த் திரையுலகம் சார்பில் பெரிய நிதி ஒன்றை வழங்குவது என்று முடிவானது.

நடிகர் சரத்குமார், அரவிந்தசாமி, நெப்போலியன், நடிகை ராதிகா உட்பட முக்கிய கலைஞர்கள் சிலர் முன்னின்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு எனது குருநாதர் டைமண்ட் பாபு தலைமையில் கண்ணதாசன், நெல்லை சுந்தர்ராஜன், சிங்காரவேலு, மௌனம் ரவி, ரியாஸ், விஜயமுரளி, பெரு.துளசி பழனிவேல், சங்கர் கணேஷ், வெட்டுவானம் சிவக்குமார், கணேஷ்குமார், மதுரைசெல்வம், ராமதாஸ், கோவிந்தராஜ், நான் உட்பட பலர் விழா அமைப்பாளர்களாக இருந்து வேலை செய்தோம். 

நட்சத்திரங்களை ரயிலில் மதுரைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்து, நிகழ்ச்சியில் பங்குபெற வைத்து, திரும்ப ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து அனுப்பி வைக்கும் வரை, உணவும், தங்கும் இடம், ரயில், பஸ் உதவி, என அனைத்து வேலைகளையும் கவணித்துக் கொண்டோம். 

அதே போல சென்னையில் நடந்த விழாவிலும் எங்களுடைய வேலை சிறப்பாக இருந்தது என பாராட்டினார் நடிகை ராதிகா. 

இந்த இரு நிகழ்ச்சிகளை சரத்குமார், ராதிகா இருவரும் முன்னின்று நடத்த பெரிதும் உதவியாக இருந்தார்கள். இந்த விழாவுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
(என் திரையுலக அனுபவங்கள் தொடரும்)

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...