Friday, July 31, 2015

21.கடும் உழைப்பால் புதிய வீடு உருவானது - ஜி.பாலன்



ஜி.பாலன்
தலையாரி தாத்தா வீட்டுக்கு அருகில் இருந்த அக்கா வீட்டில், அண்ணனும், அண்ணியும் குடி இருந்தார்கள். மங்கையகரசி பெரியம்மா வீட்டின் ஒரு அறையில் அம்மாவும், தங்கையும் தனியாக வசித்தார்கள். அதனால், தங்கை திருமணத்திற்கு முன் தனி வீடு தேவையாக இருந்தது

வடக்கு தெருவில் முன்பு வீடு இருந்த இடத்தில் புது வீடு கட்ட முடிவு செய்தேன். எனக்கு மூத்தவராக இருந்து, இறந்து போன எனது அக்காள் மலர்க்கொடி ஞாபகமாக, அந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண்டு தோறும் அவர் இறந்த நாளில் படையல் வைத்து சாமி கும்பிடுவதை வழக்கப்படுத்தி இருக்கிறார் என் அம்மா. 

எங்கள் குடும்பம் மட்டும் அல்லாது என் சித்தப்பா குடும்பத்தினரும் அவரை வணங்கி வருகிற இடமாக அது இருந்தது. இப்போது கூட எங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரி இல்லை என்றால் அவரை நினைத்து சாமி வரவழைத்து விபூதி போட்டால் குணமாகி விடும் என்கிற நம்பிக்கை அங்கு எல்லோரிடத்திலும் இருந்தது.

முன்பு வீடு இருந்த அந்த இடம் முழுவதும் காட்டுக் கருவை மரங்களும், செடி, கொடிகளும், பாம்பு புற்றுமாக காட்சி அளித்தது. புதிதாக இடம் வாங்கி அங்கு வீடு கட்டுகிற அளவுக்கு அப்போது பொருளாதாரம் இல்லாததால், அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டிய நிலை எனக்கு இருந்தது. 

ஆட்களை அழைத்து வந்து இடத்தை சுத்தம் செய்யச் சொன்னால், சாமி அடிச்சிடும் என்று பின் வாங்கினார்கள். எந்த சாமியும் காப்பாற்றதான் இருக்கிறதே தவிர, கெடுதல் செய்ய இருக்காது என்று அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். அவர்கள் நம்பவில்லை. ஒதுங்கினார்கள். 

கிராமத்தில் இருக்கும் போது கடவுள் பக்தி அதிகம் உள்ளவனாக இருந்தவன் நான். நகர் புறத்திற்கு வந்த பிறகு புத்தகங்கள் என் அறிவை மேம்படுத்த கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக மாறிப் போயிருந்தேன். 

எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் நம்புகிறார்கள். எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறதே?. அவர்களுக்கு ஏதாவது ஆனால் என்கிற அச்சம் அவர்களிடத்தில் இருந்தது. 

ஒரு நாள் காலை நானே சென்று அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். மரங்களை அடியோடு வெட்டி தள்ளிவிட்டு, புற்றை இடித்துக் கொண்டிருந்த போது என் அம்மா வந்து தடுத்து வேண்டாம் என்று அழுது புலம்பினார். 

தமிழன் காட்டிய வீட்டில் சிங்களன் குடியேறிய மாதிரி, கரையான் கட்டிய புற்றில் பாம்பு வந்து ரைட்சே இல்லாமல் குடியிருக்கிறது. இதுல என்ன தவறு இருக்கிறது என்று என் வேலையில் பின் வாங்காமல் இருந்தேன். 

ஒரே நாளில் இடம் சுத்தமானது. மறுநாள் மம்பட்டிக் கொண்டு இடத்தை சமப்படுத்தினேன். மறுநாள் மனை போடுவதற்கு கணபதி பண்டாரத்திடம் நாள் குறித்து வந்தார் அண்ணன். 

ஒரு அறை வைத்து வீடு கட்டினால், பிரதான வீட்டில் அண்ணன் குடும்பமும், அறையில் அம்மாவும் இருந்து கொள்வார்கள் என்பது என் திட்டம். ஆனால், எனக்கு திருமணம் செய்து வைத்தால் பிரதான வீட்டில் நானும், அறையில் அம்மாவும் இருப்பார் என்று அண்ணன் கணக்கு போட்டு, அறை வைத்து வீடு கட்ட ஒப்புக் கொண்டார். 

ஆரியலூர் செல்வராஜ் புரையரை அழைத்து வந்து மனை அளந்தார். நான் தெற்கு பக்கம் வாசல் வைத்து வீடு கட்ட நினைத்தேன். அண்ணனோ, மேற்கு பக்கம் வாசல் வைக்க மனை அளர்ந்தார். அதில் பிடிவாதகமாக இருந்தார். எல்லாம் ஜோசியம் செய்த வேலை.

மழை காலங்களில் மேற்கு பக்கத்தில் இருந்து சாரல் அடித்து வீடு திண்ணை வரை நாசமாகிவிடும் என்பதை முன்பு இருந்த வீட்டில் அனுபவித்திருக்கிறேன். அதை அனுபவ ரீதியாக உணர்ந்ததை செல்வராஜிடம் எடுத்துச் சொன்னேன். அதே போல மேற்கு பக்கம் பார்த்த மாதிரி வீடு கட்ட இட வசதியும் போதவில்லை. அதை அவரும் புரிந்து கொண்டார். 

பிறகு, தம்பி சொல்றபடி கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று அவரே அண்ணனிடம் புரிய வைத்து, பிறகு அண்ணன் சம்மதத்துடன் மனை அளந்தார். 

கீழ்த்தெரு ஜானகிராமன் அத்தானிடம் வண்டியும், மாடும் இரவல் கேட்டு, ஒரத்தூர் அத்தனை வண்டி ஓட்ட துணைக்கு வைத்துக் கொண்டு வாரியாக் கோட்டகம் வாய்க்காலில் இருந்து தினம் எட்டு வண்டி மண் கொண்டு வந்து சேர்த்தேன். ஐந்து நாட்களில் போதுமான மண் சேர்ந்தது.

தெற்கு தெரு கட்டையன் என்கிற மாரிமுத்துவை உதவிக்கு வைத்துக் கொண்டு ஐந்து படை சுவர் எழுப்பினேன். 

எட்டு வண்டி மண்ணையும் எப்படி கூடையில் சுமந்து வந்து வண்டியில் கொட்டினேனோ, அதே போல ஐயன் குளத்தில் இருந்து இரு தகர டின்களில் தண்ணீர் கொண்டு வந்து, ஊற்றி மண்ணை ஈரமாக்கி, குழைத்து, மிதி மிதி என மிதித்து, ஊறப் போட்டு, மறு நாள் சலிக்க தண்ணீர் தெளித்து கிண்டி, கிளறி மிதித்து வாங்கி விட்டு, மண்ணை சுவருக்கு தகுந்த மாதிரி பதப்படுத்தி, அதற்கும் அடுத்த நாள் மாரியப்பன் துணையோடு, சுவர் எழுப்பினேன்.

ஒவ்வொரு படையாக சுவர் எழும்பிய போது அதை காய விட்டு, மேலும் படை படையாக சுவர் எழுப்பியதை ரசித்து ரசித்து அந்த வீட்டைக் கட்டினேன். 

சுவரில் வெடிப்பு தெரிகிறதா என்று காலையில் எழுந்ததும் ஓடிச் சென்று பார்ப்பேன். இல்லை என்றதுக் பெருமை கொள்வேன். சுவற்றை தடவி தடவி முத்தம் கொடுப்பேன். என் உழைப்பை அதிகமாக வாங்கிக் கொண்டது அந்த வீடு. ஆரம்பத்தில் நான் வேலையை துவங்கினேன். பிறகு வீடு வேலை வாங்க ஆரம்பித்தது. 

அக்கா வீட்டு இடத்தில் இருந்த பூவரசு மரத்தை வெட்டி ஊறப் போட்டு உத்திரத்திற்கு ஏற்பாடு செய்தேன். 

வீடு கட்டும் நேரம் தவிர மற்ற நேரங்களில் விவசாய வேலைக்கு சென்று பணம் சேர்த்து, வீட்டு வேலைக்கு உதவியாக வைத்துக் கொண்டேன். வீடு பெரிதாக அமைந்து விட்டது. 

கூறைக்கு மூங்கிலும், பத்துக் கட்டுக்கும் மேல் தென்னை ஓலைகளும் தேவையாக இருந்தது. பணம் அதிகமாக தேவைப்பட்டத்து. தம்பி சிவாவிடம் சென்று வாங்கி வருவோம் என்று திருச்சங்கோடு ஓடினேன். 

முன்பு மாதிரி சமோசா வியாபாரம் இல்லை. கையில் பணம் இல்லை என்று கை விரித்துவிட்டான். சரி சீட்டு எடுத்துக் கொடு அதை வைத்து சமாளித்துக் கொள்கிறேன். பிறகு இன்னொரு சீட்டுப் போட்டு, நிலத்தை திருப்பிக் கொள்ளலாம் என்று சொன்னேன். 

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், சீட்டு பணத்தையும் தள்ளு போக எடுத்துதான் ஆட்களுக்கு சம்பளம் கொடுத்தேன் என்று சொல்லிவிட்டான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை?. எப்போது வீடு வேலை முடிவது?. நிலம் திருப்பி தங்கையை திருமணம் செய்து கொடுப்பது?, எப்போது சினிமாவுக்கு சென்று இயக்குநர் ஆவது? என்கிற பெரும் கவலையோடு ஊர் திரும்பினேன். 

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
 

Thursday, July 30, 2015

20. அண்ணன் அறைந்தார் - ஜி.பாலன்




அண்ணன் கோ.சண்முக சுந்தரம்
அண்ணனிடம் ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்த்து பேச முடிய வில்லை. என் வளர்ச்சியை தடுக்க அவர் நினைக்கவில்லை. ஆனால், ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அவர் நினைத்தார். 
 
சினிமாவுக்காக வாய்ப்பு தேடி ஐந்து ஆண்டுகள் அலைந்து தோல்வியோடு ஊருக்கு திரும்பிய அன்று நடந்ததை நினைத்து பார்த்தால் அவர் மீது பாசம் அதிகரிக்கத்தான் செய்கிறது. 

நான் ஊருக்குள் சென்ற போது வீட்டு வாசலில் வேலை செய்து கொண்டிருந்த மங்கையகரசி பெரியம்மாள், என்னை யாரோ என்பது போல பார்த்தார்.

‘’பெரியம்மா நல்லா இருக்கீங்களா... ‘’ என்று நான் விசாரித்தது அவரது காதுக்குள் கேட்கவில்லை. 

‘’யாருப்பா’’ என்று கேட்டார். 


‘’நான் தான் பெரியம்மா பாலு’’ என்று சொல்லியபடி அவரை கடந்து சென்றேன்.

‘’கேட்டுக்கிட்டே இருக்கேன். போறிய... யாரு’’ என்று திரும்ப சத்தமாக கேட்டார் பெரியம்மாள். 

அவரது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த என் தங்கை ராஜலட்சுமி, என்னைக் கண்டதும் ஆச்சர்யத்துடனும், வெம்பி வெடித்த அழுகையுடனும் ‘’அண்ணன் பெரியம்மா’’ என்று கத்தினாள்.
பெரியம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை சுத்தமாக மறந்துவிட்டார். 

‘’இவ்வளவு நாளும் எங்கே இருந்தீங்க’’ என்று உடைந்த குரலில் கேட்டபடி அழுதாள் தங்கை. 

பொங்கி வரும் உணர்வை, அழுகையை அடக்க முடியாமல் அதை மறைத்துக் கொண்டு தங்கையிடம் நலம் விசாரித்து, பிறகு திண்ணைக்கு சென்று பெஞ்சு மீது அமர்ந்தேன். பேரு மூச்சு விட்டேன். நெஞ்சு விம்மியது.

நான் வந்திருக்கும் தகவல் தெருவுக்குள் தீயாய் பரவியது. சில நிமிடங்களுக்குள் தெருவில் உள்ள பலர் என்னை பார்க்க வந்தார்கள்.  பொருட்க் காட்சியில் பார்ப்பது போல கூடி நின்று கூட்டமாக வேடிக்கைப் பார்த்தார்கள். 

வடக்குத் தெரு சென்றிருந்த என்னுடைய அம்மா, நான் வந்திருந்த செய்தி அறிந்து ஓடோடி வந்திருக்கிறார். மூச்சிறைக்க வந்து நின்று என்னைப் பார்த்தவர், ‘’வா பாலு’’ என்று உடைந்த குரலில் சொல்லியபடி கண்களில் இருந்து திரண்ட கண்ணீரை துடைத்தார்.

அவரால் பெரும் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் தாங்கிக் கொள்ள முடியாது. உடம்பில் தெம்பு இல்லாததால், ஒரு கட்டத்துக்கு மேல் வெட்டு வந்து (காக்க வலிப்பு வந்த மாதிரி) இழுத்துக் கொள்வார். அப்படித்தான் தரையில் மடாரென்று விழுந்தவர், இழுப்பு வந்து இழுத்துக் கொண்டிருந்தார். 

கையை காலை சிலர் பிடிக்க, தண்ணீர் கொண்டு வந்து அவருக்கு கொடுத்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு பெரிய ஏப்பம் ஒன்றை விட்டு சகஜ நிலைக்கு திரும்பினார் அம்மா. பார்க்க பரிதாபமாக இருந்தது. 

என்னைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அம்மாவுக்கு இப்படி இழுப்பு வந்துவிடுமாம். அங்கு நின்றவர்கள் சொன்ன போது எனக்குள் சொரேர் என்று இருந்தது. வேதனையுடன் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சைக்கிளில் வேகமாக வந்து இறங்கிய எனது அண்ணன், அதை நிறுத்தி ஸ்டாண்டு கூட போட முடியாமல், பதட்டத்தில் அப்பட்டியே விட்டு விட்டு என்னை நோக்கி விரைந்து வந்தவர், கன்னத்தில் பளார் பளார் என்று இரு  அறை விட்டார். 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

‘’ஏம்பா அடிக்கிறே... சண்முகம்.. சண்முகம்’’ என்று சிலர் கத்தினார்கள்.

பிறகு ஒரு ஓரமாக உட்கார்ந்து முகத்தில் கை வைத்து கதறி அழ ஆரம்பித்தார். 

அடி வாங்கிய நான் அமைதியாக இருந்தேன். அவரோ அழுது கொண்டிருந்தார். 

பொங்கல் பண்டிகை நாட்களில் பொங்கல் வைத்து சாமிக்கு வணங்கிவிட்டு, பிறகு சாப்பிட மனம் இல்லாமல், ‘’என் தம்பி சோத்துக்கு எங்க நிக்குறானோ’’ என்று என்னை நினைத்து வெம்பி வெடித்து அழுது விடுவாராம்.

அதனால், அனைவரும் சேர்ந்து அழுது, பொங்கல் வீடு எலவு வீடு போல ஆகி, நிம்மதியும், சந்தோஷமும் காணாமல் போய்விடுமாம். நான் போனதில் இருந்து ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை அவர்கள் நிம்மதியாக கொண்டாடியது இல்லையாம். 

அதை ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். 

என் தந்தை இறந்த பிறகு எங்களை அடிக்காமல் வளர்த்தவர். கோபத்தை கூட காட்டியதில்லை. அப்படி எங்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருப்பவர் என் அண்ணன். அவர் எனக்கு நல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறார். 

ஆனால், எனக்கு சினிமாதான் முக்கியம். திருமணம் என்கிற கட்டுக்குள் சென்றுவிட்டால், லட்சியத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்தேன்.
அவர் எனக்கு திருமணம் செய்து வைக்க, உறவுகளில் பெண் தேடிக் கொண்டிருந்தார். 

நான் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க, வீடு கட்டும் வேலையில் இறங்கினேன். 

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
 

Wednesday, July 29, 2015

19.சினிமாக்காரன் என்பதால் எனக்கு பெண் கொடுக்க மறுத்தார்கள் - ஜி.பாலன்



என்னுடை தந்தை வழி உறவினர் வீட்டில் எனக்கு பெண் தருவதாக சொன்னார்கள். அதனால், எனக்கு திருமணம் செய்து வைத்து… ஆண் வாரிசு இல்லாத அந்த வீட்டுக்கு, என்னை வீட்டோடு மாப்பிள்ளையாக அனுப்ப முடிவு செய்திருந்தார் அண்ணன். 

சினிமா சினிமா என்று சுற்றுகிறானே? காலில் ஒரு கட்டு போட்டு உட்கார வைத்தால், குடும்பம், குடித்தனம் என்று சினிமா சிந்தனையில் இருந்து விடுபட்டு விடுவான் என்று எண்ணினார் அவர்.

கிராமத்திற்கு முதலில் சென்ற போதே இந்த திருமண பேச்சை ஆரம்பித்திருக்கிறார். இப்போதுதானே மாப்பிள்ளை வாந்திருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாம் என்று பதில் சொல்லி இருக்கிறார் பெண்ணின் தந்தை.

தம்பிக்கு சமோசா கம்பெனி ஆரம்பித்த போது, அந்த பெண்ணின் தந்தையை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ’’எங்கேயும் சென்று விடாமல் இங்கேயே இருந்து தொழில் பாருங்கள்’’ என்று எனக்கு ஆலோசனை கூறினார்.
அந்த வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தங்கை திருமணத்தை முடித்துவிட்டு அதன் பிறகு எனது திருமணம் பெற்றி பேசலாம் என்று அண்ணனிடம் தெரிவித்திருந்தேன். 

மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்ததால், அவர்களுக்கு என் மீது நம்பிக்கை பறி போனது. சினிமா சினிமா என்று அலையும் இவனுக்கு பெண் கொடுத்து, தனது பெண்ணுடைய வாழ்க்கையை கெடுத்துவிடக் கூடாது என்று முடிவு செய்தார். அதனால் எனது சித்தப்பா மகனுக்கு அந்த பெண்னை திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடந்திருக்கிறார். 

இந்த தகவல் எனது அண்ணன் காதுக்கு வந்த போது அதிர்ந்து போனார். 

மனம் மாறியதால் அவர்கள் மீது கோபமும், என் மீது கடுங் கோபமும் கொண்டார். 

இது பற்றி எதுவும் தெரியாத நான், வழக்கம் போல பொங்கல் முடிந்ததும் சென்னைக்கு செல்ல தயாரானேன். 

நான் சென்னைக்கு செல்வதை தடுத்தார். ’’தங்கை திருமணம் முடிந்ததும், அதன் பிறகு உன் இஷ்டத்துக்கு எங்கு வேண்டுமானாலும் செல்’’ என்றார். 

சினிமாவுக்கு வெளியே நான்கு ஆண்டுகள் சுற்றிய போது தடுக்கவில்லை. இப்போது  மன்னன், அமரன், நாளைய செய்தி என பல படங்களுக்கு மக்கள் தொடர்பு உதவியாளராக வேலை செய்து வந்திருக்கிறேன். இப்போது தடுத்தால் எப்படி?. என் முயற்சியை தடுக்காதீர்கள் என்றேன்.

எப்படியும் சினிமா உலகில் இயக்குநர் ஆவேன். என் உழைப்புக்கு புகழும், பணமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கையை அவரிடம் கூறினேன்.

அவர் ஒத்துக் கொள்ளவில்லை. தங்கை திருமணத்தை காரணம் காட்டி தடுக்கவே செய்தார். உறவினர்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெந்தகத்திற்கு வைத்திருக்கும் நிலத்தை திருப்பி, தங்கைக்கு அதை எழுதி வைத்து சில்லறை நகைப் போட்டு திருமணம் செய்து கொடுத்துவிடாலம்  என்று, சமோசா கம்பெனி நடத்தும் திருச்சங்கோடு ஏரியாவில் ஒரு சீட்டு போட்டிருந்ததையும், அதை எடுத்து தங்கை திருமணத்தை  முடித்துவிடலாம் என்றும் தெரிவித்தேன். 

அப்படி என்றால் அதை முடித்துவிட்டு, சினிமா வேலைக்கு போ என்று பிடிவாதம் காட்டினார்.

அம்மா, தங்கை என எல்லோரும் அழுதனர். நான் திரும்பி வரமாட்டேன் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் அழுத்தமாக விழுந்திருக்கிறது.
அதனால், என்னுடைய முயற்சி அங்கு எடுபடவில்லை.  

என் சென்னை பயணம் அப்போது தள்ளி போனது

பெண் கொடுக்காத அவர்களுக்கு எதிரே, எனக்கு ஒரு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பது என்கிற முடிவில் இருந்திருக்கிறார், அண்ணன்.

தங்கை திருமணம், வீடு கட்டும் வேலை என இரு பெரிய சவால்கள் என் முன் இருந்தது.
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Tuesday, July 28, 2015

18.உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் வடபாதி ஜெயராமன் - ஜி.பாலன்


வடபாதி ஜெயராமன், காந்திமதி தம்பதியினர்
என்னுடைய வைரப்ப பெரியப்பாவுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் பிறந்தார்கள். வருமானத்தை பெருக்க பெரியப்பா அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுவார். அதனால், பிள்ளைகளை வளர்க்க பட்டு பெரியம்மாள் அதிகம் கஷ்டப்பட்டார். 
 
பெரியக்கா சிவஞானத்தை மிகுந்த சிரமத்திற்கிடையில் உறவினரான ஆதிரங்கம் ராமசாமி என்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். கணவனும் மனைவியுமாக இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார்கள். அதன் விளைவாக வளர்ச்சியும் முன்னேற்றமும் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்தது. 

அனைவருக்கும் பன்னீர் செல்வம், தமிழ்ச் செல்வம், தாமரைச் செல்வம், கலைச்செல்வம் என செல்வமாக பெயர் வைத்து, அவர்ளை படிக்க வைத்து நல்ல செல்வ வாழ்க்கைகையை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்களும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். 

அதே போல சின்ன அக்காள் காந்திமதிக்கு, பெரியக்காவே வரன் பார்த்து அருகில் உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்கிற பாட்டாளிக்கு திருமணம் செய்து வைத்தார். 

சின்ன அக்கா காந்திமதியும் அவரைப் போலவே பாடுபட்டு கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறினார். தனது கொழுந்தன் கணேசன், நாத்தினார் மகன் என பலரை வெளிநாடு அனுப்பி அவர்கள் சம்பாதிக்க உதவியாக இருந்தார். 

அக்காள் தங்கை உறவு விட்டுப் போகக் கூடாது என்று எங்களுடைய அகமுடைய இனத்தில் தாய் மாமன் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வது வழக்கம். 

அப்படி எதிர்ப்பார்து ஏமாந்து போனார் பெரிய அண்ணன் சிவராமன். அவரது மகள் ராணி, எங்க செல்லத்தை, அக்காள் தனது மகன்களில் ஒருவருக்கு எடுத்துக் கொள்வார் என நினைத்தார். 

ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க எந்த தாயுக்குத்தான் மனம் வரும். மூத்தமகனுக்கு எப்படி வசதியாக பெண் எடுத்தாரோ, அதற்கு குறைவில்லாமல் அனைத்து மகன்களுக்கும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.  

அதனால் ஏழையான எங்கள் குடும்பத்தில் அவர் பெண் எடுக்கவில்லை. பெரிய அக்கா பெண் எடுக்கவில்லை என்றால் என்ன? நான் இருக்கேன் என்று உதவ முன் வந்தார், சின்ன அக்காள் காந்திமதி. 

வெளிநாட்டில் இருந்து வந்த அவரது கொழுந்தன் கணேசனுக்கு, அண்ணன் மகள் ராணியை திருமணம் செய்து வைத்தார்.

உங்களுக்கு மட்டும்தான் பெரிய மனதா? எனக்கும் இருக்கிறது என்று அண்ணன் மகன் ரமேஷ், மச்சான் சுதாகர் ஆகியோரை வெளிநாட்டுக்கு அழைத்துக் கொண்டார் கணேசன். 

கூரை வீட்டில் இருந்த இவர்கள், இப்போது மாடி வீடு கட்டி உயர்ந்திருக்கின்றனர். தனது மாமனார் மட்டுமல்லாது சின்ன மாமனார் வீட்டு திருமணங்களுக்கு கூட தன்னால் இயன்ற பொருள் உதவிகளை வழங்கியிருக்கிறார் கணேசன். 

ராணி இப்போது மகா ராணியாக இருக்கிறார். எங்கள் ராணி, வெங்கடேஷ், சந்தோஷ் என இரு தங்கங்களை பெற்றேடுத்திருக்கிறது. எங்க தங்கம் பெற்ற தங்கங்கள் ‘’டேய் கிழவா’’ என்று என்னை உரிமையோடு அழைக்கிறார்கள். 

ஆனாலும் பெரிய அக்காவுக்கு, சின்ன அக்கா காந்திமதி மீது கோபம் இருக்கிறது. அவர் செய்யாத உரிமையை இவர் செய்து புண்ணியம் கட்டிக் கொண்டார் என்று நாங்கள் நடந்து கொள்வதாக கோபம். 

எங்கள் மீது அன்பு காட்டி எங்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்த சின்ன அக்கா மீது நாங்களும் அதிக நன்றியோடு இருப்பதால் கூட இருக்கலாம்.

பெரியக்காவை அப்படி நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. அவரும் எங்க வீட்டு மகள்தான். பொறந்த பொறாப்பு என்றும் விட்டுப் போகாது. அப்படி யாரும் நினைக்கவில்லை. அவர்கள் வீட்டு மருமகள்கள் எங்களுக்கு உறவினர்கள் இல்லை. அந்நியம். 

அதனால் எங்கள் மகள் வீடு என்று உரிமையோடு அந்த வீட்டுக்கு அடிக்கடி செல்ல வாய்ப்பு இல்லை. அது ஒரு குறையே தவிர மற்றபடி பாசம் குறைந்து விடுமா என்ன

சரி, இந்த உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர்கள பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், குறுகிய மனம் படைத்தவர்கள் பற்றி சொல்வதற்குதான். மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுப்பது என்பது ஒரு வாய்ப்பு. அதை எத்தனை பேர் செயல் படுத்தினார்கள்?

சினிமாக்காரன் என்பதால் எனக்கு பெண் கொடுக்க பயந்தார்கள்? அந்த அனுபவத்தை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம். 

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...