Friday, October 2, 2015

83. சரத்குமார் நடித்த கம்பீரம் பட அனுபவங்கள்

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் 

‘தென்காசிப்பட்டணம்’ படத்தை தொடர்ந்து மாஸ் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜு தயாரித்த படம் ‘கம்பீரம்’. சரத்குமார் நடிப்பில் ‘அரசு (தர்பார்)’ படத்தை இயக்கிய சுரேஷ், இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் ஏ.சி.முத்துச்சாமி என்கிற கம்பீரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோ சரத்குமார் நடிக்க, அவருக்கு ஜோடிகளாக விஜயலட்சுமி என்கிற பாத்திரத்தில் லைலாவும், சரோஜா என்கிற பாத்திரத்தில் பிரணதியும், நடித்தனர். பிரணதி பிளாஷ் பேக் காட்சிகளிலும், படம் முடியும் போது சரத்குமார் மகளாகவும், இரு வேடங்களில் நடித்து, இந்தப் படம் மூலம் அறிமுகமானார்.

ராஜேந்திரன் என்கிற அரசியல்வாதி வேடத்தில் தணிகலபரணி வில்லனாக நடித்தார். தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்திருக்கும் தணிகலபரணி, தமிழில் நடித்த முதல் படம் இது. முன்னாள் அமைச்சர் மதியழன் என்கிற பாத்திரத்தில் ரவிச்சந்திரன் நடிக்க, நாகா என்கிற மிரட்டல் பாத்திரத்தில் ஜாஸ்பர் நடித்து அறிமுகமானார்.

கம்பீரம் - சரத்குமார், லைலா 
தொழிலதிபர் புண்ணியகோடியாக சேது விநாயகம், ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிபாரதியாக மாணிக்க விநாயகம், கிருத்திகாவாக பேபி மோனிஷா (அறிமுகம்), பிரணதியின் அம்மாவாக மனோச்சித்ரா, மினிஸ்டரின் பி.ஏ.வாக பாண்டு, சரத்குமாரின் மாவாக பயில்வான் ரங்கநாதன், போலீஸ்காரர்களாக பீலிசிவம், ராஜேந்திரநாத் நடிக்க, நடனக்காரியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் ராக்கி சாவந்த்.

ஊமைத்துரை என்கிற போலீசாக வடிவேலு நடிக்க, அவரது கூட்டணியில் சிங்கமுத்து, கிருஷ்ணமூர்த்தி, தளபதி தினேஷ், டெலிபோன்ராஜ், வெங்கல் ராவ், அடிதடி நடேஷ், விஜயகணேஷ், பாலன், தனலிங்கம், கஞ்சா பானு, உட்பட பலர் நடித்தனர்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தோரணவாயில் கிராமத்தில் உள்ள கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

கதாநாயகி பிரணதி 
நம்ம கிராமத்தின் கோவிலை மதித்து படப்பிடிப்பு துவங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டு கிராம மக்கள் திரண்டு வந்து அனைவரையும் வரவேற்றனர். தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ், இயக்குநர் சுரேஷ், ஹீரோ சரத்குமார் ஆகியோருக்கு யானை மாலை அணிக்க, வரவேற்பு அளித்தார்கள்.

இயக்குநர் சுரேஷ் முதன் முதலில் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்றுதான் தீர்மானித்திருந்தாராம். பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இந்தப் படத்திற்கு சரியான வாய்ப்புகள் முதலில் அமையாததால், பிறகு அரசு படத்தை இயக்கினாராம். 

அசிஸ்டென்ட் கமிஷனர் முத்துசாமி என்கிற கம்பீரமான போலீஸ் கதாபத்திரமாக தோற்றமளிக்க, தினம் காலை, மாலை இருவேளையும் திறமையான இரு பயிற்சியாளர்களை வைத்து உடற்பயிற்சி செய்து நடித்த சரத்குமார், போலீசுக்கு வெட்டப்படும் சம்மர் கட்டிங் செய்ய மும்பைக்கு சென்று இந்தியில் பிரபல நடிகர்களுக்கு முடிவெட்டும் பெர்ரி என்பவரிடம் ஐந்து முறை முடிவெட்டி வந்தார். 

இயக்குநர் சுரேஷ், ஒளிப்பதிவாளர் ஒய்.என்.முரளி 
இந்தப் படத்தில் நடிக்க கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட துணை நடிகர்கள் தேவைப்பட்டதால் சென்னையில் உள்ள பல ஜிம்களில் இருந்து இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

ஈரோடு ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடந்த போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி விட்டனர். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாத அனுபவம்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன், பூதப்பாடி ராம்ராஜ் கார்டன் என்கிற பண்ணை தோட்டத்தில் விட்டு சென்றார். அந்த இடத்தில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அந்த இடத்தின் உரிமையாளர் சேர்மன் ராம்ராஜ் என்பவர் சரத்குமார் மற்றும் படக்குழுவுக்கு மூன்று நாட்களும் விருந்து வைத்து உபசரித்தார்.

தணிகலபரணி 
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மூன்று நாட்கள் சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒருவித பரபரப்பு படப்பிடிப்பு குழுவுக்கு இருந்ததை உணர முடிந்தது.

சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக விஜிபி தங்க கடற்கரையில் பிரமாண்ட மார்க்கெட் அரங்கு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்தது.

அங்கு நூறுக்கும் மேற்பட்ட கடைகள், நூறு டூவீலர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட கார்களுடன், இரண்டாயிரம் துணை நடிகர்கள், முப்பது பைட்டர்கள் கலந்து கொண்ட பரபரப்பான காட்சி பதினைந்து நாட்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டது.

முதுகில் ரோப் கட்டிக் கொண்டு நாற்பத்தி இரண்டு அடி உயரம் கொண்ட ஹைட்ராலிக் கிரெனில் இருந்து சரத்குமார் குதித்த காட்சியை எடுத்த போது அனைவரும் பார்த்து வியந்தனர். அந்த சண்டைக் காட்சிக்காக போர் திரி பைவ் காமிரா, ஸ்டெடி கேம் கேமிரா, ஜிம்மி ஜிப், த்ரி சி கேமிரா என நான்கு கேமிராக்களை கொண்டு படம்மாக்கினார் ஒளிப்பதிவாளர் ஒய்.என்.முரளி.

ஜாஸ்பர் 
ஒரு பாடலுக்கு இளமை பொங்கும் நடன அழகி ஒருவர் தேவைப்பட, அப்போது ஒற்றன் படத்தில் சின்ன வீடா வரட்டுமமா பாடலுக்கு நடனம் ஆடிய தேஜாஸ்ரீயை நடிக்க வைக்க விரும்பி, அவரை தொடர்பு கொண்ட போது, அவர் நாங்கள் கேட்ட தேதியில் வேறு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அதனால், மும்பை சென்று தேடியதில் கிடைத்தவர் ராக்கி சாவந்த். இந்தி பாப் ஆல்பங்களிலும் படு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்த, அவரது ஆட்டத்தை பார்த்து அசந்து போன இயக்குநர், அவரை நடிக்க வைத்தார்.

‘பத்மஸ்ரீ’ தோட்டா தரணி கலை அமைப்பில், ஒய்.என்.முரளி ஒளிப்பதிவில், வி.டி.விஜயன் படத்தொகுப்பில் உருவான இந்தப் படத்திற்கு கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அளித்தார்.

மணிசர்மாவின் மணியான இசையில் கபிலன் எழுதிய ‘ஒரு சின்ன வெண்ணிலா போல’ பாடலை கல்பனா பாடி இருந்தார். அந்தப் பாடலை இயற்கை எழில் கொஞ்சும் கோபிசெட்டிபாளையம் மலைப்பகுதியில் சரத்குமார், பிரணதி நடனம் ஆட பிருந்த நடனம் அமைக்க, படமானது.

ராக்கி சாவந்த் 
கபிலன் எழுதிய இன்னொரு பாடலான, ‘நானாக நானிருந்தேன்... நீ வந்தாய் நீயானேன்’ பாடலை விஜய் ஜேசுதாஸ், சுஜாதா இருவரும் பாடி இருந்தனர். கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண தேவராயர் அரண்மனை மற்றும் அதனை சுற்றியுள்ள விட்டலா டெம்பில், ஜெயின் டெம்பில், லோட்டஸ் மகால், எலிபெண்ட் ஸ்டேபிள்ஸ், மகா நவமிதிர்பா, ராணி குளித்த ஹன்ர்ட் ஸ்டெப்ஸ் மவுண்ட் போன்ற பழங்கால புகழ்பெற்ற  கலைநயம் மிகுந்த இடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் சரத்குமார், லைலா ஆடிய காட்சிகளுடன் அந்த பாடலை  படமாக்கி இருந்தார், நடன இயக்குநர் பிருந்தா.

பா.விஜய் எழுதிய ‘சம்பல் காட்டு கொள்ளைக்காரி... சலவை செஞ்ச வெள்ளைக்காரி’ பாடலை அறிமுக பாடகி சங்கீதா பாட, அதற்கு ராக்கி சாவந்த் நடனம் ஆடினார். பிருந்தாவின் உதவியாளரான ‘சிநேக்’ சாந்தி என்று அழைக்கப்பட்ட சாந்தி ஸ்ரீஹரி, இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து நடன இயக்குனராக அறிமுகமானார். இந்தப் பாடலுக்காக ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஜொலிக்கும் தங்க மாளிகை அரங்கு அமைத்து, அங்கு காற்று, நெருப்பு, நீர் என மூன்று விதமான சூழ்நிலையில் நடனமாடிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது.

ஜி.பாலன் 
இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் அவர்களின் மகன் மதன்குமார், இணைத் தயாரிப்பாளராக அறிமுகமானார். தயாரிப்பு மேற்பார்வை – என்.ஆர்.குமார், கே.அண்ணாத்துரை, தயாரிப்பு நிர்வாகம் – கே.பாண்டியன், வி.ஆர்.குமார், கே.ரவிச்சந்திரன், அலுவலக நிர்வாகம் – எஸ்.தனலிங்கம்.

ரத்தன்.ஜி இணை இயக்குனராகவும், காதர், கே.ஆர்.கந்தன், சி.சௌந்தர், திராவிடச்சேலவன், ரவிச்சந்திரன் ஆகியோர் உதவி இயக்குனர்களாகவும் பணியாற்றினார்கள்.  

கணேசன், அப்பாராவ், நளினி ஸ்ரீராம் ஆகியோர் உடை அலங்காரத்தையும், சேத்தூர் தவகுரு ஒப்பனை அலங்காரத்தையும் கவனிக்க, மூர்த்தி புகைப்பட கலைஞராகவும், ஜி.பாலன் மக்கள் தொடர்பாளராகவும் பணிபுரிந்தார்கள்.

25.02.2004 அன்று தணிக்கையான கம்பீரம் படம், 05.03.2004 அன்று வெளியானது.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...