Wednesday, October 7, 2015

78. சத்யராஜ் நடித்த ‘மாறன்’


மாறன்’ சத்யராஜ்
திருவள்ளுவர் கலைக்கூடம் அலுவலகத்தில் இருந்து தயாரிப்பாளர் பார்த்திபன் அழைத்தார்.

நேரில் சென்று சந்தித்த போது, நம் படத்தின் பைனான்சியர்  பங்கஜ் மேத்தா, உங்களை பார்க்க வேண்டும் என்கிறார். நான் உங்களை அவரிடம் அறிமுக படுத்துகிறேன். அவர் என்ன வேலை சொன்னாலும், அதை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுரையாக கூறினார்.  

மயிலாப்பூரில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பங்கஜ் மேத்தா அலுவலகத்திற்கு சென்ற போது, அவர் என்னை வரவேற்ற விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

என் வேலையின் மீது மரியாதை கொடுத்து அழைத்து வர வைத்திருககிறார்.

சத்யராஜ் நடிக்கும் ‘மாறன்’ என்கிற படத்தை தயாரிக்கிறேன். அந்தப் படத்திற்கு செய்திகள் பெரிதாக வரவில்லை. உங்கள் தயாரிப்பாளரின் ‘நம்ம வீட்டு கல்யாணம்’ பட செய்திகள் எல்லா பத்திரிகைகளிலும் வருகிறது. அதனால், உங்களை பார்க்க விரும்பினேன் என்று கூறிய பங்கஜ் மேத்தா, இன்று முதல் என் கம்பெனிக்கு நீங்கள் மக்கள் தொடர்பாளராக வேலை செய்யுங்கள். என்ன சம்பளம் எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

உங்கள் படத்தின் மக்கள் தொடர்பாளரும், நன்கு வேலை தெரிந்தவர்தான். திறமையானவர்தான். அதனால், அவர் மூலமாக செய்யலாம் சார் என்று தெரிவித்த போது, அவருக்கு ஆயிரம் படங்கள் இருக்கும். எனக்கு என் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்கிற மக்கள் தொடர்பாளர்தான் வேண்டும் என்று தெரிவித்தவர், யூனியன் பிரச்சனை வருமா? நான் அவரிடம் நோ அப்சக்சன் கடிதம் வாங்கி தரட்டுமா என்றார்.

சத்யராஜ்,சீதா, ரகுவண்ணன், ப்ரீத்தி
எனது தயாரிப்பாளர் பார்த்திபன் என்னை கடிந்து கொண்டார். ஒரு வாய்ப்பு வரும் போது, அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

நாளை முதல் உங்கள் படத்தின் வேலைகளை துவங்குகிறேன் என்று அவரிடம் தெரிவித்துவிட்டு, அந்தப் படத்தில் பணிபுரிந்த மக்கள் தொடர்பாளரிடம் போனில் பேசி, அவரின் சம்மதத்துடன் மாறன் படத்திற்கு மக்கள் தொடர்பாளராக வேலை செய்ய ஆரம்பித்தேன்.

காரைக்குடியில் பிறந்து வளர்ந்தவர் ஜே.எஸ்.பங்கஜ் மேத்தா. தமிழ்த் திரையுலகில் ஏராளமான படங்களுக்கு நிதி உதவி செய்தவர். தினந்தோறும், நட்புக்காக, பூவேலி, சார்லி சாப்ளின், மலபார் போலீஸ், பாளையத்தம்மன், விரலுக்கேத்த வீக்கம் உட்பட 52 படங்களை வாங்கி விநியோகம் செய்தவர்.

அவருக்கு படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதனால், சில இயக்குனர்களிடம் கதை கேட்டவர், சுந்தர்.சியின் உதவியாளர் ஜவகர் சொன்ன கதை அவருக்கு பிடித்திருக்கிறது. பவர் மீடியா என்கிற பட நிறுவனத்தை துவங்கி மாறன் என்கிற படத்தை தயாரித்தார்.

மகன் திருமண விழாவில் ஸ்டாலினுடன் பங்கஜ் மேத்தா 
கல்லூரியில் படிக்க சென்ற மகன், ராக்கிங் கொடுமைக்கு ஆளாகி, அநியாயமாக கொள்ளப்படுகிறான். கொலையை செய்தவனை வெளியே கொண்டுவர வழக்கறிஞர், போலீஸ் என பலரும் உதவியாக இருக்கிறர்கள். இதை அறிந்த தந்தை சத்யராஜ், தனது மகன் சாவுக்கு காரணமாக இருந்தவனையும், அவனுக்கு உதவியாக இருந்தவர்களையும் எப்படி பழி தீர்க்கிறார் என்பது படம்.

இந்தப் படத்தில் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் சத்யராஜ் மகனாக நடித்து, திரையுலகில் நடிகராக அறிமுகமானார். சத்யராஜ் மாறனாக நடித்தார். நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை ஆகிய படங்களுக்கு பிறகு, இந்தப் படத்தில் மொட்டை அடித்து மிரட்டலான நடிப்பை வழங்கி இருந்தார் , சத்யராஜ்.

சத்யராஜ் மனைவி சீதாவாக, சீதா நடித்தார். சத்யராஜுடன் மல்லுவேட்டி மைனர் படத்தில் நடித்த போது பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு, திரையுலகில் இருந்து ஒதுங்கிய சீதா, பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சத்யராஜ்  ஜோடியாகவே மாறன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

நடிகை அல்போன்ஸாவின் தம்பி டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாக, நடன இயக்குனர் சின்னாவின் மகள் ஜெனிபர் கதாநாயகியாக நடித்தார்.

மேலும், டெல்லி கணேஷ், விணு சக்கரவர்த்தி, வி.எம்.சி.ஹனிபா, தலைவாசல் விஜய், தேவன், ரவிகுமார், இளவரசு, ராஜ்கபூர், மகாநதி சங்கர், சரத்பாபு, சந்தோஷி, அபிநயாஸ்ரீ, பல்லவி, வாமன் மாலினி, நிகிலா, அனுஜா, கௌதமி, ப்ரீத்தி, ஸ்ரீகாந்த், குமரேசன், மயில்சாமி, கிரேன் மனோகர், பயில்வான் ரங்கநாதன், பாவா லட்சுமணன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இயக்குனர் ராஜசேகர், செந்தில்நாதன், சுந்தர்.சி ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர் ஏ.ஜவகர், இவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குனராக இந்தப் படத்தில் அறிமுகமாக, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதினர். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, சாய் இளங்கோ படத்தொகுப்பை கவனித்தார்.

தேனிசை தென்றல் தேவா இசையில் உருவான ஐந்து பாடல்களை  கவிஞர் பா.விஜய் எழுதி இருந்தார். ஆனந்தம் ஆனந்தம் பாடலை உன்னிமேனன், சுஜாதா மோகன் பாட, புளோமினா நீ எந்தன்பாடலை எஸ்.பி.பி.சரண், மாதங்கி இருவரும் பாடி இருந்தனர். கண்ணுக்குள்ளே பாடலை உன்னிமேனன் பாட, புடிபுடி கபடி பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடி இருந்தார். குயின் மேரிஸ் பாடலை சிம்பு பாடி இருந்தார். இந்த பாடலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி பெயர்களும் இடம்பெற்றிருந்தது. 

ஆனந்தம் ஆனந்தம் பாடலுக்கு வாமன் மாலினி நடனம் அமைக்க, புடிபுடி கபடி பாடலுக்கு சுஜாதா நடனம் அமைத்தார். குயின் மேரிஸ் பாடலுக்கு ராபர்ட் நடனம் அமைத்திருந்தார். சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் வடிவமைத்தார்.

விவேகானந்தன் நிர்வாக தயாரிப்பில், எம்.சசிகுமார் தயாரிப்பு மேற்பார்வையில் உருவான இந்தப் படத்திற்கு காரைக்குடி கே.மோகன் அலுவலக நிர்வாகத்தை கவனித்தார்.

ஸ்டில்ஸ் ரவி, புகைப்பட கலைஞராகவும், அப்ஸ்ட்ராக் சரவணன் டிசைனராகவும் பணியாற்றிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோ, வாகினி ஸ்டுடியோ, ஏ.ஆர்.எஸ்.கார்டன், எம்.ஜி.ஆர்.பிலிம்சிட்டி, ஸ்டான்லி மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 20 ஆம் தேதி  வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றது.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...