Sunday, August 30, 2015

47.பிலிம் சிட்டி திறப்பு விழாவும் பரிசுப் பொருளும் - ஜி.பாலன்

ஜி.பாலன் 
தமிழக அரசு திரையுலகிற்கு உதவும் வகையில் தரமணியில் பிலிம்சிட்டி ஒன்றை உருவாக்கி இருந்தது. பணப் பெட்டியோடு சென்றால் படப் பெட்டியோடு திரும்பலாம் என்கிற அளவுக்கு உள்ளே படப்பிடிப்பு தளங்கள் உருவாகி இருந்தது.

கிராமம், கோவில், தெருக்கள், வீடுகள், பாலம், பஸ் ஸ்டாப், ஃப்ளோர், கார்டன் என படப்பிடிப்பு நடத்த பல இடங்கள் அதனுள் இருந்தன.

அதன் திறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி, பிரபுதேவாவின் நடனம் என பலவகையான நிகழ்ச்சிகள் அங்கு அமர்க்களப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.

முதல்வருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, ராணி சீதை ஹால் கட்டிடத்தில் உள்ள உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் ஒரு பெரிய பரிசு பொருள் இரண்டு லட்சம் செலவில் தயாரானது. அது கனமாகவும், உயராமாகவும் இருந்ததால், அதை நானும், சுப்பாராவும் எடுத்துக் கொண்டு பிலிம் சிட்டிக்கு சென்றிருந்தோம். விழா மேடைக்கு பின்புறம் பல சோதனைகளுக்கு பிறகு அனுமதித்திருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள் முடிந்து விழா துவங்கிய போது முதல்வரை கௌரவிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. அப்போது தலைவர் கே.ஆர்.ஜி., கேயார் இருவரும் இணைந்து அந்தப் பரிசை முதல்வரிடம் வழங்கினார்கள்.

அதை தூக்க முடியாமல் நானும் சுப்பராவும் தூக்கி சென்றது, அப்போது சுப்பாராவ் நடந்து கொண்ட விதம் என பல நினைவுகள் மனதிற்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை. 

அதே போல திரு.ஏவி.எம்.சரவணன் அவர்கள் பிலிம் பெடரேஷன் இந்தியா தலைவராக பொறுப்பேற்ற போது, ஒரு தமிழன் அகில இந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகி இருக்கிறார் என்று பெருமைப்பட்ட கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தார். அதற்கு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.  

அடையாரில் உள்ள பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட விழா எடுத்து, அதில் ஏராளமான நடசத்திரங்கள் கலந்து கொண்டு  அவரைப் பாராட்டினார்கள். கௌரவப் படுத்தினார்கள்.

அந்த விழா தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. கே.ஆர்.ஜி. என்ன நினைக்கிறாரோ அதை செயல்படுத்தும் வேலை எனக்கு அதிகமாக இருந்தது.

தமிழ்த் திரையுலகில் நல்லது நடக்கும் போது அதைப் பாராட்டவும், கெட்டது நடக்கும் போது அதை சுயநலம் பாராமல் எதிர்க்கவும் தயாராக இருந்தார் கே.ஆர்.ஜி.

முன்பு கூறி இருந்ததைப் போல விநியோகஸ்தர் சங்கம் மூலம் படங்களுக்கு ரெட் அடிப்பது வழக்கத்தில் இருந்தது. சில விநியோகஸ்தர் சங்கங்கள், தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் வந்தனர். சில சங்கங்கள் அதில் பிடிவாதமாக இருந்தனர்.

அதில் திரு.சிந்தாமணி முருகேசன் அவர்கள் தலைமையில் இருந்த சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அவர்களது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. அந்த அமைப்பின் வலிமையும், உறுதியும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்ச்னையாக இருந்தது.

அதனால், படங்களை வெளியிட விடாமல் தடை செய்யும் ரெட் அடிபதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தார் தலைவர் கே.ஆர்.ஜி. அப்படி அப்போது ரெட் அடிக்கப்பட்ட படம் காதலன். கே.டி.குஞ்சுமோன்  தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்தப் படம் அது.

பிலிம் சேம்பர் வாசலில் ரெட் அடிப்பதற்கு எதிராக உண்ணாவிரதம் என்கிற பெரும் போராட்டத்தை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் துவங்கினார் கே.ஆர்.ஜி. தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என திரையுலகின் இருபத்தி நான்கு அமைப்புகளும் அதற்கு ஆதரவு அளித்து அந்த உண்ணாவிரத்ததில் கலந்து கொண்டனர். அன்று படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை.

காலையில் துவங்கிய போராட்டம் மாலை ஐந்து மணி வரை நீடித்தது. முடிவில் அரசிடம் அந்த கோரிக்கை ஒப்படைக்கப்பட்டது. மறுநாள் படங்களை எந்த காரணம் கொண்டும் தடை செய்யக் கூடாது என்று அரசு சார்பில் தெரிவித்தனர். மீறி செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு கிடைத்த மரியாதையை, திரையுலகினர் தந்த உதவியை நினைத்து பெருமைப் பட்டார் கே.ஆர்.ஜி. அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.

ஆனால் பிறகு அவர்களுக்குள் பிரச்சனை எழும் என்று அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Thursday, August 27, 2015

46. தயாரிப்பாளர் சங்கமும், அறக்கட்டளை துவக்கமும் - ஜி.பாலன்


கே.ஆர்.ஜி

ஆரம்பத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய வருமானம் எதுவும் கிடையாது. உறுப்பினர் சந்தா, மற்றும் படபெயர் பதிவு செய்தல் போன்ற வேலைகளுக்காக சிறிய தொகை மட்டுமே வசூல் ஆனது. அதை வைத்துக் கொண்டு வாடகை, சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை இருந்தது. 

செயற்குழு கூட்டம் நடத்தினால், வருகிற உறுப்பினர்களுக்கு காப்பி வாங்கி கொடுக்க கூட முடியாத நிலை. இதை புரிந்து கொண்டு, ஒரு கூட்டத்திற்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இன்னொரு கூட்டத்திற்கு ஜெயின்ராஜ் ஜெயின், மற்றொரு கூட்டத்திற்கு நந்தகோபால் செட்டியார் என சில தயாரிப்பாளர்கள் அந்த செலவுக்கான பணத்தை கொடுது உதவினார்கள்.

இப்படி இயங்கிக் கொண்டிருந்த சங்கம், வருகிற உறுப்பினர்களுக்கெல்லாம் காபி வாங்கி கொடுக்கிற நிலைக்கு உயர்ந்தது. அதற்கு தலைவராக இருந்த கே.ஆர்.ஜி.யும், அவருடைய நிர்வாக குழு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருந்தது.  

தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்கள் பெற்று சன் தொலைக்காட்சி, ஜேஜே டிவி, கோல்டன் ஈகில் கம்யூனிக்கேஷன், ஜெயின் டிவி, துரதர்ஷன் இரண்டாவது சேனலில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் முக்காபாலா, சித்ரகார், ரங்கோலி, என பல நிகழ்ச்சிகளில் பாடல்கள் ஒளிபரப்ப கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு குறைந்த பட்சம் நான்கு லட்சம் வரை வருமானத்தைப் பெற்று தந்ததோடு, அந்த சர்வீஸ் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வருமானத்தையும் பெருக்கியது. தினமும் வங்கி செயல்படுவது போல சங்கத்தில் இருந்து உறுப்பினர்களுக்கு காசோலைகள் சென்று கொண்டிருந்தன. 

மேனேஜர் சீனிவாசன், நிர்வாகி சுப்பாராவ், மக்கள் தொடர்பாளராக்கிய  நான், ஆபீஸ் பையன் முருகன் ஆகியோர் மட்டுமே ஆரம்பத்தில் வேலையில் இருந்தோம். காலை ஒன்பது மணி முதல் இரவு பத்து மணி வரை நேரம் காலம் பார்க்காமல் வேலைப் பார்த்தோம். 

வருமானம் லட்சத்தை கடந்து அரை கோடியை தொட்டபோது லட்சியத்தை அடைய ஆரம்பித்தார் தலைவர் கே.ஆர்.ஜி. தயாரிப்பாளர்களுக்கு உதவ அறக்கட்டளை அமைப்பை தொடங்க வேண்டும் என்பது கே.ஆர்.ஜி.யின் லட்சியம். அந்த கனவை நனவாக்கியது தயாரிப்பாளர் கோவிந்த் அவர்களின் மரணம்.

வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சத்யராஜை முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க வைத்தவர் சாவி படத்தின் தயாரிப்பாளர் கோவிந்த். அவர் ஒரு நாள் மாலை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தார். நண்பரானா செயலாளர் டி.என்.ஜானகிராமானிடம் வெகு நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என மார்பு வலி வந்தது. அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் ஜானகிராமன்.

மறுநாள் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி கிடைத்தது. இதை அறிந்து தலைவர் கே.ஆர்.ஜி. அதிர்ச்சி அடைந்தார். பிறகு கோவிந்த் அவர்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று செயலாளர் ஜானகிராமன் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, அந்த உதவி தொகையை தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் அறக்கட்டளை துவக்கி வைத்து உதவினார்.

பிலிம் சேம்பர் திரையரங்கில் நடந்த அந்த பொதுக் குழு கூட்டதிற்கு  பெரும் திரளாக தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சத்யராஜும் தான் பங்குக்கு  ஒரு லட்ச ரூபாய் உதவினார். 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையின் அறங்காவளாராக திரு.கே.ஆர்.ஜி., திரு.கேயார், திரு.டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் தேர்வானார்கள். 

அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றார் காந்திஜி. அவருக்கு துணையாக இருந்தார் நெருஜி. அதே போல எங்கள் தயாரிப்பாளரின் சுதந்திரதிற்காக பாடு பாடுகிறார் கே.ஆர்.ஜி. 

உரிமை பெற செக் இழுத்து கஷ்டப்பட்டார் வ.உ.சி. அதே போல எனக்கு செக் வாங்க கஷ்டப்பட்டார் கே.ஆர்.ஜி என்று பேசி, கைதட்டல்களை பெற்றார் எஸ்.எஸ்.சந்திரன்.

எஸ்.எஸ்.சந்திரன், தன் நண்பரோடு இணைந்து புருஷன் எனக்கு அரசன் என்கிற படத்தை தயாரித்திருந்தார். படம் வெளியாகும் போது இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு வழங்கிய மானிய தொகையை பெறும் போது, இருவருக்கும் இடையே யார் அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் என்று மோதல் வெடித்தது. கடிதங்கள் அரசுக்கு அனுப்பட்டன. அதனால் அப்படத்திற்கு செல்ல வேண்டிய காசோலையை நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. எஸ்.எஸ்.சந்திரன், திமுக கட்சியில் இருந்தார். அதனால் கே.ஆர்.ஜி.அவர்களிடம் பிரச்சனையை சொன்னார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் வேறொரு அமைச்சர் மூலமாக பேசி அந்த தொகையை பெற்றுதந்திருந்தார் கே.ஆர்.ஜி.

அந்த நன்றிக்காக அப்படி புகழ்ந்து பேசினார் எஸ்.எஸ்.சந்திரன்.

அன்று ஒரு செடி போல துவங்கிய தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை இன்று ஆலமரம் போல வளர்ந்து, தனது உறுப்பினர்களின் நல் வாழ்க்கைக்கு உதவி உயர்ந்து நிற்கிறது.

திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் மறைந்தாலும் அவரது ஆசை, லட்சியம் இப்பவும் தொடர்கிறது. 

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Wednesday, August 26, 2015

45. செவாலியே விருதும், பாராட்டு விழாவும் – ஜி. பாலன்


நடிகர் திலகத்துடன் பாலன்

செவாலியர் விருது என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கி வரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957- ல் இருந்து ஆண்டு தோறும் வழங்கி வரும் மிக உயர்ந்த விருது.

கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு வழங்கினார்கள். இந்த விருதுக்கு சிவாஜி அவர்கள் தேர்வான கடிதம் கிடைத்த போது, அந்த செய்தியை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்து வர உதவியாளர் என்கிற முறையில் என்னை அனுப்பினார் சிவாஜியின் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்.

ஈகா திரையரங்கில் மதியம் இரண்டு மணிக்கு ஒரு மலையாள படமும், மாலை ஆறு மணிக்கு பிலிம் சேம்பர் திரையரங்கில் ஒரு தமிழ்ப் படமும் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு கட்ட வேண்டிய வேலையும் அவருக்கு இருந்தது. இந்த ’செவாலியே விருது’ பொது செய்தி என்பதால், பத்திரிகை அலுவலங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினேன்.

சரியான மழை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் நனைந்து கொண்டே பறந்தேன். படம் பார்க்க வேண்டிய ஆர்வமும் இருந்ததால், எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு வேகத்தில் சென்று கொடுத்தேன்.

படம் திரையிடுவதற்குள் வந்து சேர்ந்துவிட்டதால், பிலிம் நியூஸ் ஆனந்தன், என்னை நம்ப மறுத்தார். ’’முக்கியமான செய்தி, நான் வேணும்னா திரும்ப போவட்டுமா’’ என்று சந்தேகத்துடனே கேட்டார். மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்தப் பிறகுதான் நிம்மதி அடைந்தார்.

அந்த செய்தி தினத்தந்தியின் முதல் பக்கத்தில் கார்டூன் படத்திற்கு கீழே நான்கு காளம் செய்தியாக பெரிதாக இடம் பெற்றிருந்தது.  பத்திரிகைகளில் செய்தி வந்த மறுநாள், நடிகை ராதிகா அவர்கள், அந்த விருதின் பெருமைப் பற்றி பெரிய பேட்டி ஒன்றை தந்தி பத்திரிகைக்கு கொடுத்திருந்தார்.

அதுவரை அது ஏதோ ஒரு சாதாரன அமைப்பு புகழ் பெறுவதற்காக கொடுத்த விருது என்று நினைத்தவர்கள், அந்த விருதின் பெருமை தெரிந்ததும் வியந்து போனார்கள். திரையுலகினர் பலர் சிவாஜி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

செவாலியே விருது பெற்ற சிவாஜி அவர்களை பாராட்டும் விதமாக ஒட்டு மொத்த திரையுலகம் சார்பில் அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த விழா குழுவுக்கு திரு ஏவி.எம்.சரவணன் தலைவராக இருந்தார். திரு கே.ஆர்.ஜி., திரு சிந்தாமணி முருகேசன், திரு.அபிராமி ராமநாதன் என ஒரு பெரிய விழா குழு உருவானது.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலைமையில், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், மற்ற மாநில முதல்வர்கள் என பலர் அழைக்கப்பட்டு, ரஜினி, கமல் என தென்னிந்திய திரையுலகின்  முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட மிக பிரமாண்டமான விழா  நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு எனது குருநாதர் திரு டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.

மக்கள் தொடர்பாளராகவும், டைமண்ட் பாபு, பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோரின் உதவியாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மக்கள் தொடர்பாளர் என்கிற முறையிலும் எனக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தது.

இந்த விழா குறித்து அடிக்கடி நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு கொடுப்பது, திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைப்பது என்று காலை ஐந்து மணி முதல் இரவு பணிரெண்டு மணி வரை பல நாட்கள் தூங்காமல் கூட நேரம் காலம் பார்க்காமல் வேலைப் பார்க்க வேண்டிய அனுபவத்தை அப்போது பெற்றேன்.

என்னைப் போலவே, ஏவி.எம். நிறுவன ஊழியர்களான விஸ்வநாதன், அர்ஜுனன், சண்முகம், பெரு.துளசி பழனிவேல் என பலர் இந்த வேலையில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்தனர்.

சிவாஜி அவர்கள் ஒப்பற்ற பெரிய நடிகர். பழகுவதற்கு இனிமையானவர். உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மரியாதை கொடுப்பதில், உண்மையாக பேசுவதில்  அவருக்கு நிகர் அவர்தான்.

தி.நகரில் உள்ள அன்னை இல்லத்திற்கு கே.ஆர்.ஜி., அவர்களுடன் செல்லும் போது அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். கே.ஆர்.ஜி. அவர்களை ’’முதலாளி’’ என்றுதான் அழைப்பார். தயாரிப்பாளர் என்றால் அப்படி ஒரு மரியாதை. ‘’என்ன சாப்பிடுறிய’’ என்று அன்போடு கேட்பார். ’உங்களுக்கு’ என்று என்னைப் பார்ப்பார்.

ஒரு முறை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் அங்கு வேலைப் பார்த்த அருள் என்கிற பையனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது காரில் வந்து இறங்கி சிவாஜி, எங்களைப் பார்த்தார்.

நாங்கள் வணக்கம் வைத்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து தலையாட்டி, பிறகு இடத்தை சுற்றிப் பார்த்தார். சில இடங்களில் பேப்பர் போன்ற குப்பைகள் கிடந்தன. அதை அவரே கீழே குனிந்து எடுத்து ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு திரும்பினார். அருளுக்கு பயத்தில் அக்கில் வேர்த்தது.

’’என்னப்பா… ஆபிஸை இப்படி குப்பையா வச்சிருக்கீங்க’’ என்று கேட்டுவிட்டு, மாடிக்கு செல்லும் படிகளை நோக்கி சென்றார்.

அவர் இருக்குமிடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற அனுபவத்தை அங்கு தெரிந்து கொண்டேன். அவருடய படங்களை பார்க்கும் போதும், போட்டோக்களை பார்க்கும் போதும் அவரது நினைவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம், அவரை சந்தித்து பேசி இருக்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

மறைந்த அந்த மாபெரும் கலைஞனுக்கு தமிழக அரசே மணிமண்டபம் கட்டித் தரும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்திருக்கிறார். அவருடைய ரசிகர் என்கிற முறையிலும் அதற்கு நன்றி தெரிவிக்க, நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Monday, August 24, 2015

44. ஒளியும் ஒளியும் நிகழ்ச்சிக்கு பாடல்கள் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை - ஜி.பாலன்

ஜி.பாலன் 
அப்போதெல்லாம், சென்னை தூர்தர்ஷன் தமிழ் நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பான ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அப்போது தெருவில் ஜன நடமாட்டமே இருக்காது. தெருவே வெறிச்சோடி போய் கிடக்கும். டி.வி. முன்னால் அனைவரும் அமர்ந்து ஆர்வத்துடன் பார்க்கிற புகழ் பெற்ற நிகழ்ச்சியாக அந்நிகழ்ச்சி இருந்தது. 

வாரம் தோறும் வெளியாகும் புதுப் படத்தில் இருந்து பாடல் காட்சிகள்  அதில் ஒளிபரப்பாகும் என்கிற ஆவலே அதற்கு காரணம்.

அந்தப் புதுப் பாடலை ஒளிபரப்பும் முன்பு, அந்தப் புதுப் பாடலின் படத்தின் பெயரைத் தாங்கிய ஒரு போட்டோ கார்ட் விளம்பரம் பத்து செகண்டுக்கு ஒளிபரப்பாகும். அதற்கு கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் வசூலித்துக் கொண்டிருந்தது தூர்தர்ஷன்.

அதன் கட்டணத்தை இருபதாயிரமாக உயர்த்தப் போவதாக கேள்விப்பட ஒரு தயாரிப்பாளர், என்னிடம் வேதனையுடன் அதனை பகிர்ந்து கொண்டார். இந்த தகவலை, தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

தயாரிப்பாளரின் பாடல்கள் மூலமாக அந்த நிகழ்ச்சியில் வேறு பல விளம்பரத்தை அதிகமாக பெறுகிறீர்கள். அதனால், பல லட்சம் தொலைக்காட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.

ஒரு பாடலுக்கு பல லட்சம் செலவு செய்து நாங்கள் தயாரிக்கிறோம். அதனால், அந்தப் பாடல் ஒளிபரப்ப நீங்கள்தான் எங்களின் தயாரிப்பாளர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும்.

பத்தாயிரம் கட்டணம் செலுத்தவே போராடுகிற நிலையில், இருபதாயிரம் கட்டணம் என்றால், அது தயாரிப்பாளர்களுக்கு தாங்க முடியாத பெரிய சுமையாக இருக்கும். அதனால், கட்டணம் உயர்த்துவது பற்றி உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். அது விஷயமாக தூர்தர்ஷன் நிர்வாகத்துடன்  தயாரிப்பாளர் சங்கம் கலந்து பேச தயாராக இருக்கிறோம். அதற்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று தூர்தர்ஷன் இயக்குனருக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார் தலைவர் கே.ஆர்.ஜி.

அந்தக் கடிதத்தை தூர்தர்ஷனில் கொண்டு சென்று கொடுத்து வந்தேன். அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து இருபதாயிரம் கட்டணம் வசூலிக்க துவங்கினார்கள். இது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார் கே.ஆர்.ஜி.

மத்திய அரசிடம் இருந்து சென்னை மண்டல தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட்டு படங்கள் தணிக்கை பெற தயாரிப்பாளர் சங்கம் மூலம் வாய்ப்பை பெற்ற தலைவர் கே.ஆர்.ஜி., தூர்தர்ஷனின் இந்த கட்டண உயர்வால் மத்திய அரசிடம் மோதுகின்ற ஒரு சூழ்நிலைக்கு ஆளானார்.

உடனடியாக ஒரு செயற்குழு கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார். செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது அப்போது வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மறுநாள் நடந்த அந்த அவசர செயற்குழு கூட்டத்தில், தொலைக்காட்சிக்கு புதுப் பாடல்கள் கொடுப்பதில்லை என்று தீர்மானம் கொண்டு வந்தார்.  ஆரம்பத்தில் படத்திற்கு விளம்பரம் கிடைக்காதே என்று தயங்கிய சில தயாரிப்பாளர்கள், பிறகு சம்மதித்தனர். இந்த தகவலை உடனடியாக மீடியாக்களுக்கு தெரிவித்தார்.

அப்போது வெளியான ஒரு வசந்த கீதம்,  ஜெய்ஹிந்த், வரவு எட்டானா செலவு பத்தானா, சக்திவேல் ஆகிய படத்தின் தயாரிப்பாளர்கள்  உறுதியாக இருந்தனர். நான்கு வாரங்கள் கடந்த பின்னும் தூர்தர்ஷன் நிர்வாகம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒளிபரப்பான பாடல்களையே திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள்.

தினமும் மாலை நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்த, சன் டிவியின் தமிழ்மாலை சாட்டிலைட் சேனல், தயாரிப்பாளர்களின் பாடல்களுக்கு நாங்கள் பணம் தருகிறோம் என்று முன் வந்தது.

அந்த நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, செயற்குழு ஒப்புதலுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. வெள்ளியன்று ஒளிபரப்பாகும் ஆறு புதுப் பாடல்களுக்கு ஒரு லட்சம் என்றும், மறுமுறை ஒளிபரப்பாகும் போது ஆறாயிரம் என்றும், அடுத்த முறை ஒளிபரபாகும் போது இரண்டாயிரம் என்றும் முடிவாகி இருந்தது.

தலைவர் கே.ஆர்.ஜி., ஆலோசகர் கேயார், செயலாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், டி.என்.ஜானகிராமன், பொருளாளர் தரங்கை சண்முகம் போன்றோர் அந்த ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள்.

வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்களை பெற்று சன் தொலைக்காட்சிக்கு சங்கத்தின் மூலமாக வழங்க வேண்டிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் கே.ஆர்.ஜி.

பாடலை ஒளிபரப்ப தூர்தர்ஷனில் பத்தாயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி வந்த தயாரிப்பாளர்கள், அவர்களது சங்கம் மூலமாக ஒரு பாடலுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுகிற வாய்ப்பை பெற்றார்கள். உறுப்பினர்களுக்கு சர்வீஸ் செய்வது மூலமாக சங்கத்திற்கும் வருமானம் கிடைத்தது.  

அந்த வருமானம் மூலம் உறுப்பினர்களுக்கு உதவ அறக்கட்டளை ஒன்றை உருவாக்க முடிவு செய்தார் கே.ஆர்.ஜி. அது அவருக்கு எதிராக அமையப் போவது அப்போது அவருக்கு தெரியவில்லை.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)


Sunday, August 23, 2015

43. இரண்டு பேரின் உயிரை காப்பாற்றிய பெரியார் சிலை. – ஜி. பாலன்திருமணமான புதிதில் எடையூரில் பழக்கடையை கவனித்துக் கொண்டிருந்த போது, எனது எண்ணங்களை பதிவு செய்ய காவிரி நாடு என்கிற சிற்றிதழை நடத்த எண்ணி இருந்தேன். அது விஷயமாக இளங்கோ அச்சகத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு பரபரப்புடன் வந்தார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தங்கவேலு. 

பின்னத்தூர் தோலி ரோடு சந்திப்பு எதிரே சிறிய இடம் கிடந்தது. அதில் பெரியார் நினைவுத் தூண் எழுப்ப எண்ணி இருந்தோம். இதை தெரிந்து கொண்ட சிலர், அங்கு விநாயகர் கோவில் கட்ட பேசியுள்ளனர். இதை அறிந்த போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே ஊருக்குள் ஒரு விநாயகர் கோவில் இருக்கிறது. இப்போது இன்னொரு விநாயகர் கோவில் எதற்கு என்று வருத்தமாக இருந்தது.  

அதனால், இரவோடு இரவாக சென்று அங்கு குழி தோண்டினோம். பிரச்சனை உருவானது. அதனால், இரு தரப்பினரையும் அழைத்து பஞ்சாயத்து பேசி இருக்கிறார்கள். இரு தரப்புமே அந்த இடத்தை பயன் படுத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அந்த இடத்திற்கு எதிரே ஒரு குட்டையும், அதன் முன்பு சிறிய இடமும் இருக்கிறது. அது ஆட்காட்டுவெளி வாத்தியார் ஒருவருக்கு சொந்தமானது. அவர், பெரியாருக்கு இல்லாத இடமா? என் இடத்தில் நினைவு தூண் வைத்துக் கொள்ளுங்கள் என்று இடம் கொடுத்திருக்கிறார். என்ன செய்யலாம்? என்று என்னிடம் கேட்டார். 

நினைவு தூணுக்கு பதிலாக பெரியாரின் மார்பளவு சிலையை வைக்கலாம் என்று ஆலோசனை கூறினேன். அதற்கு ஆகும் செலவுகளை கொள்கை பிடிப்புள்ள, பெரியார் மீது மரியாதை உள்ள தி.மு.க., அதிமுக, வலது கம்யூனிஸ்ட் தோழர்கள் போன்றவர்களிடம் வசூல் செய்யலாம் என்றேன்.
அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். உங்கள் உதவியும் தேவை என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் சென்றுவிட்டார் தங்கவேலு. 

இன்னொரு நாள் தி.க.வீரபாண்டியன் என்பவரை அழைத்துக் கொண்டு பழக்கடைக்கு வந்தார் தோழர் தங்கவேலு, செங்கல் ஒருவர் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். சிமிண்ட் மூட்டைகளை ஒருவர் உதவுகிறார். விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 

முத்துப்பேட்டைக்கு சென்று நானாதனாவை (ந.தருமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) சந்தித்து வந்தோம். இங்கு ஆர்.எஸ்.(தோலி ஆர்.சுப்பிரமணியன்), ந.உ.சி (ந.உ.சிவசாமி) ஆகியோரிடமும் பேசி இருக்கிறோம். பெரியார் எல்லா மக்களுக்கும் சொந்தமானவர். அதனால், எல்லா கட்சியினரையும் அழைத்து பேச வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள், போன்ற விபரங்களை தெரிவித்தார்.

அந்த சிலை வைக்கும் இடத்தைச் சுற்றி என் பெரிய மாமனார், சின்ன மாமனார் வீடுகள் இருந்தன. மாப்பிள்ளை தான் பின்னால் இருந்து கலகம் செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், அதன் முழு முயற்சியும் தங்கவேலு, வீரபாண்டியன் போன்றோருடையது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். 

ஐயர் வைத்த திருமணம் வேண்டாம் என்று திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் என்னை அப்படி நினைத்தார்கள்.

சுயமரியாதை, பெண் விடுதலை என தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த மக்களின் தலைவன் சிலையை அனைவரும் பாதுகாக்க வேண்டும். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக அந்த பகுதி மக்களுக்கு எதிராக போட்டியாக சிலையை திறப்பது, அவரது கருத்துக்கு எதிராக அமையும் என்று நினைத்தேன். இப்போது சுமுகமாக விழா நடத்த இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன். 

அதனால், தெருவில் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற என் கருத்தையும் அவர்களிடம் கூறினேன். தோழர் தங்கவேலு அதற்கு சம்மதித்தார். 

அனைவரின் ஒத்துழைப்போடு பெரியார் சிலை தோலி ரோடு வளைவில் திறக்கப்பட்டது. அனைத்துக் கட்சி தோழர்களும் கலந்து கொண்டு  விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள். 

அதன் பிறகு எனது மகனுக்கு பெயர் சூட்டும் விழா பெரியார் சிலை முன்பு சிறப்பாக நடைபெற்றது. மகன் பிறந்த முப்பதாம் நாள் சென்று அவனைப் பார்த்தேன். பெயர் சூட்டு விழாவை சிறப்பாக நடத்திவிட்டு, என் மனைவியையும், மகனையும் சென்னைக்கு அழைத்து வந்தேன். 

இப்போது அங்கு செல்லும் போதெல்லாம் உடைந்த நிலையில் உள்ள பெரியார் சிலையை மட்டும் பார்க்க முடிகிறது. 

கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, சாலையில் தாறுமாறாக ஓடி வந்து பெரியார் சிலையின் மீது மோதி, உடைத்து நின்றிருக்கிறது. 

அந்த சிலை மட்டும் இல்லை என்றால், அங்குள்ள குட்டைக்குள் லாரி கவிழ்ந்திருக்கும். அதில் இருந்த இரண்டு பேரும் உயிரை இழந்திருப்பார்கள் என்கிற தகவல் கிடைத்தது. 

தன் சிலையை பலி கொடுத்து ஆறு பேரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது அந்த பெரியார் சிலை.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...