Saturday, August 15, 2015

35. மாமாவிடம் மறுமணம் பற்றிய பேச்சு? - ஜி.பாலன்


ஜி.பாலன்

ஊருக்கு திரும்பிய பிறகு அந்தமானில் நடந்த சம்பவங்களை பூசவள்ளியின் வாழ்க்கை குறித்து பிரசிச்னைகளை மைத்துனர் நாடிமுத்துவிடம் தெரிவித்தேன். அவர் உடனே அந்தமான் புறப்பட்டு சென்று அண்ணாத்துரையை அடித்து உதைத்து கொண்டு வருகிறேன். என் தங்கை வாழ்க்கையை கெடுத்துவிட்டான் என்று கோபத்தில் கொதித்தார். 

இதெல்லாம் பேசி இனிமேல் வேலைக்கு ஆகாது. அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நான் கூறியதும் அதிர்ச்சி அடைந்தார்.

இருபத்தி எட்டு வயதுதான் ஆகிறது. இனி காலம் முழுவதும் அவர் கட்டிய தாலிக்காக இவள் வாழ வேண்டுமா?. அண்ணாத்துரையின் பெற்றோரை வரவழைத்து பேசி தீர்த்துவிட்டு, அடுத்த வாழ்க்கையைப் பற்றி பேசலாம் என்று கூறினேன். 

கணவர் இருக்கும் போது இன்னொருவருக்கு திருமணம் செய்து வைப்பது சரியாக இருக்குமா? என்று கேட்டார். 

கணவர் இருக்கும் போது இன்னொரு திருமணம் செய்வது தவறு. ஒருவனுக்கு ஒருத்திதான் நமது பண்பாடு. ஆனால், இங்கு கணவர் இன்னொருத்தியுடன் இருக்கிறார். அதனால் ஒருவனுக்கு இரண்டு பேர் இருப்பது தவறான பண்பாடாக இருக்கும் என்று கூறினேன். 

பையனை என்ன செய்வது என்று கேட்டார். அவனை நான் வளர்த்துக் கொள்கிறேன் என்றேன். 

முதலில் அவர் யோசித்தாலும் பிறகு இது நல்ல சிந்தனையாக இருக்கிறது என்று தெரிவித்தார். இதை நான் பேச முடியாது. அப்பாதான் அவரை மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அதனால், அப்பாவிடம் பேசுங்கள் என்றார்.

அவரிடம் நான் பேசுவேன். மரியாதை என்கிற பெயரில் நான் திண்ணையில் நின்றால், அவர் கொல்லைக்கு சென்று விடுகிறார். இப்படி இருக்கும் போது முகத்துக்கு நேரே பேச வேண்டியதை எப்படி எட்டி எட்டி நின்று பேசுவது என்று கேட்டேன். 

இந்த மாதிரி விஷயங்களை நான் அப்பாவிடம் சொன்னால், அவர் கேட்க மாட்டார். நீங்கள்தான் பேச வேண்டும் என்று நாடிமுத்து ஒதுங்கிக் கொண்டார்.

ஒரு ஆணுக்கு இன்னொரு ஜோடி சேர்ப்பது என்றால் தவறாக நினைக்காத இந்த சமூகம், பெண்ணுக்கு என்றால் ஒதுங்கிவிடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?

இவரிடம் பேசியது போலவே, இராமையாத் தேவர் மாமாவிடம் சென்று பேசினேன். எல்லாவற்றையும் கேட்டவர், பிறகு, ‘’நாம்ம சாதியில் அறுத்துக் கட்டுற பழக்கம் இல்லையே தம்பி’’ என்றார்.

காலம் முழுவதும் அவள் அப்படித்தான் வாழ வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? என்று திருப்பிக் கேட்டேன். 

என்ன பண்ணணும்னு சொல்றீங்க? என்று கேட்டார்.

திருமணத்திற்கு எப்படி பேசி முடித்தீர்களோ?, அதே போல திருமண முறிவுக்கும் பேசி முடிவு செய்யுங்கள்?. அவருக்கு இவள் இல்லை என்கிற மனநிலையை முதலில் செய்தாலே போதும். அடுத்த திருமணம் பற்றி வேண்டும், வேண்டாம் என்பதைப் பற்றி பிறகு முடிவு செய்யலாம். பூசவள்ளி முடிவுக்கு விட்டுவிடலாம் என்றேன். 

‘’சரி தம்பி. என் மகளை என்னிடம் வந்து அந்தப் பையன் வேண்டாம் என்று சொல்லச் சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்’’ என்றார். 

‘’அவுங்க வந்து எப்படி அப்பாகிட்டே சொல்வாங்க. பெரியவுங்க நீங்கதான் முடிவு செய்யணும்’’ என்று கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை.
கௌரவ குறைச்சல் என்று அவர் நினைத்தார். அதற்கு மேல் அவரிடம் நான் பேசவில்லை. 

பெண் அடிமையாக இருக்க வேண்டும் என்கிற மனம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்ள முடிவதில்லை. எல்லாவற்றுக்கும் ஆண்களை சார்ந்து நிற்க வேண்டியதாக இருக்கிறது. ஆண்களும் மகள் என்று கூட பார்க்காமல் கௌரவம் பார்க்கிறார்கள். 

கிராமத்தில் ஒரு பெண் சிறிய வயதில் கணவனுடன் சேர்ந்து வாழாமலோ, அல்லது கணவன் இறந்து விதவையாக வாழ்ந்தாலோ, அய்யோ இந்தப் பெண்ணுக்கு இந்த வயசில் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படும் ஆண்களும், பெண்களும், பிறகு இன்னொரு ஆணுடன் அந்தப் பெண் பேசுவதை பார்த்தால், இல்லாததையும், பொல்லாததையும் பேசி கதைக் கட்டி விடுவது வாடிக்கையாக இருப்பதை நான் பல முறைப் பார்த்திருக்கிறேன். 

இயற்கையை மீறி யாரும் வாழ முடியாது. இயற்கைக்கு உட்பட்டுதான் நாம் வாழ்கிறோம். நாம் தான் வாழ்க்கைக்கான விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறோம். அது நன்றாக வாழ்வதற்குதானே தவிர, வாழ்க்கையை கெடுத்துக் கொள்வதற்கு இல்லை. நன்றாக வாழ்பவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால், இதே போல துணையின்றி நிற்பவர்களுக்கு வழி கட்ட முன் வரவேண்டும். 

பூசவள்ளியும் மறுமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாதவளாக இருந்தாள். அப்போது அவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லை என்றே சொல்ல வேண்டும். நான் என் அளவுக்கு போராடிப் பார்த்தேன்.

கொஞ்ச நாள் போகட்டும் என்று என் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். வயல் வேலைகளை பார்த்து வந்தேன். நேரம் கிடைக்கும் போது படம் பார்க்க செல்வேன். மோசமான ஒரு படத்தைப் பார்க்க நேர்ந்தால், அன்று இரவு முழுக்க எனக்கு தூக்கம் பறி இருக்கிறாயே? என்று என்னை நானே திட்டிக் கொள்வேன். 

சம்பாதித்து எப்போது நிலத்தை திருப்புவது? அதை சாகுபடி செய்ய மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு எப்போது திரையுலகிற்கு செல்வது? என்று பலவாறு கணக்கு போட்டுக் கொண்டு ஒரு நாள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். 

திரையுலகிற்கு சென்றால் என் திறமையை வெளிக் கொண்டு வரமுடியும். இல்லை என்றால் விவசாய கூலியாகவே என் வாழ்க்கை முடிந்து போகும் என்று புலம்பியதை கவனித்த என் மனைவி தமிழ்ச் செல்வி, நீங்கள் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் சென்னைக்கு செல்லுங்கள். நான் வேலை செய்து உங்கள் அம்மாவையும் என்னையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினாள். 

இதற்கு அண்ணனும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதே போல அவளுடைய அம்மாவும், அக்காவும் ஒப்புக் கொள்ளவில்லை. 

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்) 

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...