Sunday, August 9, 2015

29. தாலி கட்டாமல் திருமணமா? - ஜி.பாலன்




தங்கை திருமணம்தான் முக்கியம். எனக்கு தேவை இல்லை என்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால், எனக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார், அண்ணன் சண்முகம்.  நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. 

மறுநாள் என்னுடைய சின்னம்மாள் மருதாம்பாள், இன்னொரு சின்னம்மாள் ராஜேஸ்வரி, சகோதரி வைரக்கண்ண, அண்ணன் சண்முகம், பெரியப்பா கிருஷ்ணமூர்த்தி, மாமா பக்கிரிசாமி, மைத்துனர் நாடிமுத்து என ஏழு பேர் கொண்ட குழு ஒரு காரிலும், இரு டூ வீலர்களிலும் பெண் வீட்டுக்கு சென்றனர்.

அவர்களுக்கு பெண் பிடித்துவிட்டதாகவும், உடனடியாக நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் என தீவிரம் காட்டினார்கள். 

தங்கையை திருமணம் செய்து கொடுத்துவிட்டு, திரையுலகிற்கு  செல்ல வேண்டும் என்கிற என் ஆசையில் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள் என்று கோபப்பட்டேன். இனி காலம் முழுவதும் விவசாய வேலைப் பார்க்க வேண்டியதுதான் என்று உள்ளுக்குள் குமுறினேன்.

இதனால், பெண்ணைப் பார்க்க சென்ற போதும், நிச்சயதார்த்தம் நடந்த போதும் நான் அங்கு செல்லவில்லை. நிச்சய்தார்த்தம் நடந்த மறுநாள் பெண் கருப்பு நிறமாக இருப்பதாகவும், பல்லு எடுப்பாக இருப்பதாகவும் என்னிடம் வந்து சிலர் குறைப்பட்டுக் கொண்டனர்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. அண்ணன் விருப்பப்பட்டு செய்கிறார். எனக்கோ திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து பதினெட்டு நாளில் திருமணம் என்று ஓலை எழுதப்பட்டுவிட்டது. 

இதனால், அண்ணன் மீது அதிக கோபம் வந்தது. அதை அடக்க முடியவில்லை. கோபத்தில் வீட்டின் எதிரே இருந்த உலகநாதன் சித்தப்பா வீட்டு வேலிகளை பிரித்து வீசினேன். அம்மாவும், தங்கையும் சமாதனம் செய்தார்கள். 

வேண்டாம் என்று நினைக்கும் எனக்கு எதற்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுகிறார். தங்கை திருமணத்தில் ஆர்வம் காட்ட வேண்டியது தானே? என்று கத்தினேன்.

அக்காவும் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு இப்படி செய்கிறாரே என்று அவர் மீதும் கோபம் வந்தது. அவரிடம் நேரில் சென்று கேட்டேன். 

கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறேன். மீறி ஏற்பாடு செய்கிறீர்கள். சிவப்பா, உழைப்பாளியாக ஒரு பெண்ணைப் பார்த்து, அவளை பேசுங்கள் என்றேன். அதற்கு நேர்மாறாக வீட்டுக்குள் இருக்கும் பெண்ணை கருப்பாக பார்த்து வந்திருக்கிறீர்கள்? என்று அவரிடம் ஆதங்கப்பட்டேன்.

கருப்பாக இருந்தாலும் லட்சணமாக இருக்கிறாள். அழகான பொண்ணு என்று நீ சினிமாவில் நடிக்க வைக்கவா போகிறாய்?. பொண்ணு நல்ல உழைப்பாளி மாதிரி இருக்கிறாள். உன்னோடு அவளும் சேர்ந்து பாடுபடுவாள். உனக்கு நான் தப்பாவா முடிவு செய்வேன் என்று என்னை சமாதனப் படுத்தினார், அவர். 

அதன் பிறகு அவர்கள் விருப்பபடியே என்ன செய்கிறர்களோ செய்யட்டும் என்று நினைத்த நான், திருமணமாவது என விருப்பபடி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்?.

என்ன? தாலி கட்டாமலா? என்று கோபப்பட்டார் அண்ணன்.

நான் பெண்களை அடிமையாக கருதக் கூடாது என்கிற சிந்தனை உள்ளவன் என்பதை அண்ணன் உணர்ந்திருந்தார். அதனால், தாலி கட்டுவது அடிமைப் படுத்துவது போல என்று சொல்லிவிடுவேன் என்று பயந்தார். பழக்க வழக்கத்திற்கு மாறாக நான் எதையாவது கேட்பேன் என்று கருதினார்.

பெரியார் தொண்டர்கள் முன்னிலையில்,  சீர்திருத்த திருமணம் செய்து கொள்வேன். பத்திரிகையில் சாதிப் பெயர் போடக் கூடாது என்று கூறினேன்.

அண்ணனுக்கு கோபம் வந்தது? எழுந்து வெளியே சென்றார்.

(படத்தில் இருப்பது என் மாமனார் ஆர்.தர்மலிங்கம், மாமியார் இராமாமிர்தம்)

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...