Sunday, April 22, 2018

என் திரையுலக அனுபவங்கள்


G.BALAN, FILM DIRECTOR
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது, நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ‘என்னுடைய திரையுலக வாழ்க்கை அனுபவங்கள்’ என்கிற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எனது முகநூலில் எழுதி வந்தேன். 

அந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த பதிவு 

சினிமாத்துறையில் இயக்குநராக வேண்டும் என்கிற பெரிய கனவுகளுடன், நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் சென்னை வந்த எனக்கு, இங்கு ஏற்பட்ட அனுபவங்களும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும் அதிகம். அந்த நினைவுகளை ஞாபகங்கப்படுத்தி பார்க்கும் முயற்சியாக பிறந்தவைகள்தான் இந்த கட்டுரைகள்.

படிக்க சுவராஸ்யம் கூட்ட வேண்டும் என்பதற்காக எதையும் சேர்க்கவில்லை. அதே போல கற்பனை கிடையாது. நான் வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்து, அதை அசைப் போட்டு எழுதி இருக்கிறேன்.

இந்த கட்டுரைகளை முகநூலில் எழுதிய போது,சில நண்பர்கள் தொடர்ந்து படித்து, நேரிலும், அலைபேசி வாயிலாகவும் பாராட்டு தெரிவித்தனர். சிலர் கட்டுரையின் இறுதியில் விருப்பம் தெரிவத்தனர். சிலர் கருத்து பதிவிட்டனர்.

ஒவ்வொரு நாளும் எழுத அமரும் போதுதான் அந்த கட்டுரைக்கான தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. என் நினைவுகளில் நீந்தி பல சம்பவங்களை ஞாபகப்படுத்தி பார்த்து சுடசுட எழுதினேன். சுயசரிதை எழுதும் அளவுக்கு நான் உயர்ந்துவிடவில்லை. அதே நேரம் என்னுடைய அனுபவத்தை இறக்கி வைப்பதில் சுகம் கண்டேன். 

நான், யாருடைய சிபாரிசிலும் இந்த இடத்திற்கு வரவில்லை. ஒரு சிறிய குக்கிராமத்தில் இருந்து வந்து, பெரிய படிப்பு எதுவும் இல்லாமல், எந்த புரிதலும் இலாமல், சென்னைப் பக்கமே வந்திராத நான்,  இந்த துறைக்கு வருவது என்பது என்னைப் பொருத்தவரை பெரிய விஷயமே.

இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தெரிந்தவனாக இருக்கிறேன். பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து ஜாம்பவான்களுடன் பேசி பழகிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். பிரிண்ட் மீடியா, டி.வி.மீடியா, சினிமா மீடியா என இந்த மீடியாக்களின் தொழில் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறேன்.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன்பு, நான் முயற்சி செய்த காலத்தில் திரையுலகம் ஒரு இரும்புக்கோட்டை போல இருந்தது. இதனுள் நுழைவது கடினமாக இருந்தது. 

நடைமேடை இல்லாத இடத்தில் இருந்து ரயில் ஏற கஷ்டமாக இருக்கும். நடைமேடையில் நின்று ரயில் ஏறினால் எளிதாக இருக்கும். நடைமேடை போல யாராவது சினிமாவில் இருந்தால், அவர்கள் சிபாரிசு கிடைத்தால்  நாம் உடனே எந்த துறைக்கு செல்ல ஆசைப் படுகிறோமோ, அந்த துறைக்கு எளிதாக அவர் மூலமாக சென்று விடலாம்.

அதனால், நடைமேடை இங்கு அவசியமாக இருக்கிறது. நடைமேடை போல இங்கு எனக்கு தெரிந்தவர் கிடைத்திருந்தால், நான் எப்பதோ உதவி இயக்குநர் ஆக சேர்ந்து, அனுபவம் பெற்று, இயக்குநர் ஆகி இருப்பேன்.

அப்படி நடைமேடை இல்லாமல் நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டவன் நான்.  சென்னைக்கு வந்து பல நாட்கள் நடைபாதையில் படுத்து உறங்கி வாய்ப்பு தேடி இருக்கிறேன்.

பல அவமானங்கள், பல வேதனைகள், சோதனைகள் கடந்து இந்த இடத்திற்கு வந்திருந்தாலும், சமூகம் இல்லாமல் நான் இல்லை என்பதை அறிவேன். திரையுலகில் நான் அடியெடுத்து வைத்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பத்திரிகை தொடர்பாளனாக, பத்திரிகையாளனாக, எழுத்தாளனாக, இயக்குநராக நான் செயலாற்றி இருக்கிறேன்.

எனது இந்தப் பயணத்தில் நிறைய அனுபவம் பெற்றேன். அன்று முதல் இன்றுவரை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

பத்திரிகை தொடர்பாளர் என் ’குருநாதர்’ டைமண்ட் பாபு, தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., எஸ்.எஸ்.துரைராஜ், வி.சேகர், பார்த்திபன், பங்கஜ் மேத்தா, வெங்கட், சித்ரா லட்சுமணன், இசையமைப்பாளர் வீ.தஷி, பத்திரிகையாளர்கள் தேசிங்கு, திருவாரூர் குணா, தமிழ்மகன், சாருப்ரபா சுந்தர், சுந்தர்ராஜன், கடற்கரை, சிவக்குமார், ஸ்ரீதேவி குமரேசன் என பலர் என் வளர்சிக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை தனிதனியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவு பற்றிய உங்களின் விமர்சனங்களை வரவேற்கிறேன். என்னை மேம்படுத்திக் கொள்ள அந்த விமர்சங்கள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். 

நன்றி

என்றும் தோழமையுடன்
ஜி.பாலன் பாலனின் 50 ஆம் ஆண்டு பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு 


1 நான் திரையுலகை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?


G.BALAN
காலம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம்தான் அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

பணம் தேடவும், புகழ் தேடவும் நடக்கும் இந்த போராட்டத்தில் வெற்றி என்பது என்ன என்று தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் இந்த போராட்டத்தில் நாம் நினைத்தை அடைய நிறைய இழந்திருக்கிறோம் என்பதை மட்டும் உணர முடிகிறது.

ஆனால், பிடித்த விஷயத்திற்காக அதை தேடி ஓடிய அந்த போராட்டத்தில் மனம் நிறைய எதிர்ப்பார்ப்பும், நிம்மதியும் நிறைய இருந்திருக்கிறது. அதை அனுபவித்திருக்கிறேன். அதற்காக குடும்பத்தினரையும் என்னை நம்பி இருப்பவர்களையும் கஷ்டப்பட வைத்திருக்கிறேன்.

சரி. நான் திரையுலகை தேர்ந்தெடுக்க, என்ன காரணம் என்று நினைத்துப் பார்க்கிறேன். கலையுலகம் கலையில் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமே தேடிப் பிடித்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். நான் கலைஞானா? என்று நினைத்தால், அதற்கு பதில் தெரியவில்லை.

என்னுடைய சிறு வயதில் என் வயதொத்த சிறுவர் சிறுமிகளுடன் ஓடி பிடித்து விளையாடி இருக்கிறேன். தந்தி மர லைட் வெளிச்சத்தில் ஒளிந்து பிடித்து விளையாடி இருக்கிறேன். 

திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும் போது எங்களுக்குள் சண்டை வந்து விடும். விளையாடும் போது அழுவு‌னி‌ ஆட்‌டம்‌ ஆடி‌னால் அவர்கள் மீது எனக்கு கோபம் வரும். அதனால் அவர்களை சில சமயம் அடித்து இருக்கிறேன். அவர்கள் திருந்தும் வரை விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேன். விளையாட்டில் ஆர்வமும் நேர்மையும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான்.

நாங்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து எங்கள் கடைக்காரர் தாத்தா அமைதிப் படுத்த ‘கதை’ சொல்வார். கதை என்றதும் முதல் ஆளாக அவர் அருகில் சென்று அமர்ந்து ஆர்வத்துடன் கதை கேட்பேன். முருகேசன், பழனி, கடைசி வீட்டு தம்பி, கலையரசி, புஷ்பவள்ளி, ஜெயந்தி, தலையாரி வீட்டு  சின்ன பாப்பா, என எல்லோரும் அவரைச் சுற்றி வட்டாமாக அமர்ந்து கதை கேட்போம்.

ராஜாராணி கதை, மந்திரி கதை, பேய் கதை, கள்ள புருஷன் கதை என பல கதைகளை எங்களுக்கு அவர் சொல்வார். அதில் சஸ்பென்ஸ், த்ரில், நகைச்சுவை என எல்லாம் கலந்து இருக்கும். நாங்கள் ரசித்து சிரித்து கேட்போம். சில நாட்களில் விடுகதை போடுவார். பதில் சொல்வதில் போட்டி ஏற்படும். அதைப் பார்த்து அவர் ரசிப்பார். இப்படி எங்களுக்கு கதை சொல்லி ரசிக்க வைத்த எங்கள் கடைக்காரர் தாத்தா எனக்கு இப்போது கலைஞனாக தெரிகிறார்.

வீட்டுக்கு வந்து படுத்த பிறகும் அவர் சொன்ன கதை மனதில் படமாக ஓடும். கதையை எப்படியெல்லாம் சஸ்பென்ஸ் வைத்து சொல்கிறார் என்று நினைத்து பார்ப்பேன். அவர் கதை சொன்ன விதம், வசனம் என அனைத்தையும் நினைத்து ஆசைபோடுவேன்.

மறுநாள் பள்ளி இடைவேளையின் போது சக மாணவர்களிடம் அவர் சொன்ன கதையை அப்படியே சொல்வேன். அவர்கள் ஆசையோடு கேட்பார்கள். அந்த அனுபவம் மகிழ்ச்சியை தந்தது.

சக மாணவ, மாணவிகள் என்னிடம் தினமும் கதை கேட்க ஆர்வமாக இருந்தார்கள். வீட்டுக்குள் இருந்து கொண்டு வெளியே வரமுடியாமல் இருக்கும் ‘வயதுக்கு வந்த பெண்கள்’ கூட என்னை வரவழைத்து கதை கேட்பார்கள்.

‘’பாலு கதை சொன்னால் கேட்டுக்கிட்டே இருக்கலாம்’’ என்று அவர்கள் சொன்னது, இப்போது என் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இப்படித்தான் எனக்குள் கதை சொல்லும் திறன் வளர்ந்தது என்று நினைக்கிறேன்.

2 நாடகம் பார்க்க அப்பாவின் அனுமதி கிடைக்கவில்லை


CINEMA RASIKAR SANGAM AWARD VIZHAA
எனது கிராமத்திற்கு அருகில் ஆரியலூர் என்கிற கிராமம் இருக்கிறது. அங்கு கிழக்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் பங்குனி மாதம் பிறந்தால், வெகுவிமரிசையாக திருவிழா நடக்கும். திருவிழாவையொட்டி மூன்று நாட்களுக்கு ‘புதுக்கோட்டை முஸ்தபா’ குழுவினரின் புராண நாடகங்கள் நடைபெறும்.

முதல் நாள் ‘வள்ளி திருமணம்’, இரண்டாவது நாள் ‘பவளக்கொடி’, மூன்றாவது நாள் ‘அரிச்சந்திர மயான கண்டம்’ என மூன்று நாடகங்கள் நடத்துவார்கள். அந்த நாடங்களை காண சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக  திரள்வார்கள்.

நாடக நோட்டீஸ் வந்த நாளில் இருந்து எனக்குள் நாடகம் பார்க்கப் போகிற ஆர்வமும், எதிர்ப்பார்ப்பும் மேலோங்கி நிற்கும். ஒவ்வொரு நாளையும் தள்ளுவது கஷ்டமாக கூட இருக்கும். அதைவிட கஷ்டம், அப்பாவிடம் அனுமதி பெறுவது.

வாசலில் பாய் விரித்து படுத்திருப்போம். தெற்கு காத்து அள்ளி வந்து வீசும். படுத்தால் அப்படி ஒரு தூக்கம் வரும். ஆனால், அன்று தூக்கம் வரவில்லை. நாடகம் பார்க்கப் போகிற ஆர்வத்தில் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லோரும் தூங்காமல் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தோம். நொடிக்கு ஒரு தடவை அப்பா வருகிறாரா? என்று  தெருவை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். 

நாடகம் இரவு பத்து மணிக்கு தொடங்குவார்கள். அதற்குள் அப்பா வரவேண்டும். அனுமதி தர வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன்.

கிராமத்தில் எத்தனை வீட்டில் நெல்லு கொட்டி வைக்க உதவும்  பத்தாயாம் இருக்கிறது, எத்தனை வீட்டில் குதிர் இருக்கிறது என்று அக்காள் கணக்கு போடுவாள்.

வடக்கு தெரு கடைசி வீட்டில் இருந்து கிழக்கு தெரு சாரங்க ராஜூ வீடு வரை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பத்தாயாங்கள், குதிர்கள் கணக்கு போட்டு நேரம் கழியும்.

எத்தனை வீட்டில் பழுத்த கிழவன், கிழவிகள் இருக்கிறார்கள். அவர்களில் யார் யார் சீரியசாக இருக்கிறார்கள். முதலில் யார் மண்டையை போடுவார் என்று எனது அண்ணன் வில்லங்கமாக கணக்கு போடுவார்.

எனக்குள் அப்பா எப்போது வருவார் என்கிற எதிர்ப்பார்ப்பும், நாடகம் தொடங்கிவிடுமே என்கிற தவிப்பும் இருப்பதால், அவர்கள் பேச்சுக்கள் மனதில் பதியாது.

ஒரு வழியாக பத்து மணிக்கு அப்பா வந்தார். உட்காந்திருந்த நாங்கள் டப்பு, டப்பு என்று படுத்துக் கொண்டோம். இதைப் பார்த்து அம்மா சிரித்துக் கொண்டார்.

அப்பா என்றால் அப்படி ஒரு பயம். அது மரியாதையால் வருகிற உணர்வு. அப்பா கயிற்று கட்டிலில் அமர்ந்து, நாங்கள் சாப்பிட்டு விட்டோமா?. என்ன சாப்பாடு? என்று விசாரித்தார்.

நாங்கள் நாடகம் பார்க்கப் போகிற ஆவலில் இருப்பதையும், தூங்காமல் இருப்பதையும் தெரிவித்தார் அம்மா.

‘’இன்னைக்கு வேண்டாம். கடைசி நாள் போகலாம். நாடகத்துக்கு பணம் போடணும்’’ என்றார் அப்பா.

எனக்கு அழுகையே வந்துவிட்டது

‘’போன வருஷம் பார்த்த நாடகத்தையே மறுபடியும் பார்க்கணுமா? இந்த வருஷம் வேற நாடகம் பார்க்கலாமே’’ என்று அம்மா, அப்பாவிடம் ஆலோசனையாக தெரிவித்தார். அப்பாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் பார்வை கண்டு அம்மா வீட்டுக்குள் சாப்பாடு எடுக்க சென்றுவிட்டார். 

அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்த அம்மா, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அப்பா அனுமதி அளித்தார். செலவுக்கு அம்மாவிடம் பணம் கொடுத்தார்,

எங்களுக்கு குஷி. அனைவரும் எழுது உட்கார்ந்தோம். பாயை சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு தயாரானேன்.

இதை பார்த்த அப்பா, என்னை மட்டும் போக வேண்டாம் என்றார்.

எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்து விட்டது. கண்களில் நீர் திரண்டது.

ஜெகநாதன் மகன் சித்திரவேலுவை, அவனது பெரியப்பா, ராமன் தத்து எடுத்துக்கொள்ள விழா வைத்திருப்பதாகவும், அங்கு என்னை அழைத்து செல்லப் போவதாகவும் தெரிவித்தார்.

3 நாடகம் பார்க்கும் போது சண்டை


G.Balan
நிலவு வெளிச்சத்தில் ஒத்தையடி பாதையில், வயல் வரப்பு வெடுப்புகளில் காலை இடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக குறுக்கு வழியில் விரைந்து வந்தோம். நாடகம் தொடங்குவதற்கு முன் திரையை மூடிக் கொண்டு அனைவரும் சேர்ந்து பாடும் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள்.

காளியம்மன் கோவிலை பார்த்தபடி நாடக மேடை அமைத்திருந்தார்கள். கோவிலுக்கும் நாடக மேடையை இணைத்தும் நீளமான பந்தல் போட பட்டிருந்தது. பந்தலுக்கு கீழே ஆண்கள் அமர்திருந்தார்கள். பந்தலுக்கு வலது புறத்தில் கயிறு கட்டி பெண்களுக்காக இடம் ஒதுக்கி இருந்தார்கள்.

மேடைக்கு அருகில் இடம் கிடைக்கவில்லையே என்கிற வருத்ததுடன் இடம் தேடினேன். அண்ணன் செலவுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு குலுக்கல் கொட்டக் கடைக்கு விளையாட சென்று விட்டார். அக்கா, தங்கையுடன் காளியம்மனை வணங்கிக் கொண்டிருந்தார் அம்மா.

கருப்பண்ணா சாமி சிலைக்கு அருகில் சிறிய இடம் தெரிய, அங்கு சென்று பாயை விரிக்க முயன்ற போது, காலை நீட்டி அமர்ந்திருந்த ஒரு கிழவி முறைத்துப் பார்த்தாள். நான் கண்டு கொள்ளாமல், பாயை விரித்து அதில் அமர்ந்தேன். நான் அமர்ந்திருக்கும் இருக்கும் இடம் தெரியாமல் அம்மா பாதையில் நின்று என்னை தேடினார்.

‘’கோமாளி வந்துட்டேன்.... கூத்து ஆட்டிட வந்துட்டேன்...

வாங்க வாங்க உட்காருக்காங்க... வ(ப)ந்த காலில் நீக்காதீங்க...

பாதையை விட்டு விலகி... பண்போடு, அன்போடு

உட்காருங்க... உட்காருங்க... உட்கா... ருங்க... 

அருமை உள்ள அம்மா மாரே... அய்யா மார்களே...

உங்க ஆடம்பர பேச்சுக்களை நிப்பாட்டுங்களேன்.... ‘’

என்று பப்பூன் வரவேற்று பாடி கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக நான் அமர்ந்திருக்கும் இடத்தை என் கை ஆசைவின் மூலம் தெரிந்து கொண்டு வந்தார் அம்மா.

உதட்டின் மீது இரு விரல்களை வைத்து புருட் புருட் வெற்றிலை எச்சிலை துப்பினால் அந்த கிழவி. அதன் சாரல் என் மீது தெறித்தது. அதை கண்டு கொள்ளாமல் நாடகம் பார்ப்பதில் கவனம் செலுத்தினேன்.

அம்மா, அக்கா, தங்கை, தம்பி என அனைவரும் அமர்ந்த பிறகு இடம் நெருக்கடியானது. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்திய மாதிரி, கொஞ்சம் இடம் கொடுத்த அந்த கிழவி, எங்கள் நெருக்கடியால் சுதந்திரமாக அமர்ந்து எச்சிலை துப்ப முடியாமல் அவதிப்பட்டார். அதை அவளது முணுமுணுப்பின் மூலம் தெரிந்து கொண்டேன்.

ஆனால், எங்க அம்மாவுக்கு அது கோபத்தை ஏற்படுத்தி விட்டது. சாதி தராதரம் தெரியாமல், அவள் முறைக்கும் நிலைக்கு வந்து இடம் பிடித்தானே என்று என் மீது ஆத்திரத்தை காட்டினார்.

சாதி, மத வேறுபாடுகளை மறந்து மக்களை இணைப்பது கலை.

நாடகம் நடக்கும் இடமாகட்டும், திரையரங்கு ஆகட்டும் அங்கெல்லாம் சாதியை மறந்து மக்கள் மக்களாக அமர்ந்து ரசிக்கிறார்கள். அப்படி மனதை மகிழ்ச்சியாக ஆக்கி செல்ல வைக்கிறது கலை.
 
குறவர் குலத்தைச் சேர்ந்த வள்ளியை காதலித்து கரம் பிடிக்கிறார் முருக கடவுள். அப்படிப்பட்ட நாடகத்தை கொட்ட கொட்ட கண் விழித்து விடிய விடிய ரசித்து பாராட்டி மகிழும் இவர்கள், நிஜ வாழ்க்கையில் மட்டும் சாதிப் பார்ப்பது ஏனோ என்று தெரியவில்லை.

பழையவர்கள் பழையவர்கள்தான். புதியவர்கள் புதியவர்கள்தான். எனது அம்மா பழையவர். சாதிப் பற்று அதிகம் உள்ளவர். அதனால் அனைவருடன் சேர்ந்து அமர்வது அவருக்கு பிடிக்காத ஒன்று.

நாடகம் பார்த்து திரும்பியதும் அனைவரையும் குளிக்க வைத்து, அமர்ந்திருந்த பாய் முதற்கொண்டு கழுவி, தீட்டை குளத்தில் விட்டு சென்றால்தான் அவருக்கு நிம்மதியே வரும்.

அப்படி இருக்கும் போது இப்படி முறைத்துக் கொண்டு ஏன் நாடகம் பார்க்க வேண்டும்?.

பப்பூன் வரவேற்று பாடி சென்ற பிறகு, அவருக்கு ஜோடியாக நடிக்கும் பெண்மணி வந்து ஆடினார். பாட்டும், ஆட்டமும், அவர் பாவாடை வட்டமாக சுற்றுவதையும் பார்த்து ஆண்கள் கூட்டம் குஷியில் கை தட்டி ரசித்தது.

எனக்கு எதிரே அமர்ந்திருந்த பெண்மணி, அவளுக்கு எதிரே மெய் மறந்து நாடகம் பார்த்த இரு பெண்களின் தாவணிகளை இணைத்து முடிச்சு  போட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் அதை கவனிக்காமல் நாடகத்தில் ஒன்றிப் போய் இருந்தார்கள். தலைமுடியில் கட்டிய ரிப்பனையும் கூட இணைத்தாள் அவள்.

பப்பூன் வேடம் போட்ட முஸ்தபாவும், அவருக்கு ஜோடியாக நடிப்பவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தி பேசிக் கொண்டார்கள். அந்த காட்சிகள் நகைச்சுவையாக இருந்தது. 

உனக்கு எந்த ஊரு?

புதுக்கோட்டை

எனக்கும்தான்.

புதுக்கோட்டையில் எந்த இடம்?

எனக்கு மேல ரெண்டாவது ...... வீதி

எனக்கு கீழே மூணாவது.... வீதி

இப்படி அவர்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனம் பேசும் போது, ஆண்கள் பகுதியில் குபீர் சிரிப்பு. அந்த சிரிப்பு அலைகள் அடங்க வெகு நேரமானது.

ராஜ்பார்ட் வந்து ‘’சங்கீத மீனா தரத்தின் மதியே’’ என்று பாட துவங்கிய போது மேடைக்கு எதிரே இருக்கும் இளைஞர் கூட்டம் டீ குடிக்கவும், தம் அடிக்கவும் எழுந்தார்கள்.

அம்மா சொல்லியும் கேட்காமல் அங்கு சென்று மேடைக்கு எதிரே இடம் பிடித்து அமர்ந்து கொண்டேன்.

பந்தல் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த ஒரு குண்டன், தூக்கம் சொக்கவே சிறிது நேரத்தில் குறட்டை விட ஆரம்பித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனுக்கு அது பிடிக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த அவன், பிறகு தனது சட்டைப் பையில் இருந்த மூக்கு பொடி டப்பாவை எடுத்து, இடது கை ஆட்காட்டி விரலில் பொடியை கொட்டி, அந்த விரலை அவர் மூக்கு எதிரே நீட்டினான்.

அவர் மூச்சு இழுத்த போது, பொடி மூக்கு வழியே தலைக்கு ஏறியது. அதன் பிறகு, அவர் காச்சு மூச்சு தும்மினார். பிறகு கோபத்தில் கொதித்தவர் அங்கும் இங்கும் பார்த்தார்.

யார் இப்படி செய்திருப்பார் என்று அவருக்கு தெரியவில்லை. என்னை பார்த்து ‘’நீயா’’ என்பது போல கேட்டார். நான் இல்லை என்றேன். ஒவ்வொருவரையாக பார்த்து வந்தவர், கண்டுகொள்ளாமல் நாடகத்தை பார்த்த அந்த இளைஞனை கவனித்தார். பையில் இருந்த பொடி டப்பா அவனை காட்டிக் கொடுத்துவிட்டது.

அவனை கொத்தாக பிடித்து நாலு சாத்து சாத்தினார். பதிலுக்கு அவனும் பளார் விட்டான். கட்டிக் கொண்டு இருவரும் புரள அந்த இடம் களேபரமானது. 

என்ன நடக்கிறது என்று தெரியால் சிலர் பீதியில் பேந்த பேந்த முழித்தனர். மேலே விழுந்து விடுவார்களோ என்கிற பயத்தில் சில ஆண்களும், பெண்களும் எழுந்து தெறித்து ஓடினார்கள். நாடகம் தடைப்பட்டது.

நாடக அமைப்பாளர்கள் பிரச்ச்னைக்குரிய அவர்களை பிரித்து அழைத்து சென்றனர். ஒலி பெருக்கியில் ஒருவர் கூட்டத்தை அமருமாறு அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார். என் அம்மா ஓடி வந்து என்னை பற்றிக் கொண்டு இழுத்து சென்றார்.

ஒரு வழியாக அமைதி திரும்பி மீண்டும் நாடகம் களை கட்ட ஆரம்பித்தது. ஆனால், அம்மா எங்களை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். நாடகம் பார்க்க முடியவில்லை. ஒரு ஜவ்வு மிட்டாய் கூட வாங்க முடியவில்லை என்று கத்தினேன்.

இந்த வருட திருவிழாவில் புல்லாங்குழல் ஒன்றும், பீபீ ஒன்றும் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதும் போதும், தென்ன ஓலையில் பீப்பி செய்து ஊதும் போதும் இந்த திருவிழாவில் புல்லாங்குழல் ஒன்று வாங்க வேண்டும் என்று பல மாதங்களாக கனவு கொண்டிருந்தேன். அதற்கு அந்த சண்டைக்கார்கள் சங்கு ஊதிவிட்டனர்.

விடிய விடிய நாடகம் நடைபெற்றது. ஸ்பீக்கரில் வசனங்களையும் இசையையும் கேட்டுக் கொண்டே இருந்தது மனம். நடுநடுவே நிதி உதவி செய்தவர்கள் பெயரையும் வாசித்தார்கள். அதில் அப்பா உதவிய தொகையும் வாசிக்கப்பட்டது.

அப்பாவும் அங்குதான் இருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. சித்திரவேலு ‘தத்து’ விழாவுக்கு சென்று விட்டு நாடகத்திற்கு வந்திருப்பார். நாங்கள் எங்கு அமர்ந்திருக்கிறோம் என்று தேடி பார்த்திருப்பார்.

சாதி பார்க்காமல் சித்திரவேலு விழாவுக்கு சென்றவர் அவர். என்னையும் அழைத்து செல்ல நினைத்தார். எனது வெம்பிய முகத்தைப் பார்த்த அவர், நாடகத்திற்கு செல்ல ஆசைப்படுகிறேன் என்று தெரிந்ததும் அனுப்பி வைத்தார்.

அப்படிப்பட்ட அப்பா, என் நாடகத்தையும் பார்த்து ரசித்தார்.

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...