Sunday, April 22, 2018

9 தியேட்டர் கட்டிய அனுபவம்


ஜி.பாலன் 
ஆரியலூர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்ற போது, ஒரு சின்ன டப்பா மாதிரியான வடிவத்தில் இருந்த சினிமா காட்டும் கருவியை கண்டு வியந்தேன்.

முன்பக்கம் லென்ஸ் வைத்து, அதன் வழியே ஒரு கண்ணை மூடிக் கொண்டு இன்னொரு கண் வழியாக பார்த்தால் உள்ளே சினிமா படம் தெரிந்தது. சிறு சிறு துண்டு பிலிம்களை இணைத்து வைத்திருந்தனர். சைடில் இருந்து விரலால் முறுக்கினால் ஒவ்வொரு படமும் வந்து போகும்.

அதைப் பார்த்ததும் எனக்கு அது அதிசயமாக இருந்தது. உடனே அம்மாவிடம் சென்று அழுது அடம் பிடித்து பணத்தை வாங்கி வந்து அந்த சினிமா கருவியை வாங்கினேன்.

நான் மட்டும் அல்லாது மற்ற நண்பர்களையும் படம் பார்க்க வைத்து பரவசம் அடைந்தேன். மறுநாள் என் மாமா மகன் பழனி ஆர்வமாக பார்க்கிறேன் என்று அதை கீழே போட்டு உடைத்துவிட்டான். டப்பா உடைந்து போனதால், என் மனம் நொறுங்கி போனது. கோபத்தில் அவனை நாலு சாத்து சாத்திவிட்டு, லென்ஸ் மற்றும் துண்டு பிலிம்களை பொறுக்கிக் கொண்டு திரும்பினேன்.

அந்த வருடம் வீட்டு கூரைக்கு பண்ணல் போடவில்லை. அதனால் கிழக்கே சூரியன் உதித்தால், கீற்றின் சிறு சிறு துவாரத்தின் வழியே வெளிச்சம் வீட்டுக்குள் எட்டிப் பார்க்கும். அந்த வெளிச்சம் தரையில் பார்க்க வட்டமாக இருக்கும்.

அதைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்த நான், அந்த வெளிச்சத்தின் மீது விரலை நீட்டினேன். தரையில் விரலின் நிழல் தெரிந்தது. கைகளில் அந்த வெளிச்சத்தை பிடித்து மேலும், கீழும் ஏத்தி இறக்கி விளையாடினேன். ‘’அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக’’ என்பது போல அந்த செய்கை இருந்தது.

முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் அந்த வெளிச்சத்தை ஏந்தி நாலா புறமும் திருப்பி திருப்பி அடித்தேன். அதுவும் ஒரு விளையாட்டுதான். பிறகு திடீர் என ஒரு எண்ணம் உதித்தது. ஒரு உடைந்த கண்ணாடியை எடுத்து வந்து, அதன் பின் சிவப்பு நிற ரசம் மீது ‘பாலு’ என்று கீறல் போட்டு, அந்த வெளிச்சம் மீது நீட்டினேன். பாலு என்று தரையில் எழுத்து தெரிந்தது. எனக்குள் ‘அடடே’ போட்டுக் கொண்டேன்.

மறுநாள் திடீர் என்று ஒரு ஐடியா பிறந்தது. அந்த வெளிச்சம் மீது லென்ஸை காட்டிய போது வெளிச்சம் பெரிய வட்டமாக தரையில் தெரிந்தது. லென்ஸுக்கு மேல் பிலிம் துண்டு ஒன்றை எடுத்து நீட்டினேன். படம் மங்கலாக அவுட்டாப் போக்கஸில் கீழே தெரிந்தது.  மேலும் கீழும் பிலிம் துண்டை உயர்த்தி தாழ்த்தி காட்டிய போது சரியான இடத்திற்கு வருகையில் படம் பளிச்சென்று தரையில் தெரிந்தது. உடனே அண்ணனின் வேஷ்டியை எடுத்து அந்த தரையில் விரித்தேன். படம் பளிச்சென்று தெரிந்தது.

உடனே ஒரு கணக்கு நோட்டு அட்டையை கிழித்து, அதன் நடுவில் பிலிம் அளவிற்கு ஒரு துவாரம் கத்தரித்து, அதன் மீது லென்ஸை ஒட்டினேன். வாசலில் கண்ணாடியை வைத்து அதிலிருந்து திண்ணை சுவற்றுக்கு ஒளி காட்டினேன். ஒளி பட்ட இடத்தில் வேஷ்டியை திரை போல கட்டினேன். வாசல் பகுதியின் நடுவில் உட்கார்ந்து, வெளிச்சம் செல்லும் வழியில் அட்டையில் ஒட்டிய லென்ஸை காட்டியதும், திரையில் பளீர் என வெளிச்சம் பெரிதாக தெரிந்தது. பிறகு லென்ஸுக்கு பின்னே துண்டு பிலிம் எடுத்து நீட்டிய போது, சுவற்றில் தலைகீழாக படம் தெரிந்தது. பிறகு பிலிமை தலைகீழாக காட்டிய போது திரையில் படம் நேராக தெரிந்தது.

சிறு குச்சியில், துண்டு பிலிம்களை வரிசையாக கோர்த்து லென்ஸுக்கு அருகில் மேலும், கீழும் காட்டிய போது படம் ஓடுவது போல இருந்தது.

நான் காட்டிய அந்த சினிமாவைப் பார்க்க தெரு பசங்கள் கூடினார்கள். திண்ணையை இருட்டாக்கி படம் காட்டுவதில் ஆர்வமாக இருந்தேன். ஆனால், குப்பை ஏற்றி சென்ற பார வண்டியின் சக்கரம், தெரு வாசலில் ஒளி அனுப்பிக் கொண்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி மீது ஏறி இறங்கியதால் அது உடைந்து போனது. அதனால், படம் பாதியில் நின்றது.
ஊர் பிள்ளைகளை அழைத்து வந்து படம் காட்டுகிறேன்னு சொல்லி புது கண்ணாடியை உடைத்து விட்டானே என்று எனது அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

இதனால், நண்பர்களின் ஒத்துழைப்புடன் அருகில் உள்ள மூங்கில் கொல்லையில் சிறிதாக ஒரு ஆள் உயரத்திற்கு ஐந்துக்கு ஐந்து சுவர் எழுப்பி, மேலே பனை ஓலையில் கூரை எழுப்பி தியேட்டர் ஒன்று கட்டினேன். அதில் சினிமா காட்டி தினம் விளையாடினோம். இது நான் ஏழாவது படிக்கும் போது நடந்த சம்பவங்கள்.

அந்த நாட்கள் விளையாட்டு மட்டுமல்ல. என் சிந்தனை சினிமா மீதுதான் இருந்தது என்பதை அப்போதே உணர்த்தி இருக்கிறது. 

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...