Sunday, April 22, 2018

40 இரண்டு பேரின் உயிரை காப்பாற்றிய பெரியார் சிலை


திருமணமான புதிதில் எடையூரில் பழக்கடையை கவனித்துக் கொண்டிருந்த போது, எனது எண்ணங்களை பதிவு செய்ய காவிரி நாடு என்கிற சிற்றிதழை நடத்த எண்ணி இருந்தேன். அது விஷயமாக இளங்கோ அச்சகத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு பரபரப்புடன் வந்தார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தங்கவேலு.

பின்னத்தூர் தோலி ரோடு சந்திப்பு எதிரே சிறிய இடம் இருக்கிறது. அதில் பெரியார் நினைவுத் தூண் எழுப்ப எண்ணி இருந்தோம். இதை தெரிந்து கொண்ட சிலர், அங்கு விநாயகர் கோவில் கட்ட பேசியுள்ளனர். இதை அறிந்த போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே ஊருக்குள் ஒரு விநாயகர் கோவில் இருக்கிறது. இப்போது இன்னொரு விநாயகர் கோவில் எதற்கு என்று பேச ஆரம்பித்தார்.

இரவோடு இரவாக சென்று அங்கு குழி தோண்டினோம். பிரச்சனை உருவானது. அதனால், இரு தரப்பினரையும் அழைத்து பஞ்சாயத்து பேசி இருக்கிறார்கள். இரு தரப்புமே அந்த இடத்தை பயன் படுத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கு எதிரே ஒரு குட்டையும், அதன் முன்பு சிறிய இடமும் இருக்கிறது. அது ஆட்காட்டுவெளி வாத்தியார் ஒருவருக்கு சொந்தமானது. அவர், பெரியாருக்கு இல்லாத இடமா? என் இடத்தில் நினைவு தூண் வைத்துக் கொள்ளுங்கள் என்று இடம் கொடுத்திருக்கிறார். என்ன செய்யலாம்? என்று என்னிடம் கேட்டார்.

நினைவு தூணுக்கு பதிலாக பெரியாரின் மார்பளவு சிலையை வைக்கலாம் என்று ஆலோசனை கூறினேன். அதற்கு ஆகும் செலவுகளை கொள்கை பிடிப்புள்ள, பெரியார் மீது மரியாதை உள்ள தி.மு.க., அதிமுக, வலது கம்யூனிஸ்ட் தோழர்கள் போன்றவர்களிடம் வசூல் செய்யலாம் என்றேன்.
அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். உங்கள் உதவியும் தேவை என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் சென்றுவிட்டார் தங்கவேலு.

இன்னொரு நாள் தி.க.வீரபாண்டியன் என்பவரை அழைத்துக் கொண்டு பழக்கடைக்கு வந்தார் தோழர் தங்கவேலு, செங்கல் ஒருவர் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். சிமிண்ட் மூட்டைகளை ஒருவர் உதவுகிறார். விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

முத்துப்பேட்டைக்கு சென்று நானாதனாவை (ந.தருமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) சந்தித்து வந்தோம். இங்கு ஆர்.எஸ்.(தோலி ஆர்.சுப்பிரமணியன்), ந.உ.சி (ந.உ.சிவசாமி) ஆகியோரிடமும் பேசி இருக்கிறோம். பெரியார் எல்லா மக்களுக்கும் சொந்தமானவர். அதனால், எல்லா கட்சியினரையும் அழைத்து பேச வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள், போன்ற விபரங்களை தெரிவித்தார்.

அந்த சிலை வைக்கும் இடத்தைச் சுற்றி என் பெரிய மாமனார், சின்ன மாமனார் வீடுகள் இருந்தன. மாப்பிள்ளை தான் பின்னால் இருந்து கலகம் செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், அதன் முழு முயற்சியும் தங்கவேலு, வீரபாண்டியன் போன்றோருடையது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஐயர் வைத்த திருமணம் வேண்டாம் என்று திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் என்னை அப்படி நினைத்தார்கள்.

சுயமரியாதை, பெண் விடுதலை என தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த மக்களின் தலைவன் சிலையை அனைவரும் பாதுகாக்க வேண்டும். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக அந்த பகுதி மக்களுக்கு எதிராக போட்டியாக சிலையை திறப்பது, அவரது கருத்துக்கு எதிராக அமையும் என்று நினைத்தேன். இப்போது சுமுகமாக விழா நடத்த இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன்.

அதனால், தெருவில் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற என் கருத்தையும் அவர்களிடம் கூறினேன். தோழர் தங்கவேலு அதற்கு சம்மதித்தார்.

அனைவரின் ஒத்துழைப்போடு பெரியார் சிலை தோலி ரோடு வளைவில் திறக்கப்பட்டது. அனைத்துக் கட்சி தோழர்களும் கலந்து கொண்டு  விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.

அதன் பிறகு எனது மகனுக்கு பெயர் சூட்டும் விழா பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. பெரியாருக்கு மாலை அணிவித்து அவனது பெயர் சூட்டு விழாவை நடத்தினேன்.

மகன் பிறந்த முப்பதாம் நாள் சென்று அவனைப் பார்த்தேன். பெயர் சூட்டு விழாவை சிறப்பாக நடத்திவிட்டு, என் மனைவியையும், மகனையும் அன்றே சென்னைக்கு அழைத்து வந்தேன்.

இப்போது அங்கு செல்லும் போதெல்லாம் உடைந்த நிலையில் உள்ள பெரியார் சிலையை மட்டும் பார்க்க முடிகிறது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, சாலையில் தாறுமாறாக ஓடி வந்து பெரியார் சிலையின் மீது மோதி, சில பீடத்தை உடைத்து நின்றிருக்கிறது.
அந்த சிலை மட்டும் இல்லை என்றால், அங்குள்ள குட்டைக்குள் லாரி கவிழ்ந்திருக்கும். லாரியில் இருந்த இரண்டு பேரும் உயிரை இழந்திருப்பார்கள் என்கிற தகவல் கிடைத்தது.

தன் சிலையை பலி கொடுத்து ஆறு பேரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது அந்த பெரியார் சிலை.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...