Sunday, April 22, 2018

59 என் மீது கோபப்பட்ட கே.ஆர்.ஜி.யின் மனைவி


உன்னுடைய திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதுகிறேன் என்று அறிவித்துவிட்டு, கடந்த சில பகுதிகளில் தயாரிப்பாளர் சங்கம், கே.ஆர்.ஜி. பற்றிய அனுபவங்களை எழுதுகிறாயே என்று சிலர் கேட்கலாம்.

என்னைப் பொருத்தவரை நான் தயாரிப்பாளர் சங்கத்தையும், என்னையும் தனிதனியே பிரித்துப் பார்த்ததில்லை. வயிற்று பிழைப்புக்கான வேலை என்றாலும், அந்த வேலையை விரும்பி ஈடுபாட்டோடு செய்தேன். அதில் நிறைவு இருந்தது. இல்லை என்றால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்திருக்க முடியாது.

என்னுடைய நேர்மையான உழைப்பு சங்கத்திற்கு இருந்தது. தலைவருக்கும் சங்கத்திற்கும் உண்மையாக இருந்தேன். தலமைக்கு விசுவாசமாக வேலை செய்தேன். உறுப்பினர்கள் அனைவருக்கும் அது தெரியும். கே.ஆர்.ஜியிடம் பேசுவது என்றால் கூட, அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? அல்லது, கோபமாக இருக்கிறாரா? என்று என்னிடம் கேட்டு விசாரித்துத் தெரிந்து கொண்டு பல தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசுவார்கள்.

நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பொய் சொல்ல தெரியாது. ஏமாற்ற தெரியாது என்பதை என்னிடம் தெரிந்து கொண்டார் தலைவர் கே.ஆர்.ஜி..

அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மரியாதைக்குரியது.

என்னை ’கவுன்சிலின் பில்லர்’ என்றுதான் அழைப்பார்.

தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஒரு நாள் வேலைக்கார பையன் என்னிடம் சொன்னான்.

‘’அம்மா உங்கள் மீது கோபமாக இருக்கிறார்? என்று.

’’எதற்கு?’’ என்று கேட்டேன்.

’’அய்யா... சாப்பிடும் போது கூட... பாலா சாம்பார் ஊத்து என்று ....  உங்கள் பெயரைத்தான் சொல்கிறார். அம்மா பெயரை மறந்து விடுகிறார்.... ‘’ என்று சொன்னான்.

கே.ஆர்.ஜி. அவர்களின் துணைவியார் பெயர் சாந்தா. அவரை சாந்தா என்று அழைப்பதற்கு பதிலாக, பாலா என்று அழைத்தால்.... அவர் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும்?.

அந்த அளவிற்கு தலைவர் கே.ஆர்.ஜி.அவர்களின் கூப்பிட்டக் குரலுக்கு வேலை செய்பவனாக இருந்தேன். என் பெயரை அதிகம் உச்சரிக்கும் அளவிற்கு என் வேலை இருந்தது என்பதை இங்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

சங்கத்தின் செயலாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, “என்ன செயலாளர்... என்ன நடக்குது சங்கத்தில்’’ என்று கிண்டலாக கேட்பார். அவர் செயலாளர். என்னை செயலாளர் என்று அழைப்பார்.

அந்தளவுக்கு கே.ஆர்.ஜி. தலைவர் என்றால், அவர் சொன்ன வேலையை செயல் படுத்தும் வேலைக்காரனாக  நான் இருந்திருக்கிறேன்.

இந்த விசுவாசம், கே.ஆர்.ஜி. அவர்களை எதிர்க்கும் சிலருக்கு பிடிக்காமல் போனது. அதனால், என்னை சங்கத்தில் இருந்து வெளியேற்றினால், கே.ஆர்.ஜி.க்கு பாதி பலம் குறையும் என நினைத்தார்கள்.

இந்த நிலையில், தலைவரின் உத்தரவின் பேரில் அடுத்த தலைமைக்கு இப்ராஹிம் ராவுத்தரை நிற்க வைக்க, நான் நேரில் சென்று பேசி வந்த தகவல், அந்த குழுவுக்கு தெரிந்திருக்கிறது. அது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், பல தயாரிப்பாளர்களை நேரில் சென்று உறுப்பினராக சேர்த்தவன் என்பதால், வாக்கு சேகரிக்க நான் உதவியாக இருந்துவிடுவேன் என்கிற அச்சமும் அவர்களிடத்தில் இருந்தது.

அதனால், என்னை சங்கத்தில் இருந்து அனுப்ப, தீவிரம் காட்டினார்கள்.

பாலனை வேலையை விட்டு அனுப்புகிற வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரு விளம்பர ஸ்டண்ட் பார்ட்டி முன் வந்திருக்கிறது.

மறுநாளில் இருந்து அந்த விளம்பர பிரியர் என்னை அவமானப் படுத்துகிற காரியங்களை செய்தார். இதை அவருக்கு வேண்டிய பொறுப்புள்ள நண்பரிடம் தெரிவித்த போது, அவர்கள் கூடிய கூட்டத்தில் என்னைப் பற்றி பேசியதையும், அதில் எடுத்த முடிவின் படிதான் அப்படி நடந்து கொள்கிறார் என்றும், அதனால், ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுமாறும் எச்சரித்தார்.

குறை உள்ளவன் குற்றம் கண்டுபிடிப்பான். குறையே இல்லாத என்னை என்ன செய்ய முடியும்?. இருந்தாலும், அரசியல் என்று வரும் போது, இவர்கள் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!.

விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படம் வெளியாகி, அடுத்து அர்ஜுன் நடித்த ’சுதந்திரம்’ பட தயாரிப்பு வேலைகளில் பிசியாக இருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி.

அவரிடம் சென்று, என்னை அவர் நடத்திய விதத்தையும்,  என்னை உங்கள் ஆள், உங்களின் ஒற்றன் என்று நினைக்கிறார்கள். என்னை குறை சொல்லி அனுப்பவும் முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், நீங்கள் இல்லாமல் அங்கு என்னால் வேலை செய்ய முடியாது என்பதை தெரிவித்தேன்.

நான் இல்லை என்றாலும், எனக்கு பிறகு ராவுத்தர் தலைவராக இருப்பார். அவரை ஜெயிக்க வைப்போம். நீ உன் வேலையைப் பாரு என்று அமைதிப் படுத்தினார் தலைவர் கே.ஆர்.ஜி..

அதை அப்போது ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் நான் இல்லாமல் இருந்தேன். சங்கமே கோவில், நீங்களே கடவுள் என நினைத்து வேலை செய்தேன். இப்போது என்னை அவமானப் படுத்த நினைக்கும் சக்திகளுக்கு முன்பு நான் எப்படி வேலைப் பார்ப்பது. நிம்மதியாக என்னால் வேலை செய்ய முடியாது. அதே போல அவமானப்பட்டும் என்னால் வேலை செய்ய முடியாது. வேலையில் இருந்து நானே விலகிக் கொள்கிறேன் என்றேன்.

இதைக் கேட்டு, தலைவர் கே.ஆர்.ஜி. அதிர்ந்து போனார்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...