Sunday, April 22, 2018

19 கடும் உழைப்பால் புதிய வீடு உருவானது

தெற்கு தெருவில் தலையாரி தாத்தா வீட்டுக்கு அருகில் அண்ணனும், அண்ணியும் குடி இருந்தார்கள். மங்கையகரசி பெரியம்மா வீட்டின் ஒரு அறையில் அம்மாவும், தங்கையும் தனியாக வசித்தார்கள். அதனால், தங்கை திருமணத்திற்கு முன் தனி வீடு தேவையாக இருந்தது

வடக்கு தெருவில் முன்பு வீடு இருந்த இடத்தில் புது வீடு கட்ட முடிவு செய்தேன். எனக்கு மூத்தவராக இருந்து, இறந்து போன எனது அக்காள் மலர்க்கொடி ஞாபகமாக, அந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண்டு தோறும் அவர் இறந்த நாளில் படையல் வைத்து சாமி கும்பிடுவதை வழக்கப்படுத்தி இருக்கிறார் என் அம்மா.

எங்கள் குடும்பம் மட்டும் அல்லாது என் சித்தப்பா குடும்பத்தினரும் அவரை வணங்கி வருகிற இடமாக அது இருந்தது. இப்போது கூட எங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரி இல்லை என்றால் அவரை நினைத்து சாமி வரவழைத்து விபூதி போட்டால் குணமாகி விடும் என்கிற நம்பிக்கை அங்கு எல்லோரிடத்திலும் இருந்தது.

முன்பு வீடு இருந்த அந்த இடம் முழுவதும் காட்டுக் கருவை மரங்களும், செடி, கொடிகளும், பாம்பு புற்றுமாக காட்சி அளித்தது. புதிதாக இடம் வாங்கி அங்கு வீடு கட்டுகிற அளவுக்கு அப்போது பொருளாதாரம் இல்லாததால், அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டிய நிலை எனக்கு இருந்தது.

ஆட்களை அழைத்து வந்து இடத்தை சுத்தம் செய்யச் சொன்னால், சாமி அடிச்சிடும் என்று பின் வாங்கினார்கள். எந்த சாமியும் காப்பாற்றதான் இருக்கிறதே தவிர, கெடுதல் செய்ய இருக்காது என்று அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். அவர்கள் நம்பவில்லை. ஒதுங்கினார்கள்.

கிராமத்தில் இருக்கும் போது கடவுள் பக்தி அதிகம் உள்ளவனாக இருந்தவன் நான். நகர் புறத்திற்கு வந்த பிறகு புத்தகங்கள் என் அறிவை மேம்படுத்த கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக மாறிப் போயிருந்தேன்.

எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் நம்புகிறார்கள். எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறதே?. அவர்களுக்கு ஏதாவது ஆனால் என்கிற அச்சம் அவர்களிடத்தில் இருந்தது.

ஒரு நாள் காலை நானே சென்று அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். மரங்களை அடியோடு வெட்டி தள்ளிவிட்டு, புற்றை இடித்துக் கொண்டிருந்த போது என் அம்மா வந்து தடுத்து, வேண்டாம் என்று அழுது புலம்பினார்.

தமிழன் காட்டிய வீட்டில் சிங்களன் குடியேறிய மாதிரி, கரையான் கட்டிய புற்றில் பாம்பு வந்து ரைட்சே இல்லாமல் குடியிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று என் வேலையில் பின் வாங்காமல் இருந்தேன்.

ஒரே நாளில் இடம் சுத்தமானது. மறுநாள் மம்பட்டிக் கொண்டு இடத்தை சமப்படுத்தினேன். மறுநாள் மனை போடுவதற்கு கணபதி பண்டாரத்திடம் நாள் குறித்து வந்தார் அண்ணன்.

ஒரு அறை வைத்து வீடு கட்டினால், பிரதான வீட்டில் அண்ணன் குடும்பமும், அறையில் அம்மாவும் இருந்து கொள்வார்கள் என்பது என் திட்டம். ஆனால், எனக்கு திருமணம் செய்து வைத்தால் பிரதான வீட்டில் நானும், அறையில் அம்மாவும் இருப்பார் என்று அண்ணன் கணக்கு போட்டு, அறை வைத்து வீடு கட்ட ஒப்புக் கொண்டார்.

ஆரியலூர் செல்வராஜ் புரையரை அழைத்து வந்து மனை அளந்தார். நான் தெற்கு பக்கம் வாசல் வைத்து வீடு கட்ட நினைத்தேன். அண்ணனோ, மேற்கு பக்கம் வாசல் வைக்க மனை அளர்ந்தார். அதில் பிடிவாதகமாக இருந்தார். எல்லாம் ஜோசியம் செய்த வேலை.

மழை காலங்களில் மேற்கு பக்கத்தில் இருந்து சாரல் அடித்து வீடு திண்ணை வரை நாசமாகிவிடும் என்பதை முன்பு இருந்த வீட்டில் அனுபவித்திருக்கிறேன். அதை அனுபவ ரீதியாக உணர்ந்ததை செல்வராஜிடம் எடுத்துச் சொன்னேன். அதே போல மேற்கு பக்கம் பார்த்த மாதிரி வீடு கட்ட இட வசதியும் போதவில்லை. அதை அவரும் புரிந்து கொண்டார்.

பிறகு, தம்பி சொல்றபடி கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று அவரே அண்ணனிடம் புரிய வைத்து, பிறகு அண்ணன் சம்மதத்துடன் மனை அளந்தார்.

கீழ்த்தெரு ஜானகிராமன் அத்தானிடம் வண்டியும், மாடும் இரவல் கேட்டு, ஒரத்தூர் அத்தனை வண்டி ஓட்ட துணைக்கு வைத்துக் கொண்டு வாரியாக் கோட்டகம் வாய்க்காலில் இருந்து தினம் எட்டு வண்டி மண் கொண்டு வந்து சேர்த்தேன். ஐந்து நாட்களில் போதுமான மண் சேர்ந்தது.

தெற்கு தெரு கட்டையன் என்கிற மாரிமுத்துவை உதவிக்கு வைத்துக் கொண்டு ஐந்து படை சுவர் எழுப்பினேன்.

எட்டு வண்டி மண்ணையும் எப்படி கூடையில் சுமந்து வந்து வண்டியில் கொட்டினேனோ, அதே போல ஐயன் குளத்தில் இருந்து இரு தகர டின்களில் தண்ணீர் கொண்டு வந்து, ஊற்றி மண்ணை ஈரமாக்கி, குழைத்து, மிதி மிதி என மிதித்து, ஊறப் போட்டு, மறு நாள் சலிக்க தண்ணீர் தெளித்து கிண்டி, கிளறி மிதித்து வாங்கி விட்டு, மண்ணை சுவருக்கு தகுந்த மாதிரி பதப்படுத்தி, அதற்கும் அடுத்த நாள் மாரியப்பன் துணையோடு, சுவர் எழுப்பினேன்.

ஒவ்வொரு படையாக சுவர் எழும்பிய போது அதை காய விட்டு, மேலும் படை படையாக சுவர் எழுப்பியதை ரசித்து ரசித்து அந்த வீட்டைக் கட்டினேன்.

சுவரில் வெடிப்பு தெரிகிறதா என்று காலையில் எழுந்ததும் ஓடிச் சென்று பார்ப்பேன். இல்லை என்றதுக் பெருமை கொள்வேன். சுவற்றை தடவி தடவி முத்தம் கொடுப்பேன். என் உழைப்பை அதிகமாக வாங்கிக் கொண்டது அந்த வீடு. ஆரம்பத்தில் நான் வேலையை துவங்கினேன். பிறகு வீடு வேலை வாங்க ஆரம்பித்தது.

அக்கா வீட்டு இடத்தில் இருந்த பூவரசு மரத்தை வெட்டி ஊறப் போட்டு உத்திரத்திற்கு ஏற்பாடு செய்தேன்.

வீடு கட்டும் நேரம் தவிர மற்ற நேரங்களில் விவசாய வேலைக்கு சென்று பணம் சேர்த்து, வீட்டு வேலைக்கு உதவியாக வைத்துக் கொண்டேன். வீடு பெரிதாக அமைந்து விட்டது.

கூறைக்கு மூங்கிலும், பத்துக் கட்டுக்கும் மேல் தென்னை ஓலைகளும் தேவையாக இருந்தது. பணம் அதிகமாக தேவைப்பட்டத்து. தம்பி சிவாவிடம் சென்று வாங்கி வருவோம் என்று திருச்சங்கோடு ஓடினேன்.

முன்பு மாதிரி சமோசா வியாபாரம் இல்லை. கையில் பணம் இல்லை என்று கை விரித்துவிட்டான். சரி சீட்டு எடுத்துக் கொடு அதை வைத்து சமாளித்துக் கொள்கிறேன். பிறகு இன்னொரு சீட்டுப் போட்டு, நிலத்தை திருப்பிக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், சீட்டு பணத்தையும் தள்ளு போக எடுத்துதான் ஆட்களுக்கு சம்பளம் கொடுத்தேன் என்று சொல்லிவிட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை?. எப்போது வீடு வேலை முடிவது?. நிலம் திருப்பி தங்கையை திருமணம் செய்து கொடுப்பது?, எப்போது சினிமாவுக்கு சென்று இயக்குநர் ஆவது? என்கிற பெரும் கவலையோடு ஊர் திரும்பினேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...