Sunday, April 22, 2018

30 பழக்கடைக்கு குட் பை


காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, ஆறு மணிக்கு கடையை திறக்க வேண்டும். தியேட்டரில் இரவு முதல் காட்சி முடிந்து ஜனங்கள் சென்ற பிறகு கடையை முடவேண்டும். அதன் பிறகு மூன்று கிலோ மீட்டர் தூரம் இருட்டில் சைக்கிளில் சென்று வீடு சேர வேண்டும். இப்படி தினம் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

ஆவணம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, போன்ற இடங்களில் இருந்து கடைக்கு தேவையான வாழைத்தார்கள், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றையும் என் மைத்துனர் நாடிமுத்து கொண்டு வந்து சேர்த்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது.

ஆனால், என் மைத்துனர் செய்யும் செலவுகள் லாபத்தில் கழிந்தது. மொதல் மட்டுமே எப்பவும் கடையில் இருக்கும். அதிலும் சில வாழைத்தார்கள் பழுத்து உதிர்ந்தால் நஷ்டத்தை நோக்கி செல்கிற வாய்ப்பும் ஏற்படும். தினம் கணக்கு போட்டு பார்த்து பயந்து கொண்டே இருந்தேன்.

என்னை மாப்பிள்ளையாக தேர்வு செய்தவர் எனது அண்ணனின் நண்பரான என் மைத்துனர் நாடிமுத்து. நான் அவரின் செல்ல மாப்பிளை. நான் பார்த்த மாப்பிளை என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்வார். அப்படி அவர் சொல்லும் போது அவரிடத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரியும்.

என்னை ஒருவர் கிண்டலாக பேசினார் என்பதற்காக அதே கடைத் தெருவில் ‘’பளார் பளார்’’ என்று அறைந்தவர். அப்படி என் மீது அன்பு காட்டும் அவர் மீது குறை சொல்கிற அளவுக்கு நான் செல்ல முடியாது.
ஆனால், வியாபார உண்மையை சொல்வேன். உரிமையில் சில சமயம் கண்டிப்பேன். வியாபாரம் என்றால் அப்படித்தான் இருக்கும். வரும் போகும் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்வார். எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்வார்.

மாப்பிள்ளையை நம்பி முதல் போட்டேன். இப்போது நஷ்டம் வந்து விட்டது என்று என் மீது புகார் வந்தால் நான் எப்படி பழியை ஏற்றுக் கொள்ள முடியும் என்று அவரிடம் கேட்டதற்கு, சிரித்தார்.

அவர் எப்பவும் கவலைப்படாத மனிதர். சிரிப்புதான் அவருடைய டிரெட் மார்க். அதை ரசிக்கலாம். ஆனால் பிரச்சனை என்று வரும் போது?.

இரண்டு மாதம் கழித்தும் அப்படித்தான் கணக்கு இருந்தது. இந்த தகவலை என் மனைவியிடம் சொன்னேன். நஷ்டம் வந்து விட்டால் அண்ணனை ஒண்ணும் சொல்ல மாட்டார் பெரியப்பா. ஆரம்பத்திலேயே ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று உங்களிடம்தான் கோபப்படுவார்.

அதனால், இனிமேல் நீங்கள் கடைக்கு போக வேண்டாம். வியாபாரத்திலும் ஈடுபட வேண்டாம் என்று சொல்லிவிட்டாள், என் துணைவி.

உடல் நிலை சரி இல்லை என்று கடைக்கு செல்லவில்லை. தொடர்ந்து ஒரு வாரம் வரவில்லை என்றதும் அண்ணன் மூலமும், பக்கிரிசாமி மாமா மூலமும் வரச்சொல்லி தகவல் வந்தது. என்ன குறை? ஏன் கடைக்கு செல்லவில்லை என்று பக்கிரிசாமி மாமா ஆத்திரபட்டார்.

நாடிமுத்து அத்தான் செலவுகள்தான் பிரச்சனை என்று சொல்ல நான் விரும்பவில்லை. அதனால், வியாபாரத்தில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை என்று மட்டும் அவரிடம் சொன்னேன்.

பக்கிரிசாமி மாமா விடுவதாக இல்லை. அவர் அதிகமாக கேள்விகளையும், கேட்டு, ஆலோசனைகளையும் சொன்னார். என் மனைவி குறுக்கிட்டு உனமையைப் போட்டு உடைத்தாள். கொண்டான் கொடுத்தான் வீட்டில் வேலை செய்றது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று அதையும் அவரிடம் முறையிட்டாள்.

இந்த வார்த்தையை அப்படியே அவர்களிடம் சென்று சொல்லிவிடார் மாமா. அதனால், என் மீது உள்ள கோபத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணபதி அத்தானிடம் கடையை லீசுக்கு கொடுத்துவிட்டார் ராமையாத்தேவர் மாமா. 

அதன் பிறகு கொஞ்சநாள் பேச்சு வார்த்தையே இல்லாமல் போனது. நான் விவசாய வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். என்னோடு என் மனைவியும் வந்து வயல் காடுகளில் பாடுபட்டாள்.

பெண் வீட்டில் திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தரப்பில் ஏழாயிரம் ரூபாய் செலவு ஆகி இருந்தது. அந்த கடனை நானும், என் மனைவியும் சம்பாதித்து அடைத்தோம்.
 
என் திருமண நிகழ்ச்சிக்காக வந்து சென்ற எனது தம்பி நமசிவாயம், சமோசா கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலை நிறுத்திவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி இருந்தான்.

என் தம்பியை நாடிமுத்து அத்தானுக்கு பிடித்திருந்தது. அதனால், அவரது தந்தையிடம் பேசி வீடு அருகில் இருந்த ஒரு இடத்தில் டீ கடை நடத்த உதவினார். அவனுக்கு உதவியாக எனது அக்காள் மகன் குமார் இருந்தார். படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் கடை வேலையைப் பார்த்துக் கொண்டார்.

மீண்டும் தங்கையை பெண் கேட்டு அதே குன்னூர் மாப்பிளை வந்தார். முன்பு பனிரெண்டு பவுன் கேட்டு சென்றவர், இப்போது ஏழு பவுன் என இறங்கி வந்திருந்தார். நிலத்தை எழுதி தருகிறேன் என்று சொன்னதற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அதனால், என் மனைவியிடம் நிலத்தை உன் பேருக்கு எழுதி தருகிறோம். உனது நகையை தங்கைக்கு கொடுத்து உதவு என்று சொன்னேன். அதற்கு அவள் சம்மதிதாள். ஆனால், அவளது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...