Sunday, April 22, 2018

13 டைமண்ட் பாபு அவர்களை சந்தித்தேன்


திரு.விஜயமுரளி- திரு டைமண்ட் பாபு 
எனது தம்பி சிவாவும், அங்கு வேலைப் பார்த்த ஊழியர்களும் அப்படி ஒரு கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

ராசிபுரத்தில் இருந்து சமோசா தயாரிக்க தேவையான காரட், பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றை இரண்டு மூட்டைகளாக வாங்கி வந்து, தெரு முனையில் பஸ்ஸில் இருந்து இறக்கி வைத்து வந்திருந்தேன். அதை போய் தூக்கி வர சொல்ல கூறும் போது, சென்னையில் இருந்து வந்த கடிதத்தை காட்டி ‘’மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கு’’ என்று ‘மனம் பொங்க’ தெரிவித்தனர்.

ஆர்வத்தோடு அந்த கடிதத்தை வாங்கி படித்தேன். சினிமாவில் உதவி இயக்குனராக சேர அழைப்பு விடுத்திருந்தனர். குறிப்பிட்ட தேதியில் நேரடியாக வந்து சந்திக்குமாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனக்கு இனம் புரியாத சந்தோஷம். என் தம்பியும் ஊழியர்களும் என்னைவிட அதிக மகிழ்ச்சியில் இருந்தனர். முறையான அழைப்பு வந்ததால் அவர்களது நம்பிக்கை கூடி இருந்தது.

திரு.கிளாமர் கிருஷ்ணமூர்த்தி
அது ஒரு டுபாக்கூர் கம்பெனி என்றோ, உப்புமா கம்பெனி என்றோ அப்போது எங்களுக்கு தெரியாது. ஆனால், சினிமாவில் சேர்ந்து இயக்குநராக நான் சாதனைப் படைக்க அழைப்பு வந்திருப்பதாக பெரும் கனவு கண்டார்கள்.

செலவுக்கு தேவையான பணம், நிறைய வேண்டுதல்களுடன் அனைவரும் வந்து என்னை வழி அனுப்பி வைத்தார்கள். பஸ் எடுக்கும் வரை கை கொடுப்பதும், வாழ்த்துவதுமாக இருந்தார்கள்.

மறுநாள் காலை சென்னையில் இறங்கி, வேறு பஸ் பிடித்து வளசரவாக்கத்தில் உள்ள அந்த முகவரிக்கு சென்றேன். என்னைப் போலவே சிலர் தேர்வுக்கு வந்திருந்தனர்.

சரியாக பத்து மணிக்கு வந்த அந்த இயக்குநர், அலுவலகத்தை திறந்தார்.  எங்கள் ஒவ்வொருவருடைய கடிதத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு வரிசையாக தனி தனியே அழைத்து தேர்வு நடத்தினார்.

உதவி இயக்குநராக பயிற்சி பெற இருபதாயிரம், நடிப்பதற்கு ஐம்பதாயிரம் என ஒவ்வொரு பயிற்சிக்கு தகுந்த மாதிரி விலை வைத்து, தங்குமிடம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது படம் பண்ணுகிற கம்பெனி இல்லை. பணம் பண்ணுகிற கம்பெனி என்று தெரிந்த பிறகு பெரிய ஏமாற்றம் மனதை அழுத்தியது.

உடனே ஊருக்கு திரும்பி சென்றால், எனது தம்பி, மற்றும் ஊழியர்கள்  நம்பிக்கையும், ஆசையும் வீணாகிவிடும் என்கிற பெரும் கவலை மனதில் எழுந்தது. அதனால், ஒரு வாரம் தங்கி இருந்து வேறு வாய்ப்புகளை தேடலாம் என்கிற முடிவோடு முன்பு தங்கி இருந்த திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் ஏரியாவுக்கு சென்றேன்.

ராகவனிடம் நடந்ததை கூறினேன். அவர் தங்குவதற்கு இடம் கொடுத்தார். கையில் பணம் இருக்கும் வரை வாய்ப்பு தேடுவோம். அது முடிந்த பிறகு சமோசா கம்பெனிக்கு திரும்பி சென்று விடுவோம் என்று முடிவு செய்தேன்.

பகல் முழுவதும் பாரதிராஜா, பாக்யராஜ், மணிவண்ணன், இராம நாராயணன், கங்கை அமரன் என பல இயக்குனர்கள் அலுவலகத்திற்கு சென்று வாய்ப்பு தேடினேன்.

‘’அடுத்த மாதம் வந்து பாருங்கள்’’, ‘’அடுத்தப் படம் ஆரம்பிக்கும் போது வந்து கேளுங்கள்’’ என்று நல்ல பதில்கள் கிடைத்தது. நம்பிக்கையும் அதிகமானது.

நான் தங்கி இருந்த அறையின் பக்கத்து அறையில் இருந்தவர் விஜயன். மலையாளியான அவர், ஒரு லேவுட் ஆர்டிஸ்ட். பத்திரிகை, மற்றும் புத்தகங்களுக்கு டிசைன் செய்து கொடுப்பார்.

அவரிடம் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது, சினிமா டிசைன் ஒன்றை வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விசாரித்த போது, எதிரே உள்ள யானைக்குளம் ஒன்னாவது தெருவில், கிளாமர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருக்கிறார். அவர் சினிமாவில் பொதுஜன தொடர்பாளராக இருக்கிறார். அவர் சினிமா உலகினரின் முகவரி அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட இருக்கிறார். அந்த புத்தகத்திற்கு இந்த டிசைன் உருவாக்கி கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அவருடைய கையை பிடித்து முத்தம் கொடுக்காத குறை. எதிரிலேயே சினிமாக்காரர் ஒருவரை வைத்துக் கொண்டு வாய்ப்புக்கு அலைந்தோமே என்று மனசு துள்ளி விளயாடியது. கிளாமர் கிருஷ்ணமூர்த்தியின் முகவரியை விசாரித்துக் கொண்டு, மறுநாள் காலை அவரை நேரில் சென்று சந்தித்தேன்.

என்னுடைய உதவி இயக்குநர் எண்ணத்தை அவரிடம் சொல்லி வாய்ப்புக் கேட்டேன். என்னிடம் தொடர்பில் இருங்கள் கண்டிப்பாக சொல்கிறேன் என்று தெரிவித்தார். பிறகு விஜயமுரளி, டைமண்ட் பாபு ஆகிய இரு பொதுஜன தொடர்பாளர்களின் முகவரியை தெரிவித்து அவர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்க சொன்னார்.

மறுநாள் காலை திருவல்லிக்கேனி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் இருந்த  திரு.விஜயமுரளி அவர்கள் வீட்டுக்கு சென்றேன். ‘டேவிட் அங்கிள்’ படத் துவக்க விழாவுக்கு அவர் சென்றிருப்பதாக தெரிவித்தார் அவரது மனைவி விஜயா.

அங்கிருந்து இராயப்பேட்டையில் உள்ள திரு.டைமண்ட் பாபு அவர்கள் வீட்டிற்கு சென்றேன். அவர் அப்போதுதான் வெளியில் இருந்து திரும்பி அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தார். அவரிடமே அவரைப் பற்றி விசாரித்தேன்.

என்னை ஏற இறங்க பார்த்தவர், பிறகு என்னைப் பற்றி தெரிந்து கொண்டதும், தான், பெங்களூர் செல்ல இருப்பதாகவும், புதன் கிழமை வந்து பார்க்கும் படியும் கூறினார். சினிமாவை நெருங்கிவிட்டோம். விரைவில் சினிமா உலகிற்குள் நுழைந்து விடுவோம் என்கிற நம்பிக்கை அதிகமானது. அப்படியே அறைக்கு திரும்பினேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...