Sunday, April 22, 2018

20 தங்கைக்கு வந்த வரன்


மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் இருக்கும் எனது சித்தப்பா மகள்  சுசிலா, பழைய வீடு ஒன்றை வாங்கி, அந்த இடத்தில் புதிதாக ஓட்டு வீடு ஒன்றை கட்டப் போவதாகவும், பிரித்த அந்த பழைய வீட்டில் நல்ல நல்ல கம்புகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டு, அண்ணன் ஒரு சிறு தொகையை கொடுத்து அதை வாங்கி வந்தார்.

ஆரியலூர் மற்றும் வடசங்கந்தி கிராமத்தில் கொஞ்சம் புதிய மூங்கி மரங்களையும்,  தில்லைவிளாகத்தில் கீற்று கட்டுகளும் வாங்கி வந்து கொடுத்தார் அண்ணன். கூரை வேலை மளமளவென நடந்தது.

அப்போது தங்கைக்கு ஒரு வரன் வந்தது.

குன்னூரில் சொந்தமாக ஒரு ஓட்டு வீடு, பதினாறு மா நிலம், இது தவிர பைனான்ஸ் விடும் வேலை செய்யும் ஒரு பையன் இருக்கிறான். உங்களுக்கு பிடித்திருந்தால் பாருங்கள், என்று வலிவலம் வெங்கடாசலம் மாமா சொல்லி அனுப்பியதாக சொன்னார்கள்.

கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா தலைமையில் அந்த வாரமே மாடு வாங்குவது போல பையனையும், வீட்டையும் பார்த்து வந்தார் அண்ணன்.

எனக்கு மாப்பிளையை பிடித்திருக்கிறது. மாமியார், நாத்தினார் இல்லை. தந்தையும், மகனுமாக பொங்கி சாப்பிடுகிறார்கள். பொண்ணு கொடுத்தால் மட்டும் போதும் என்கிறார்கள். ஜாதக பொருத்தம் சரியாக இருக்கிறது.  என்று அண்ணன் சொன்னதும், எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இப்படியெல்லாம் கூட நம்ம சாதியில் இருக்கிறார்களா? என்று கேள்வியை எழுப்பினேன்.

மறுநாள் பெண் பார்க்க மாப்பிள்ளை உட்பட ஐந்து பேர் ஊருக்குள் வந்தனர்.

வீடு கட்டும் வேலையில் பிஸியாக இருந்த என்னை அழைத்து சென்று மாப்பிளையிடம் பேச வைத்தார் அண்ணன்.

கல்யாணத்திற்காக ஆயிரம் பொய் சொல்வார்கள். எனக்கு பொய் சொல்ல தெரியாது. அதனால் உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன்.

எங்களிடம் கையில் பணம் இல்லை. இருந்ததை வைத்தும் கடன் வாங்கியும் வீடு கட்டிவிட்டேன். எங்களிடம் நான்கு மா நிலம் இருக்கிறது. அதில் மூன்று மா பெந்தகத்தில் இருக்கிறது.  அதை திருப்பி என் தங்கை பெயரில் எழுதி தருகிறேன். அதற்கு ஒரு வருடம் ஆகும். திருமணத்தை நீங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று மனதில் இருப்பதை தெரிவித்தேன்.

ஆரம்பத்தில் பதினைந்து பவுன் நகை கேட்டவர்கள், பிறகு பனிரெண்டு பவுனுக்கு இறங்கி வந்தார்கள். நான் என்னுடைய நிலையில் இருந்தேன். பதில் சொல்கிறேன் என்று சென்றவர்கள். மறுபடியும் ஒரு வருடம் கழித்துதான் வந்தார்கள்.

அதற்குள் எனக்கு திருமணமாகிவிட்டது?

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...