Sunday, April 22, 2018

55 திரையுலகம் கொண்டாடிய கலைஞரின் பவளவிழா


தமிழ்த் திரையுலகிற்கு பல சலுகைகளையும், திருட்டு விசிடிக்கு எதிரான குண்டர் சட்டம் கொண்டு வந்ததையும் வரவேற்று, நன்றி தெரிவித்து முதல்வருக்கு ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டது.

ஆனால், அவரை பாராட்ட வேண்டும், கௌரவித்து கொண்டாட வேண்டும் என்று எல்லோருக்கும் எண்ணம் இருந்தது.

அந்த ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பவளவிழா ஆண்டு. அதனால், திரையுலக முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து ஒரு விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்கு முதல்வரிடம் முறையாக அனுமதி பெற்றனர். 

27.09.1998 அன்று நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்த் திரையுலம் சார்பில் முதல்வர் கலைஞரின் பவளவிழாவை நடத்துவது என்று முடிவானது.

பவள விழா குழுவுக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி., விநியோகஸ்தர் சங்க தலைவர் சிந்தாமணி முருகேசன், திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் ஆர்.எம்.எம்.அண்ணாமலை, நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் ஆகியோர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

விழாக் குழு தலைவராக ஏவி.எம்.சரவணன், செயலாளர்களாக அபிராமி ராமநாதன், கே.விஜயகுமார், கே.ராஜன், எம்.வி.ராமு, ஜி.ஜெயக்குமார் ஆகியோரும், பொருளாளராக ஆனந்தா எல்.சுரேஷ், கே.முரளிதரன், பி.எல்.பழனியப்பா செட்டியார் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

பவள விழா மலர் குழுவில் தயாரிப்பாளர் ராகவன் தம்பி, ‘கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தன், ‘கலைமாமணி’ தேவிமணி, ஏவி.எம். அர்ஜூனன், தியாகராஜன், மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, நெல்லை சுந்தர்ராஜன், கிளாமர் கிருஷ்ணா மூர்த்தி, பெருதுளசி பழனிவேல், சிங்காரவேலு, மௌனம் ரவி, முகமது ரியாஸ், விஜயமுரளி, பாலன் ஆகிய நான், புகைப்பட கலைஞர் சித்ரா சுவாமிநாதன், டிசைனர் மேக்ஸ், கோமதி விநாயகம், பல்லவராஜன் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டனர்.

பவள விழா வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது. மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு, அமைச்சர்களுக்கு அழைப்பு, தென்னக நட்சத்திரங்களுக்கு அழைப்பு, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை என வேலைகள் றெக்கை கட்டி பறந்தன. 

ஓடுதளம் பாதிக்கப்படும் என்று நேரு விளையாட்டு அரங்கில் விழா நடத்தக் கூடாது என்று அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நீதி மன்றம் மூலம் தடை உத்தரவை பெற்றார்.

இதனால், நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடத்துவது வேறு இடம் முடிவானது. பதினைந்து நாட்களாக செய்த வேலைகள் இரண்டு நாட்களில் செய்து முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

குறுகிய இடத்தில் விழா நடத்த வேண்டிய சூழல் இருந்ததால், அழைப்பிதழ் கொடுப்பதிலும், பிரபலங்கள் அமர்வதற்கான இடம் ஒதுக்குவதிலும் பெரும் குழப்பம் நிலவியது.

பகலில் அழைப்பிதழ் கொடுப்பதும், இரவில் யார் யாருக்கு கொடுக்க செல்வது என்று பிரித்து வேலை செய்தோம். நட்சத்திர மேனேஜர்கள், மக்கள் தொடர்பாளர்கள் என பலர் தானாக முன்வந்து வேலைகள் செய்து கொடுத்தனர். அவர்களை எல்லாம் மறக்காமல், தலைவர் கே.ஆர்.ஜி. நன்றியோடு ஊக்கத் தொகை கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

அதே போல மலர் வேலையாக இருந்த போது, மாரடைப்பால் மரணம் அடைந்த தயாரிப்பாளர் ராகவன்தம்பி குடும்பத்தினருக்கு சங்கம் சார்பிலும், விழா குழு சார்பிலும் இரண்டரை லட்சம் நிதி உதவி வழங்கினார்.

விழா நடபெற்ற 27.09.1998 அன்று படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை. கர்நாடக முதல்வர் ஜெ.எச்.பட்டீல், புதுவை முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன், கர்நாடக அமைச்சர் ஆனந்த நாக், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்..ராஜேந்திரன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக், அர்ஜூன், விஜயகுமார். விஜய், கே.பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா என ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் திரண்டிருந்தனர்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தலைமையில் இசைக் கலைஞர்கள், மற்றும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நடன இயக்குநர் கலா தலைமையில் நடிகர், நடிகைகளுடன் நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடிய காலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

கலைஞர் உருவம் பின்னப்பட்ட பொன்னாடை, 52 கிலோ எடையுள்ள ரோசாப்பு மாலை என்று விழாக்குழு சார்பில் விழா நாயகருக்கு அணிவிக்கப்பட்டது.

52 ஆண்டு திரையுல நினைவை போற்றும் வகையில் 52 பவுன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப்பட்டது. முதல்வரின் நிவாரண நிதிக்கு 52 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

அதே போல விழாக்குழு சார்பாக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அவரின் வெள்ளி உருவச் சிலை நினைவுப்  பரிசாக வழங்கப்பட்டது.

பிரமாண்டமாக நடந்த அந்த விழாவில் இரவும் பகலும் பணியாற்றிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. எத்தனைப் பேருக்கு எத்தனை விதமான உதவிகள், பதில்கள், சவால்கள், மிரட்டல்கள், வேண்டுகோள்கள் என எல்லாவற்றையும் அனுபவித்தேன்.

ஒரு விழா நடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் பிரமாண்ட விழாவுக்கு முக்கிய நபராக இருந்து வேலை செய்வது என்பது.... அப்பப்பா...

இருந்தாலும், அந்த சவாலான நாட்கள், சமாளித்த விதங்கள், அந்த தருணங்கள் நமக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு!.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...