Sunday, April 22, 2018

34 வெள்ளம் விரட்டியது?


ஐப்பசி மாதம் ஆடை மழை என்பார்கள். அதை சரியாக புரிந்து கொண்டது வானம். ஒரு மாதம் கொட்டிய மழையில் ஊரே வெள்ளக் காடு ஆனது. கோரையாறு கரை புரண்டு ஓடியது.

ஓரத்தூரில் உடைப்பு எடுத்தால், ஓருர் - வெள்ளங்கால் வெள்ளக்காடு ஆகும் என்பதை நிரூபித்தது அந்த வருடம். நானலூர், செந்தாமரைக்கண், மாரிநகரி போன்ற இடங்களில் உடைப்பு எடுக்கும் அபாயம் இருந்தது. அதனால், ஊர் மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி தண்டரா போட்டு எச்சரித்திருந்தனர்.

வீட்டுக்கு வீடு, பல்லாங்குழி ஆட்டம், ஆடுபுலி ஆட்டம், தாயம் விளையாட்டு, சீட்டு கட்டு விளையாட்டு என அவரவர் வயதுக்கு தகுந்த மாதிரி குழு சேர்த்துக் கொண்டு விளையாடினார்கள்.

ஆடு மாடுகள் புல்லுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டது. கொஞ்சம் மழைவிட்டு வெக்காளித்ததும் தலை ஒடித்து போடுவதில் போட்டி போட்டார்கள். கொஞ்ச நேரம் வானம் பல்லைக் கட்டினால், அடுத்த அரை மணியில் கரு மேகங்கள் சூழ்ந்து கொண்டு மழையை அள்ளிக் கொண்டு வந்து கொட்டி தீர்க்கும். இப்படி ஒரு மாதம் யாரையும் வேலைக்கு செல்ல விடாமல் வீட்டிற்குள் முடக்கிப் போட்டது இயற்கை.

ஆவணி மாதம் முழுவதும் அந்தமான் தீவு, ஐப்பசி மாதம் முழுவதும் மழைக்காக வீட்டுக்குள் ஒதுங்கியது என வேலை இல்லாமல் இருந்ததால், வருமானத்திற்கு வழி இல்லாமல் போனது.

வெள்ளாமை எல்லாம் வெள்ளத்தில் கிடந்தது. மழை தண்ணீர் வடிய பத்து நாள், அல்லது இருபது நாள் ஆகும். குருவையும், சம்பாவும் கரைக்கு கொண்டு வந்து காசக்க வழி இல்லை. எல்லாம் வெள்ளத்தில் போனது. விவசாயிகள், விவசாய கூலிகள் எல்லோருக்கும் கஷ்டமும், நஷ்டமும் ஏற்படும் நிலை உண்டானது. நான் மட்டும் ஊருக்குள் இருந்து என்ன செய்யப் போகிறேன்?.

இங்கு இருந்து கொண்டு கஷ்டப்படுவதை காட்டிலும், சென்னை சென்று கடையில் வேலை செய்து பணம் அனுப்புகிறேன். அதற்கு உங்க அம்மாவின் சம்மதம் வேண்டும். அதனால், பின்னத்தூர் சென்று அனுமதி பெறலாம் என்று என் மனைவியிடம் தெரிவித்தேன். அவள் அதற்கு பச்சைக்கொடி காட்டினாள்.

அண்ணனிடம் மாமியார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு பின்னத்தூர் சென்றோம். என் மாமியார் சென்னை செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. கஷ்டமோ, நஷ்டமோ எங்களுடனே இருங்கள் என்றார்.

என்னுடைய கிளார்க் சித்தப்பா மகன் ரவி, சென்னையில் பிராந்தி கடை பார் நடத்துகிறான். அவனுக்கு உதவியாக என் தம்பி நமசிவாயம் அங்கு இருக்கிறான். நான் சென்று அவர்களுடன் தாங்கிக் கொண்டு முன்பு வேலைப் பார்த்த டீ கடையில் வேலை செய்கிறேன். மாத மாதம் பணம் அனுப்பி வைக்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருகிறேன். என்னால் வேலை செய்யாமல் சும்மா ஊரில் இருக்க முடியாது என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். 

அவர்களிடம் பதில் இல்லை.

அந்தப் பையன் ஒரு சினிமா பைத்தியம். சினிமா சினிமா என்று நான்கு ஆண்டுகள் ஊருக்குள் வரவே இல்லை. இந்த இடத்தில் இருக்கிறேன் என்று கூட ஒரு கடிதம் போட்டதில்லை. அவருக்கு உன் பெண்ணை கட்டி கொடுத்திருக்கிறாயே? ஒழுங்கா ஊரில் இருப்பாரா? என்று பல பேர் என்னைப் பற்றி அவரிடம் அவநம்பிக்கை சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். 

மீண்டும் சென்னைக்கு அனுப்பினால், திரும்பி வருவேனா என்கிற பயம் அவர்களிடத்தில் இருந்தது.

ஏற்கனவே அந்தமான் சென்ற ஒருவன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். இப்போது இவன் சென்னைக்கு சென்றால், இந்த பெண்ணின் வாழ்க்கையும் என்ன ஆகும்? அதனால், மாமியாரிடம் பயம் அதிகமாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு பிறகு நம்பிக்கை ஏற்படுத்தி அனுமதி பெற்று தந்தாள் என் மனைவி தமிழ்ச்செல்வி. என் துணிகளை ஒரு பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...