Sunday, April 22, 2018

37 உதவி இயக்குநர் வேலைக்கு முயற்சி.


முதலில் என்னுடைய பெரிய சித்தப்பா மகன் கோவிந்தராசுக்கு தம்பிக்கோட்டை ரெங்கசாமி மகள் விஜயா என்பவரை நிச்சயம் செய்தனர். இரண்டாவதாக சின்ன சித்தப்பா மகன் முருகேசனுக்கு, வடசங்கந்தி வைத்திலிங்கம் மகள் லட்சுமி என்பவரை நிச்சயம் செய்தனர். மூன்றாவதாக எனக்கு பின்னத்துர் தர்மலிங்கம் மகள் தமிழ்ச்செல்வி என்பவரை நிச்சயம் செய்தனர்.

ஆனால், எனக்கு முதலில் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரின் திருமணத்திற்கு நாங்கள் இருவரும் வாழ்த்த சென்றோம். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் 1992 ஆம் ஆண்டில் நடந்தது.

கோவிந்தராசுவின் மைத்துனர் சென்னையில் பிராந்திக் கடை பார் நடத்தி வந்தார். அதனால், கோவிந்தராசுக்கும் ஒரு பார் பிடித்துக் கொடுத்து சென்னைக்கு குடும்பத்தையே அழைத்துக் கொண்டார். பார் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததால், தன் தம்பி ரவிக்கு ஒரு பார் பிடித்து கொடுத்து அதைப் பார்த்துக்க சொன்னார் கோவிந்தராசு.

ரவி, என் தம்பி நமசிவாயத்தை அழைத்துக் கொண்டான். அவனுக்கு உதவியாக இருந்து அந்த பாரை கவனித்துக் கொண்டான் நமசிவாயம்.

அப்போதெல்லாம் சில அண்ணாச்சிகள் பங்குதாரர்களாக இணைந்து பிராந்தி கடையை ஏலத்தில் எடுத்து நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு விசுவாசமாக இருபவர்களுக்கு பார் நடத்த உதவினார்கள். இதில் இரு அண்ணாச்சிகள் என் தம்பியின் பழக்க வழக்கம் அணுகுமுறை பிடித்துப் போக அவனுக்கும் ஒரு பார் நடத்த உதவினார்கள்.

அவனுக்கு கோடம்பாக்கத்தில் கடை கிடைத்திருந்தது. தனக்கு உதவியாக நான்கு ஆட்களை வைத்துக் கொண்டு பார் நடத்தி வந்தான் என் தம்பி. கிராமத்தில் இருந்து வந்த பார் ஊழியர்களுக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்று என்னிடம் தெரிவித்த போது, மூன்று வேலை சாப்பாட்டுக்கு என்ன செல்வாக்கிறதோ, அந்த தொகையை என்னிடம் கொடுத்தால் வீட்டில் இருந்து சமைத்து சாப்பாடு கொண்டு தருக்கிறேன் என்றேன். அதற்கு அவர்கள் சரி என்றார்கள்.

குருநாதர் டைமண்ட் பாபுவிடம் முழுநேரமாக உதவியாளராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்,டீ மாஸ்டர் வேலையை விட வேண்டியதாகி விட்டது.

எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் சம்பளம் என்பதால், அதற்குள் குடும்பம் நடத்த முடியவில்லை. வீட்டு வாடகை ஐநூறு, குடும்ப செலவுகள், மருத்துவ செலவுகள் என பண தேவைகள் அதிகமாக இருந்தது. அதனால், பார் ஊழியர்களுக்கு சாப்பாடு கொடுப்பது, குருநாதரின் தந்தை பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் தரும் வேலைகளை செய்து கொடுத்து அதன் மூலமாக வருமானம் பெறுவது, சிறுகதைகள் எழுதி அதன் மூலம் சன்மானம் பெறுவது, காசி திரையரங்கில் சனி, ஞாயிறு நான்கு காட்சிகளுக்கும் ஐந்து டிக்கெட்கள் முன் பதிவு செய்து, டிக்கெட்டின் விலையைவிட இரண்டு ரூபாய் அதிகம் வைத்து விற்பது என்று, சில வேலைகளை செய்து வருமானத்தை பெருக்கினேன்.

வேலைக்கு செல்ல தினமும் பஸ்ஸில் செல்வதால் அதிக நேரம் செலவானது. அதனால், நேர செலவை மிச்சப்படுத்த நானூறு ரூபாயில் ஒரு சைக்கிள் வாங்கினேன். அது என் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருந்தது.

எனது தம்பி நமசிவாயம் சம்பாதித்த வருமானத்தை சேமித்து, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தங்கைக்கு சீர்வரிசை கொடுக்கவும், ஐந்துக்கு மருந்து கொடுக்கவும், பிரசவ செலவுக்கு பயன் படுத்தவும் உதவியாக இருந்தான்.

இப்படி நான்கு மாதங்கள் ஓடின. பிரசவ காலம் என்பதால் என் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். என் ஒருவனுக்கு வீடு எதற்கு என்று வீட்டை காலி செய்து, கோடம்பாக்கத்தில் என் தம்பியும், அவனது ஊழியர்களும் இருந்த அறைக்கு சென்று தங்கிக்கொண்டேன்.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய ராஜமுத்திரை படத்திற்காக புதுடெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் படப்பிடிப்பு நடத்த, அப்போது சிறைத்துறை அதிகாரியாக இருந்த கிரண்பேடியிடம் அனுமதி பெறவும், மும்பை ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறவும், குருநாதர் டைமண்ட் பாபு வட இந்தியா சென்றிருந்தார்.

திரைப்படத் துறையில் இயக்குநராக சிறக்க வேண்டும் என்று வந்த நான், மக்கள தொடர்பாளரின் உதவி பணியை மட்டுமே செய்கிறேனே?.  குருநாதர் டைமண்ட் பாபு சென்னை திரும்பியதும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய, வாய்ப்பு ஏற்படுத்தி தரும்படி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

உதவி இயக்குநராக வேலை செய்தால், சம்பளம் எதிர்ப்பார்க்க முடியாது. குடும்ப செலவுகளுக்கு என்ன செய்வது என்று ஒரு குழப்பம், பயம், மனதில் உருவானது.

உதவி இயக்குநர்களுக்கு ஒரு படத்திற்கு என்ன சம்பளம் தருவார்கள் என்று தெரிந்து கொள்ள, செல்வமணி சார் ஆபீஸ் மேனேஜர் ஆன்ட்ரூஸ் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த புரொடக்‌ஷன் மேனேஜர் மல்லியம்பட்டி மாதவன் என்னை ஏற இறங்க பார்த்தார்.

அதிரடிப்படை இரவு நேர படப்பிடிப்பு தாளமுத்து நடராஜன் மாளிகையில் நடந்த போதும், சைதாப்பேட்டை பாலம் அருகே கட்டிக் கொண்டிருந்த பனகல் கட்டிடத்தில் நடந்த போதும், இந்த எண்ணத்தில் தான் அங்கு வந்தாயா? என்பது போல பார்த்தார்.

என் ஆர்வத்தையும், முயற்சியையும் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர், குடும்பம், வருமானம் என்று உதவி இயக்குநருக்கு முயற்சி செய்ய கூடாது. ஷாட் எப்படி வைக்கிறார். நடிப்பை எப்படி வாங்குகிறார் என்று தொழிலை கத்துகிற எண்ணத்தில் மட்டும் வரணும். ராஜமுத்திரை படத்திற்கு நிறைய உதவியாளர்கள் இருக்கிறார்கள். அதனால், அடுத்தப் படத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...