Sunday, April 22, 2018

8 அடிவாங்கிய அனுபவத்தை பாக்யராஜிடம் சொன்னேன்


மாணவன் நினைத்தால் பட விழாவில் 
எனது அப்பாவின் சின்னம்மாள் மீனாட்சிசுந்தரம் வீடு மாரிநகரி கிராமத்தில் இருந்தது. விடுமுறை காலங்களில் சில சமயம் அங்கு செல்வேன். அங்கு அம்பிகா அத்தை, அவரது சித்தப்பா வீட்டு இரு தங்கைகள்,  இரு தம்பிகள் என விளையாடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும். அதில் செல்லாப்பா, ரவி இருவருடனும் அதிக நேரம் செலவிடுவேன். வேலைக்காரன் ராசப்பா எனக்காக இளநீர் பிடுங்கி போடுவார்.

அங்கு பகல் எல்லாம் விளையாடி மகிழ்ந்தாலும், இரவு தூங்கும் வரை பேச்சு, அரட்டை என நேரம் போவதே தெரியாது. அத்தை அம்பிகாவுக்கு ரேடியோ என்றால் ரோம்ப இஷ்டம். அதனால், நாங்கள் கத்திப் பேசிக் கொண்டிருந்தால் வாயை மூடச் சொல்லி கத்துவார்.

அப்படி அவருக்காக வாய் மூடி, காதை திறந்த போது ரேடியோ கேட்ட முடிந்தது. வர்த்தக ஒலிபரப்பில் நல்ல நல்ல பாடல்களை கேட்க முடியும். அதன் நடுவே ஏவி.எம்மின் ‘முந்தானை முடிச்சு’. உங்கள் கே.பாக்யராஜின் கைவண்ணத்தில் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் ஒலிபரப்பாகும். அதில் ‘’வா வா வாத்தியாரே வா’’ என்கிற ஒரு பாடலின் சிறு பகுதியையும் ஒலிபரப்புவார்கள்.

பாக்யராஜின் மௌன கீதங்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், தூறல் நின்னுப் போச்சு, இன்று போய் நாளை வா, பாமா ருக்மணி என பல படங்களை பார்த்திருக்கிறேன். முந்தானை முடிச்சு விளம்பரத்தை கேட்டதும் இந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டானது.

பட்டுக்கோட்டை வீரா தியேட்டரில் முந்தானை முடிச்சு படம் வெளியாகி இருந்தது. முதல் காட்சியை, முதல் ஷோ பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் சென்றேன். தியேட்டர் வேலைக்காரர்கள் கூட வரவில்லை. ஒன்பது மணிக்கு போடுகிற படத்திற்கு காலை ஏழு மணிக்கே முதல் ஆளாக சென்று கேட்டின் முன்பு நின்று கொண்டேன். 

படம் பார்ப்பது என்றால் பசி கூட வராது. அப்படி படம் பார்க்கிற ஆசை எனக்குள் இருந்தது. நேரம் ஆக ஆக மக்கள் கூட ஆரம்பித்தனர். கூட்டம் அதிகமானது. கூட்டத்தில் தள்ளு முள்ளு இருந்தது. நசுங்கிக் கொண்டிருந்தேன். இருப்பினும் முதல் ஆளாக நான் டிக்கெட் வாங்கப் போகிறேன் என்கிற பெருமையும், கர்வமும் எனக்குள் இருந்தது.

கேட்டை திறப்பதற்கு தியேட்டர் ஊழியர் வந்த போது நெருக்கி தள்ளினார்கள். அந்த தள்ளலில் மாட்டிக் கொண்டு பிதுங்கினேன். கேட் திறக்கப் பட்டதும், மடை திறந்த வெள்ளம் போல கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு டிக்கெட் கவுண்டரை நோக்கி ஓட ஆரம்பித்தது.

கேட் திறந்ததுமே அந்த தள்ளலில் முன் நின்ற நானும், இன்னொரு பையனும் குப்புற விழுந்து விட்டோம். எங்களை மிதித்துக் கொண்டு கூட்டம் முன்னேறியது. வலி தாங்க முடியவில்லை. புதுச்சட்டை நாசமாகிவிட்டது. இருந்தாலும் டிக்கெட் கிடைக்காமல் போய்விடுமே என்று பதறி அடித்துக் கொண்டு வரிசையில் சென்று நின்றேன்.

வலியும் பசியும் ஒன்று சேர்ந்து உயிரை வாங்கியது. படம் பார்த்த போது அதெல்லாம் பறந்து போனது. ஊரில் நான் தானே முந்தானை முடிச்சு முதல் ஆளாக பார்த்தேன் என்கிற பெருமிதம்.

பாக்யராஜின் திரைக்கதைகள் என்னை அவருடைய ரசிகர் ஆக்கியது. கிராமத்தில் இருப்பவர்களிடமும், பள்ளி சக நண்பர்களிடமும் கதை சொல்லி சொல்லி ஒரு கதை ஆசிரியன் போல ஆனேன்.

‘’பாலு படம் பார்த்தால் ஊரே பார்த்த மாதிரிதான்’’ என்று எனக்கு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தின் துவக்கத்தில் சென்சார் சர்ட்டிபிகேட் போட ஆரம்பித்தது முதல், எண்ட் கார்டு முடியும் வரை ஒவ்வொரு காட்சியையும் அந்த வசன உச்சரிப்போடு, சஸ்பென்ஸ் வைத்து சில இடங்களில் பின்னணி இசையோடும் சேர்த்து சொல்வேன். கிட்டதட்ட படம் பார்ப்பது போலவே கதை கேட்பார்கள்.

அப்படி கதை சொல்வதால், எனது சித்தப்பா வீட்டு அக்காள் கௌசல்யா, என்னை பாரதிராஜா என்று பாசத்தோடு அழைப்பார். எத்தனை கூட்டம் இருந்தாலும் என்னை அழைக்கும் போது ‘’வாங்க பாரதிராஜா’’ என்றுதான் அழைப்பார்.

நான் சினிமாவுக்கு செல்வேன் என்று அப்போதே நினைத்தார், அவர். நான் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால், ‘’கவிஞர் கண்ணதாசன் என்ன பண்றார்’’ என்றுதான் கேட்பார்.

இப்படி பாரதிராஜாவாக, பாலு மகேந்திராவாக, பாக்யராஜாக, கண்ணதாசனாக என்னை நினத்தவர் அவர். இப்போது நான் சினிமாவில் இருப்பதைக் கண்டு பெருமைப் படுபவர்களில் அவரும் ஒருவர்.

பாக்யராஜின் போட்டோ பேப்பரில் வந்தால், அதை கத்தரித்து சுவற்றில் ஒட்டி வைப்பேன். பாட நோட்டுக்கு அட்டை போடும் போது, அந்த நோட்டின் முகப்பிலும் அவரது படத்தை ஒட்டி வைப்பேன்.

ஒரு நாள் அறிவியல் வாத்தியார், என்னை அழைத்து ‘’இது என்ன?’’ என்று கேட்டார். அதில் டி.சர்ட் அணிந்து கண்ணாடியோடு அழகாக காட்சியளித்தார், பாக்யராஜ். 

நான் பதில் சொல்லாமல் நின்றேன். அருகில் அழைத்து என் காதை திருகி, முதுகில் தட்டியவர், பிறகு சினிமா போஸ்டரெல்லாம் நோட்டுக்கு வரக்கூடாது. வீட்ல வச்சுக்கணும் என்று கண்டித்தார்.

சினிமாவுக்கு வந்து வாய்ப்பு தேடிய காலங்களில் பாக்யராஜ் அலுவலகத்திற்கு பல முறை சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறேன். கடவுளை காண முடியாமல், பூசாரிகளை மட்டுமே பார்த்து திரும்பிய பக்தனை போல பல முறை திரும்பி இருக்கிறேன்.

காலம் உருண்டோடியாது.

தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பல முறை அவரைப் பார்த்து அலுவல் விஷயமாக பேசி இருகிக்கிறேன். பத்திரிகையாளனாக சொக்க தங்கம் படப்பிடிப்பிற்கு பொள்ளாச்சி சென்ற போது, அவரிடம் மனம் விட்டு பேச வாய்ப்புகள் கிடைத்தது.

‘’டாடி டாடி’’ பாடலை மேடையில் பாடியது, வீரா தியேட்டரில் முந்தானை முடிச்சு படம் பார்க்க சென்று சட்டை கிழிந்தது, வாத்தியாரிடம் அடி வாங்கியது என அனைத்து சமபவங்களையும் அவரிடம் சொன்னேன். அவர் கேட்டு ரசித்தார்.

இப்போது ஒரு பட துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா போன்ற விழாக்களுக்கு அவரை அணுகி அழைத்தால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கலைஞர்களை உற்சாகப் படுத்துகிறார். பெருமை படுத்துகிறார். இந்திய அளவில் திரைக்கதைக்கு பெயர் போன அவரைப் பற்றி எழுதும் போது மனம் பெருமைப் படுகிறது.

இப்போது அடிக்கடி சந்திக்கிற சூழல் கிடைக்கிறது. ஆனாலும் அவரை பார்க்க முடியாமல் திரும்பிய அந்த நாட்கள் இன்னும் பசுமையாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...