Sunday, April 22, 2018

58 தலைவர் பதவிக்கு இப்ராஹிம் ராவுத்தர் சம்மதம்


இப்ராஹிம் ராவுத்தர்
புலன் விசாரணை, கேப்டன் பிராபாகரன், என் ஆசை மச்சான், என ஏராளமான படங்களை தயாரித்தவர், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்.

விஜயகாந்தின் நண்பர். விஜயகந்தின் வெற்றிக்காக பல ஆண்டுகள் அவரோடு இணைந்து பயணித்தவர். கஷ்ட நஷ்ட காலங்களில் அவரோடு இருந்தவர். நட்புக்கு உதாரணமாக திகழ்ந்தவர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் திரு.கே.ஆர்.ஜி அவர்கள் தலைவராக இருந்த போது, அச்சங்கத்தின் கௌரவ ஆலோசராக இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர். 

ராவுத்தர் பிலிம்ஸ், சேரநாடு மூவி கிரியேஷன்ஸ், ஆண்டாள் அழகர் என சில பட நிறுவனங்களை உருவாக்கி பல படங்களை தயாரித்தவர்.

தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் ஒரு பதவியை வகிக்க கூடாது என்கிற சூழல் எழுந்த போது, சுயநலமின்றி தயாரிப்பாளர்களுக்கு சர்வீஸ் செய்ய எந்த தயாரிப்பாளர் சரியாக இருப்பார் என்று தலைவர் திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

தயாரிப்பாளர் சங்கத்தை பலமாக உருவாக்கிய அவர், அதற்கு சரியான தலமையை கொடுத்து செல்ல வேண்டும் என்கிற கவலையில் இருந்தார். பலரை எழுதிப் பார்த்து, கடைசியில் இப்ராஹிம் ராவுத்தரை முடிவு செய்திருக்கிறார். 

G.balan
வெளியில் சென்றிருந்த நான் அப்போதுதான் அலுவலகத்தில் நூழைந்தேன். ’’பாலா இங்கே வா’’ என்று அழைத்த திரு. கே.ஆர்.ஜி. அவர்கள், என்னிடமும் அதனைப் பற்றி விவாதித்தார்.

கடைசியில் ’’ராவுத்தர் எப்படிடா’’ என்று கேட்டார். உங்கள் யோசனை சரியாக இருக்கும் முதலாளி என்று பதில் சொன்னேன்.

நாம் முடிவு செய்தால் மட்டும் போதாது. அவர் இந்தப் பதவியை ஒப்புக் கொள்ள வேண்டும். கடைசியில் மறுத்துவிட்டால் அந்த சமயத்தில் வேறு ஒருவரை திடீர் என முடிவு செய்ய முடியாது என்று அவரிடம் இதுப் பற்றி கேட்டு வர அனுப்பினார்.

நான் ராவுத்தரின் உதவியாளர், குமார் அண்ணன் அவர்களை தொடர்பு கொண்டு ‘’ராவுத்தர் சார் எங்கே இருக்கிறார்?’’ என்று விசாரித்தேன். ’’வீட்டில் இருந்து கிளம்புகிறார். நூறடி ரோடு அலுவலகம் செல்கிறார்’’ என்று தெரிவித்தார் குமார்.

நான் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு சென்றேன்.

’’வா... பாலா’’ என்று எழுந்து நின்று வரவேற்றார். அப்படி எழுந்து நின்று வரவேற்பது அவரது பண்பாடு. 

அவரிடம் கே.ஆர்.ஜி. அவர்களின் எண்ண ஓட்டங்களைச் சொன்னேன்.

தலைமை பதவி என்பது ரொம்ப முக்கியமான பொறுப்பு. கொஞ்சம் அசைந்தால் கூட தலையில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். அனைவரையும் அனுசரித்து அன்புகாட்டி அடக்கி வைக்கும் குணம் உள்ளவர்கள்தான், அந்தப் பதவியை வகிக்க முடியும். அது என்னால் முடியாது பாலா, என்று சொன்னவர், பிறகு, ’’அறக்கட்டளையில் என்னதான் பிரச்சனை’’ என்கிற கேள்வியை எழுப்பினார்.

அறக்கட்டளை உருவானது. அதற்கு திரு.கே.ஆர்.ஜி. திரு.கேயார், திரு.டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் அறங்காவலராக இருந்தது, பிறகு டி.ஆர்.ராமண்ணா மறைவுக்கு பிறகு, திரு.கே.பாலசந்தர் அவர்களை  செயற்குழுவில் தேர்வு செய்தது, நமக்கு இந்த பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டவர்கள் ஏமாந்து, குழு மனப்பான்மையோடு செயல்படுவது என அன்றைய உண்மை நிலவரத்தை சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டவர், பிறகு சிந்தித்தார். அரை மணி நேரத்திற்கு பிறகு, ’’தலைவரிடம் சென்று நான் சம்மதித்துவிட்டேன்’’ என்று நல்ல பதிலைச் சொல்லி அனுப்பி வைத்தார்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...