Sunday, April 22, 2018

63 செல்லம் சொன்ன சேதி


சூளைமேடு, ராமாபுரம் முதல் தெருவில் இருந்த வீடு, அந்த வீட்டின் உரிமையாளர் மகனுக்கு தேவை என்று கேட்டுக் கொண்டதால், ஒரு வருடத்திலேயே வேறு வீடு பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சூளைமேடு ராஜேஸ்வரி தெருவில் என்னுடைய பெரியம்மாள் மகன் வி.கே.டி.மாரிமுத்து, அவரது சகோதரி பாஞ்சாலி, என் மாமாவின் மைத்துனர் உலகநாதன் ஆகியோர் தனித்தனியாக வசித்தனர்.

அதனால், அந்தப் பகுதியில் வீடு பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அண்ணன் மாரிமுத்துவிடம் வீடு பார்த்து தருமாறு நேரில் சென்று சொல்லிவிட்டு வீரபாண்டியன் நகர் முதல் தெரு வழியாக திரும்பிய போது, வாடகைக்கு வீடு என்று ஒரு விளம்பரம் கண்ணில் தென்பட்டது.

அது புருஷோத்தமன் என்பவரின் வீடு. என்னைப் பற்றி அவரிடம் தெரிவித்து, அதன் பிறகு முன்பணம் கொடுத்து, அந்த வீட்டுக்கு குடி வந்தேன். சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசித்தோம். அந்த வீட்டில் இருந்த போது எங்கள் குடும்பத்தில் பல நல்ல நிகழ்வுகள் நடைபெற்றது. கிட்டதட்ட என் சொந்த கிராமம் போலவே அந்த தெருவும் அங்குள்ள மக்களும் தெரிந்தார்கள். இருந்தார்கள். இருக்கிறார்கள்.

ஆண்டு தோறும் எனது சகோதரி மலர்க்கொடியின் நினைவுவாக சொந்த கிராமத்தில் ஒன்று கூடுவோம். அப்படி ஒரு முறை சென்ற போது, தம்பி நமசிவாயம் திருமண விஷயமாக வரன் எதுவும் பார்த்தீர்களா? என்று அக்காவிடம் கேட்டேன்.

பல இடங்களில் கேட்டு வந்ததைப் பற்றி சொன்னார்.

இப்படியே இழுத்துக் கொண்டு சென்றால் எப்படி என்று ஆதங்கப்பட்டேன்.
நல்ல வரன் அமைவதற்கு நல்ல வரம் வாங்கி வரவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. பிடித்தப் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வாதிட்டேன்.

கல்யாண யோகம் என்று ஒன்று இருக்கிறது. நாம் எல்லாத்தையும் கையில் சேர்த்து வைத்துக் கொண்டு தேடு தேடு என்று தேடினாலும் உடனே பெண் தெவையாது.

கையில் நயா பைசா இல்லாமல் இருப்பார்கள். எங்கிருந்தோ திடீர்னு சம்பந்தம் வரும். கடனை உடனே வாங்கி கல்யாணத்தை முடிச்சி வச்சிடும்.

அதுமாதிரி, அமையும் போதுதான் அமையும். நீ தலை கீழே நின்னாலும் உடனே நடக்காது பாலு என்று அட்வைஸ் செய்தார்.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் கிடையாது. முறையாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கடமைக்கு பெண் தேடுவதை காட்டிலும், பெண் தேடுவதே கடமையாக இருந்தால் உடனே கிடைக்கும் என்று அக்காவிடம் குறைப்பட்டுக் கொண்டேன்.

அக்காவுக்கு கோபம் வந்திவிட்டது. ‘’நான் கேட்காமலா, தேடாமலா இருக்கேன்’’ என்று சத்தம் போட்டார்.

அவரது சத்தத்தை வேடிக்கைப் பார்த்த வேலைக்கார பெண்மணியிடம், ‘’உங்க ஊர்ல எங்க ஜனத்துல... பொண்ணுங்க எதுவும் இருக்கா செல்லம்மா...’’ என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.

செல்லம்மாள் யோசித்தார். பிறகு சுப்பிரமணியன் டைலர் வீட்டில் இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. இந்த வருஷம் கட்டிக் குடுக்குறாரான்னு தெரியல...’’ என்று சிந்தனை தேங்கிய முகத்தோடு சொன்னார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அக்காவின் கணவர் வீரப்பசாமி, ‘’யாரு அம்மளூர் சுப்பிரமணியன் மகளா?’’ என்றார்.

ஆமாம் என்று பதில் சொல்ல, விசாரிப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார் அத்தான்.

எந்தப் பெண்ணையும் பெண் பார்க்க செல்லும் போது ஜோடித்து அழகு பதுமையாக நிற்க வைப்பார்கள். நமக்கு அழகு பதுமை வேண்டாம். உழைக்கிற மாதிரி பெண் வேண்டும். அதனால், பெண்ணைப் பற்றி தீர விசாரித்து முடிவு செய்யுங்கள் என்று சொல்லி எழுந்தேன்.

அம்மளூரில் என்னுடைய காமாட்சி சின்னம்மா வீடு இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. அங்கு சென்று அவரிடம் பெண்ணைப் பற்றி விசாரிக்கலாமே என்று முடிவு செய்து, அண்ணனிடம் இதை தெரிவித்து விட்டு, அவரிடம் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு நானும் அம்மாளூருக்கு ஓடினேன்.

பெரியம்மாள் பெண்ணைப் பற்றி, அவரது உறவினர்கள், பங்காளிகள் என எல்லா நிலவரங்களையும் நல்லாவிதமாக சொன்னார்.

அத்தான் வீரப்பசாமியுடன் கடைக்கு வந்த பெண்ணின் தந்தை சுப்பிரமணியன், என் தம்பி பற்றியும், அவன் என்ன வேலை செய்கிறான் என்பது பற்றியும் அக்காவிடம் விசாரித்திருக்கிறார்.

அருகில் அமர்ந்திருந்த என் தம்பி நமசிவாயம், நான் தான் பையன். சென்னையில் பிராந்திக்கடை பார் நடத்துகிறேன். குடிப்பது, புகைப்பது என எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. என்னை பிடிச்சிருந்தா, நம்பிக்கை இருந்தா ... என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,

பையில் இருந்த ஜோதிட புத்தகத்தை எடுத்து அவனிடம் நீட்டி, உங்களைப் எனக்கு பிடிச்சிருக்கு. ஜாதக் பொருத்தம் பாக்குறதுன்னா பாருங்க. பொருத்தம் சரியா இருந்தா எப்போ பொண்ணு பார்க்க வாரீங்கன்னு சொல்லி அனுப்புங்க’’ என்று கூறிவிட்டு, மனம் நிறைய மகிழ்ச்சியோடு சென்றிருக்கிறார்.

நான் கடைக்கு திரும்பிய போது, அண்ணனும், அத்தானும் கணபதி என்பவரிடம் ஜாதகப் பொருத்தம் பார்க்க சென்றிருந்தார்கள்.

பெண்ணின் தந்தை வந்து விசாரித்தது, தம்பி பதில் சொன்னது என்று நடந்த விபரங்களை அக்கா என்னிடம் தெரிவித்தார்.

அன்று இரவே சென்னை திரும்ப இருந்த நான், மறு நாள் உறவினர்களுடன் சென்று பெண் பார்த்து, திருமணத்திற்கான நிச்சய தேதியை முடிவு செய்துவிட்டு, அதன் பிறகு சென்னைக்கு பஸ் ஏறினேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...