Sunday, April 22, 2018

51 தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்


பெரும் விலை கொடுத்து வாங்கும் படங்கள் தோல்வி அடையும் போது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. அதனால், திரைப் படங்களை வாங்கும் போது, இந்த இந்த எரியாவுக்கு, இந்தந்த நடிகருக்கு இன்னென்ன விலைக்குள் படங்களை ஏற்றி, இறக்கி வாங்க வேண்டும். அதற்கு மேல் விலை வைத்து வாங்கினால் விநியோகஸ்தர் சங்கங்கள் ஒத்துழைப்பு தராது என்று முடிவெடுத்து விநியோகஸ்தர்களுக்கு வினியோகஸ்தர்கள் சங்கம் அறிவுருத்திருந்தது.

ஏற்கனவே நடிகர்கள் சம்பளம் பெரிதாக பேசப்பட்டு படப்பிடிப்பில் இருக்கும் படங்களுக்கு விநியோகஸ்தர் சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், செயற்குழுவை கூட்டி விவாதித்து விநியோகஸ்தர் சங்கங்களுடன் கலந்து பேச வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் தலைவர் கே.ஆர்.ஜி.யிடம் வந்து முறையிட்டனர்.

அதனால், செயற்கு குழு கூட்டத்தை அன்று மாலையே ஏற்பாடு செய்ய சொன்னார் கே.ஆர்.ஜி. கூடவே, ஆலோசனைக் குழு, சிறப்பு அழைப்பாளர்கள் என அனைவரையும் அழைக்க வேண்டும் என்று கூறினார்.

அவசர செயற்குழு கூட்டம் என்பதால், தொலைபேசி மூலம் செயற்குழு உறுப்பினர்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தேன், நான்.

அப்போது ஆனந்த் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் கோவை முருகேசன், ஒரு புகார் கடிதத்துடன் வந்தார். அந்த கடிதத்தில், பாலு மகேந்திரா இயக்கத்தில் ‘ராமன் அப்துல்லா’ என்கிற படத்தை தயாரித்து வருவதாகவும், படப்பிடிப்பில், இயக்குனர் பாலுமகேந்திராவுக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும், படப்பிடிப்புக்கு தொழிலார்கள் ஒத்துழைப்பு தராததால், படப்பிடிப்பை தொடரமுடியவில்லை என்றும் இந்தப் பிரசனைப் பற்றி பேசி படப்பிடிப்புக்கு உதவுமாறு எழுதி இருந்தார். 

கடிதத்தை தலைவர் கே.ஆர்.ஜியிடம் படித்துக் காட்டினேன். தயாரிப்பாளர் கோவை முருகேசனை அழைத்து முழுமையான காரணம் என்ன? என்று கேட்டார்.

துணை நடிகர்களை காட்சிகளில் பயன்படுத்தும் போது, உறுப்பினர் அல்லாத சிலரையும் இயக்குனர் பாலு மகேந்திரா பயன் படுத்தினார். இதனால், தொழிலாளர்  அமைப்பில் இருந்து நேரில் வந்து பேசி இருக்கிறார்கள்.

இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால், தொழிலாளர் அமைப்பின் தலைவரே, தொழிலாளர்களைப் பார்த்து பேக்கப் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு சென்று பேசினார். அதற்கு அவர்கள் தொழிலாளர் அமைப்பு தலைவரை சந்திக்கச் சொன்னார்கள். இவர் அவரை சந்திக்க மறுக்கிறார். இதனால் நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

என்னை அழைத்த கே.ஆர்.ஜி., இந்த பிரச்ச்னையையும் செயற்குழு கூட்டத்தில் வைத்து பேசலாம். கடிதத்தை பெற்றுக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடு என்றார்.

கே.ஆர்.ஜி. மதிய உணவுக்கு வீட்டுற்கு சென்ற பிறகு, மீண்டும் செயற்கு கூட்ட அழைப்பு வேலைகளில் பிசியானேன்.

ஆலோசனைக் குழுவில் இருந்த தயாரிப்பாளர் பாரதிராஜா அவர்களை அழைத்த போது, அவர் சலிப்புடன் ‘’கூட்டத்திற்கு வந்து என்னய்யா பண்றது. நான் கொடுத்த புகாருக்கு என்னய்யா செய்தீர்கள்?’’ என்று கேட்டார்.

ராஜ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எம்.ராமநாதன் அவர்கள் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த தமிழ்ச்செல்வன் என்கிற படத்தை இயக்கி இருந்தார் பாரதிராஜா.

அந்தப் படம் வெளியாகும் போது இயக்குனருக்கு கொடுக்க வேண்டிய மீதி சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்கவில்லை. அதைப் பெற்று தருமாறு புகார் கடிதம் கொடுத்திருந்தார் பாரதிராஜா. அந்தக் கடிதம் வந்த அன்றே செயற்குழு உறுப்பினராகவும் இருந்த எம்.ராமநாதன் அவர்களை அழைத்து விசாரித்தார் தலைவர் கே.ஆர்.ஜி. 

அந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தையும், கஷ்டத்தையும் சொன்ன தயாரிப்பாளர் எம்.ராமநாதன், இப்போது தன்னால் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை தெரிவித்தார்.

அதனால், அடுத்தப் படம் துவங்கும் போது இதுப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார் கே.ஆர்.ஜி.

இந்த தகவலை பாரதிராஜாவிடம் தெரிவித்தேன். பிறகு சமாதானம் ஆனவர், ‘’எத்தனை மணிக்கு மீட்டிங்’’ என்று திரும்ப கேட்டார். நான் நேரத்தைச் சொன்னதும் ‘’சரி’’ என்று போனை வைத்துவிட்டார்.

பிலிம் சேம்பரில் இருந்த கூட்ட அரங்கில் செயற்குழு கூடியது. அழைக்கப்பட்டவர்களில் தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் விநியோகஸ்தர் சங்கத்தின் முடிவுகள் குறித்த விவாதம் நடந்தது. இப்போது எடுத்து வரும் படங்களுக்கு ஏற்கனவே சம்பளம் பேசப்பட்டுவிட்டது. அதனால், திடீர் என விநியோகஸ்தர் சங்கம் இந்த நடிகருக்கு இந்த எரியாவுக்கு இன்ன விலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்று காரசாரமாக பேசினார்கள். 

இனிமேல் எடுக்கும் படங்களுக்கு சம்பளம் பேசும் போது விநியோகஸ்தர்களின் முடிவை மனதில் வைத்து பேச வேண்டும். இது குறித்து நடிகர் சங்கத்துடன் கலந்து பேச வேண்டும். அதன் பிறகு விநியோகஸ்தர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய சங்கள் அடங்கிய ஒரு கூட்டு கூட்டத்தை ஏற்படுத்தி, அதில் விவாதிக்க வேண்டும். அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும் என்று பேசப்பட்டது.

அதன் பிறகு தயாரிப்பாளர் கோவை முருகேசன் அவர்கள் கொடுத்த கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது படம் விற்க ஒரு பக்கம் நாம் கஷ்டப் பாடுகிறோம். இன்னொரு பக்கம் படப்பிடிப்புக்கே வர மறுக்கிறார்கள். நம்ம வேதனையை யாரிடம் சென்று முறையிடுவது என்று வருத்தப்பட்டு பேசினார், தயாரிப்பாளர், எஸ்.எஸ்.துரைராஜ்.

இதனால் கூட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தொழிலாளர்கள் அமைப்பின் சார்பில் கஷ்டத்தை அனுபவித்ததாக சில தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நேர்ந்த வேதனையை பகிர்ந்து கொண்டனர். இது குறித்த விவாதமே பெரிதாகப் பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சனையை அனைத்து தொழிலாளர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். அதனால் ‘ஸ்டிரைக்’ பண்ண வேண்டும் என்று பேசினர்.

தொழிலாளர் அமைப்புதான் ஸ்டிரைக் போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள், அது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்காது. நாம் ஸ்டிரைக் செய்தால், நம் உறுப்பினர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அதனால், ஆபத்தான காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றார் கே.ஆர்.ஜி.
அவரையும் மீறி கூச்சலும், குழப்பமுமாக விவாதம் நடந்தது.

நமது கஷ்டத்தையும் வலியையும் எப்படி தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் உணர்த்துவது. அதனால் வேலை நிறுத்தம் அவசியம் என்று பலரும் வாதிட்டனர்.

எதிர் வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. அவரிடம், ‘’நீ என்ன சொல்றே பாரதி’’ என்றார் கே.ஆர்.ஜி.

தொழிலாளர்கள் படைப்பு சுதந்திரத்தில் தலையிடுவதை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த காட்சியில் இன்னார்தான் நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு உதவியாகத்தான் தொழிலாளர்கள் இருக்க வேண்டும். இவர்களை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் அமைப்பு சொல்வதை என்னால் ஏற்க முடியாது.

என் படத்தில் கூட இப்படிப்பட்ட பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது யாரும் உதவியாக இப்படி பேசியதில்லை. அதே சமயம், தொழிலாளர்கள் அமைப்பு பலம் உள்ள அமைப்பாக இருக்கிறது. அவர்களை கண்டித்து, எதிர்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் என்று முடிவு செய்தால், அதன் பிறகு ஏற்படும் பிரச்சனைகளையும் நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். அதனால், அதற்கு தயாராக இருந்தால், இந்தப் போராட்டம் பற்றி முடிவு செய்யுங்கள் என்றார் பாரதிராஜா.

வேலை நிறுத்தம் அவசியம் என்று பெஞ்சில் அடித்து வாதிட்டார்கள் சில தயாரிப்பாளர்கள். இப்படி செய்தால்தான் நம் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்கள்.

பெரும்பான்மை உறுப்பினர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு ஆதரவுதெரிவித்து கோஷம் எழுப்பினர். அதனால் வேலை நிறுத்தம் என்கிற முடிவுக்கு தள்ளப்பட்டது தலைமை.

ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி அந்த நாளில் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கலாம் என்று தெரிவித்தார் கே.ஆர்.ஜி. அதற்கு உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒரு தேதியை அறிவித்து வேலை நிறுத்தம் என்று சொன்னால், அது விடுமுறை என்பது போல ஆகிவிடும். காலையில் வேலைக்கு வந்து அவர்கள் நிற்கும் போது படப்பிடிப்பு இல்லை என்று தெரிந்தால்தான் அது வேலை நிறுத்தம் என்று வாதிட்டார்கள்.

கே.ஆர்.ஜிக்கு அதில் உடன்பாடில்லை. அரசுக்கு தெரிவிக்காமலோ, அறிவிப்பு இல்லாமலோ வேலை நிறுத்தம் செய்ய அவர் விரும்பவில்லை. ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டார்.

பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு உடனே என்னை ஏற்பாடு செய்ய சொன்னார்.

மறுநாள் படப்பிடிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு தகவல் சொல்லி படப்பிடிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

விநியோகஸ்தர் சங்க முடிவு பற்றி விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டம் திசைமாறி தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் கூட்டமாக மாறியது.

ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம், ஆறு மாதம் வரை நீடிக்கும் என்பது அப்போது யாரும் அறியவில்லை.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...