Sunday, April 22, 2018

70. ரமேஷ் அரவிந்த் ஒப்பந்தம்

ஜி.பாலன்
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனத்தில் அலுவலக மேனேஜராக பணியாற்றியாவர், முருகானந்தம். தருமபுரி நகரத்தில் பிறந்து வளர்ந்த அவர், தர்மம் செய்வதிலும் வல்லவர்.

பட நிறுவனங்களுக்கு கதை சொல்ல செல்லும் பல உதவி இயக்குனர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார். அதிகாலையில் அவரிடம் கதை சொல்லி, ஒத்திகைப் பார்த்து, அவரிடம் செலவுக்கு பணம் வாங்கி செல்கிற, பல இயக்குனர்களை நான் பார்த்திருக்கிறேன்.

கதை கேட்பது, ஆலோசனைகள் சொல்வது, படத் தயாரிப்புக்கு பட்ஜெட் போடுவது, பட வியாபாரம் என எல்லாம் அறிந்த திறமைசாலி. ஒவ்வொரு நடிகருக்கும் எந்தந்த ஏரியாவில் என்ன வியாபாரம் இருக்கிறது, எந்த இயக்குனருடன் எந்த நடிகர் கூட்டணி சேர்ந்தால் எவ்வளவு வியாபாரம் அமையும், எந்த நடிகருக்கு யார் பைனான்ஸ் செய்வார்கள் என திரையுலகின் அனைத்து வியாபர முறைகளையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.  

ரமேஷ் அரவிந்த்
அவரை நான் சந்திக்கும் போது, எவ்வளவு நாளைக்குத்தான் இந்த இருக்கையிலேயே அமர்ந்திருப்பாய். பைனான்ஸ் கொடுக்க ஆள் இருக்கிறது. தயாரிப்பு, வியாபாரம் என, எல்லாம் தெரிந்து கொண்டு இங்கேயே உட்கார்ந்து இருக்கிறாயே என்று, அவரை உசுப்பி விடுவேன்.

அவர், அதற்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக தருவார்.

ஒரு நாள் திடீர் என போனில் அழைத்தார். வடபழனி குமாரன் காலனியில் உள்ள செல்லையா அறையில் இருப்பதாகவும், முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் கூறினார்.

அங்கு அவரை நேரில் சந்தித்த போது, படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். உமாபாலன் என்பவரிடம் கதை கேட்டேன். கதை எனக்கு பிடித்திருக்கிறது. நடிகர் ஜெயராம் அவர்களிடம் கதை சொல்லி கால்ஷீட் பெற வேண்டும் என்று கூறினார்.

அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக கூறினேன்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் 
அடுத்த அரை மணி நேரத்தில் போன் செய்து, பி.எல்.தேனப்பன் மூலமாக ஜெயராமிடம் பேச சொல்லி இருக்கிறேன். நீங்கள் உடனே பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். சரி என்றேன்.

ஒரு வாரம் கழித்து, புதிய தயாரிப்பாளர் படம் என்றால் இப்போது வேண்டாம் என்று ஜெயராம் கூறியதாக பதில் வந்தது. அதனால், வேறு நடிகரை பேச வேண்டும் என்றார்.

மறு நாள் போன் செய்து, அலுவலகத்திற்கு ஒரு இடம் வேண்டும். வாங்க பார்க்கலாம் என்றார்.

அருணாசலம் ஸ்டுடியோ வாசல் அருகே சில புரோக்கர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாக இடம் பார்க்கலாம் என்ற போது, இந்த ஏரியாவில் வேண்டாம். வளசரவாக்கம் பகுதியில் பார்க்கலாம். பார்க்கிங் வசதிகள் உள்ள இடமாக வேண்டும் என்றார்.

புரோக்கர்கள் வைத்து இடம் பார்த்தால் ஒரு மாத வாடகையை அவர்களுக்கு தர வேண்டும். அதனால் நாமே விசாரிக்கலாம் என்றார். சரி என்று, இரண்டு நாட்கள் வளசரவாக்கம் ஏரியாவில் பல இடங்களில் டூ வீலரில் அலைந்தோம்.

ரமேஷ் அரவிந்த் வாழ்த்து கடிதம்
எதிர்ப்பார்த்த மாதிரி இடம் கிடைக்கவில்லை. அப்போது ஒரு டீக்கடையில் அமர்ந்த போது, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ஒரு கதை சொன்னார். அந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அலுவலகம் உடனே எடுத்தால் அவர்களை டிஸ்கஷனுக்கு உட்கார வைக்கலாம் என்கிற தகவலை கூறி, அவசரம் காட்டினார்.  

உமாபாலனுக்கு டிஸ்கஷனுக்கு பணம் கொடுத்தீர்களே என்னானது என்றேன்.

அவர் டிஸ்கஷன் செலவு போக மீதி பணத்தை கொடுத்துவிட்டார். இப்போது ஏ.வெங்கடேஷ் படத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

மறுநாள் சாலிகிராமம், காவேரி தெருவில் உள்ள ஒரு பிளாட்டை காட்டிய போது அவருக்கு பிடித்திருந்தது. உடனே அதற்கு முன்பணம் கொடுத்தோம். அலுவலகத்திற்கு தேவையான பர்னிச்சர், மற்றும் அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கினோம்.

பிறகு, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் மற்றும், அவரது உதவியாளர்கள் கதை விவாதத்தில் அமர ஏற்பாடு செய்து கொடுத்தோம். அந்தப் படத்திற்கு ‘மியாவ்’ என்று பெயர் வைக்கவும், கதாநாயகனாக ரமேஷ் அரவிந்த்தை நடிக்க வைப்பதும் என்று முடிவானது.

இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ‘அபிமான்’ படத்தை தமிழில் ‘நான் பாட நினைப்பதெல்லாம்’ என்கிற பெயரில் மனோபாலா இயக்க, அதில் கதாநாயகனாக ரமேஷ் அரவிந்த் நடித்துக் கொண்டிருந்தார். கம்பன் கலைக்கூடம் சார்பில் இப்ராஹிம் ராவுத்தர் அந்தப் படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.

படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை தெரிந்து கொண்டு அங்கு சென்று ரமேஷ் அரவிந்தை சந்தித்தேன். இந்தப் படம் குறித்த தகவல்களை அவரிடம் தெரிவித்த போது மகிழ்ச்சி அடைந்தார்.

டூயட், சதிலீலாவதி படங்களுக்கு பிறகு எனக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் தமிழில் கிடைக்கிறது என்று கூறியவர், இந்த தமிழ் புத்தாண்டு எனக்கு மகிழ்ச்சியான செய்திகளை தருகிறது என்றார்.

கன்னடத்தில் தொடர்ந்து ஒன்பது படங்கள் நூறு நாள் படங்களாக அமைந்தன. அது போல தமிழிலும் வெற்றிகள் கொடுக்க வேண்டும் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது என்றார்.

மறுவாரம் அவருக்கு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம்.

அந்த மகிழ்ச்சியை மீடியாக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினார் ரமேஷ் அரவிந்த். அவர் தனது கைப்பட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கடிதம் எழுதி அனைத்து பத்திரிகையாளருக்கும் என் மூலம் அனுப்பி வைத்தார்.  

ஆனால், ரமேஷ் அரவிந்த் நடிப்பில் தயாரிக்க இருந்த ‘மியாவ்’ படமும் ஆரம்ப நிலையிலே நின்று போனது.

 தொடர்ச்சி அடுத்த கட்டுரை 71-ல் காண்க

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...