Sunday, April 22, 2018

23 பெண்ணை பார்க்க காத்திருந்தேன்?


ஜி.பாலன்
பெண் தருகிறேன் என்று அவர்களே சொல்லி, அவர்களே பின் வாங்கி விட்டார்கள். அதற்கு காரணம் எனது சினிமா கனவுகள்.

அவர்களே தேர்வு செய்து அவர்களே நிராகரித்து விட்டார்கள். நான் தோல்வியை சந்தித்திருந்தேன்.

அவள் மீது பைத்தியமாகவே இருந்தேன். அவளை ஒரு போதும் என்னால் மறக்க முடியவில்லை. அவள் நினைவாகவே இருந்தேன். பல நாட்கள் தவித்துப் போனேன். அதனால் நமக்கு திருமணமே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தேன்.

அதே போல அண்ணனிடமும் திருமணம் பற்றி இனி பேசக் கூடாது என்று முடிவுவாக சொல்லிவிட்டேன். மீறி அவர் ஜாதக பொருத்தம் பார்க்க சோதிட குறிப்பை எடுத்துச் செல்வதைப் பார்த்து ஆத்திரம் அடைந்தேன். ஒரு நாள் சோதிட குறிப்பை எடுத்துச் சென்று சுக்கு நூறாக கிழித்து குளத்தில் எறிந்தேன்.

வேப்பஞ்சேரி முருகேசன்
ஆசைப்பட்ட பெண் கிடைக்க வில்லை என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. கிணத்து தண்ணீரை பயன் படுத்தாமல் இருந்தால் அது வீணாகி போய் விடும். அது மாதிரி மனதை தோல்விப் பற்றியே சிந்திக்க வைத்தால் வாழ்க்கையை வெறுக்க வைத்துவிடும் .

அதிலிருந்து வெளியே வரவேண்டும். கால போக்கில் எல்லாவற்றையும் மறந்துவிடலாம். ஆனால், இந்த ஆசைப்பட்ட மனதை, அதிலிருக்கும் அவள் நினைவுகளை மறக்க முடியாது அது அடி மனதில் இருந்து கொண்டு அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். மனிதனை பக்குவப் படுத்துகிற சக்தி இந்த காதலுக்கு உண்டு

என்னை யாருன்னு எனக்கு உணர வைத்திருக்கிறது இந்த காதல் அனுபவம். அதுக்காக தோற்று விட்டோம் என்று நினைக்க முடியாது. காதல் நினைவுகள் ஒரு பொக்கிஷம். அவ்வளவுதான் அது மனதை மென்மையாக  வைத்துக் கொள்ள உதவும். காதல் மட்டும் வாழ்க்கை இல்லையே?. அதை தாண்டி வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறதே?

எனக்கென்று ஒரு பெண் இனிமேல் பிறக்கப் போவதில்லை. எப்பதோ, எங்கேயோ பிறந்திருப்பாள். வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவாள். அதுவரை நாம் வேலையைப் பார்க்க வேண்டும் என்று மனம் ஆறுதல் சொல்லி அறிவுறுத்தியது.

அதனால், வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

மாரிநகரி ஆத்தா வீட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வேப்பஞ்சேரி மாமா, மீண்டும் தேவதானம் சம்பந்தம் பற்றி பேச ஆரம்பித்தார்.

நல்ல சம்பந்தம். அதை விட மனசில்லை. ஒரே பொண்ணு. பத்து மா நிலத்தோடு வருகிறது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய் என்று மறுபடியும் பேச்சை துவங்கினார்.

நான் சினிமாவுக்கு செல்ல தடையாக திருமணம் இருக்கும் என்பதையும், அதனால்தான் திருமணத்தை வெறுக்கிறேன் என்றும் அவரிடம் சொன்னேன்.

அவர் விடுவதாக இல்லை. முதலில் பெண்ணைப் பார். அதன் பிறகு உனக்கு பிடித்திருந்தால் பேசுவோம் என்றார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வீட்டில் வந்து பெண்ணைப் பார்க்க வேண்டாம். அந்த பெண்ணை தண்ணீர் பிடிக்க அனுப்புகிறேன். நீ அங்கு அவளை பார்த்துக் கொள். அதன் பிறகு உன் விருப்பம் என்றார்.

எப்படியாவது அந்த வரனை என் தலையில் கட்டிவைக்க அவர் முடிவு செய்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் பேச்சை தட்டிக் கழிக்க முடியவில்லை. மரியாதைக்காக அவரது பேச்சை கேட்போம். பிறகு வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, பிறகு அரை மனதுடன் சம்மதித்தேன்.

வீட்டிற்கு வந்ததும், என் மாமா மகன் சரவணனின் மனைவி கலா, அந்தப் பெண்ணைப் பற்றி எடுத்துச் சொன்னார். அவர்கள் இருவரும் ஒன்றாக ஊரில் படித்தவர்களாம். சிவப்பாக, சுருள் சுருள் முடியோடு அழகாக இருப்பார் என்று அந்தப் பெண்ணைப் பற்றி நல்லவிதமாக எடுத்து சொன்னார்.

ஒரு பக்கம் உறவுக்கார பெண் மனதில் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறாள். இன்னொரு பக்கம் சினிமா கனவுகள் லட்சியமாக மனதில் கனன்று கொண்டிருக்கிறது. வீடு வேலை எப்போது முடியும்? தங்கை திருமணம் எப்போது நடக்கும்? என்று கேள்விகளோடு இருக்கும் என்னை பெண் பார்க்க அழைத்து சென்றார் முருகேசன் மாமா.

அந்த கிராமத்தின் துவக்கத்தில் இருந்த ஒரு வாய்க்கால் மதவு அருகே சைக்கிளை நிறுத்தச் சொன்னவர், பிறகு தூரத்தில் இருக்கும் தண்ணீர் குழாயை காட்டி, அங்கு தண்ணீர் பிடிக்க பெண் வருவாள். நீ அவளைப் பார்த்துக் கொள். அந்தப் பெண்ணும் உன்னைப் பார்த்துக் கொள்வாள். என்று சொல்லிவிட்டு சைக்கிளை என்னிடம் இருந்து வாங்கி கொண்டு புறப்பட்டார். 

மதகு மீது உட்கார்ந்திருந்தேன். மாலை நான்கு மணி முதல் ஐந்தரை மணிவரை காத்திருந்தேன். அந்த பெண் வரவில்லை. சிறுமிகளும், கிழவிகளும் தண்ணீர் பிடித்து சென்றார்கள். எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது என்று எழுந்து நடந்தேன்.

அவர் சொன்னது போல ஒத்த வீடாக அந்த பெண் வீடு தனித்து இருந்தது. வீட்டு வாசலில் இரண்டு கார்கள் நின்றன. அருகே நாங்கள் வந்த சைக்கிளும் நின்றிருந்தது. அந்த வீட்டைக் கடக்கும் போது ஒரு கும்பலுடன் அந்த மாமாவும் கை கழுவ வந்தார்.

எனக்கு புரிந்து விட்டது. யாரோ பெண் பார்த்து முடித்து, அதன் பிறகு பஜ்ஜி சுஜ்ஜி என டிபன் சாப்பிட்டு கை கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

இனிமேல் இந்த சம்பந்தம் பற்றி மாமா பேச மாட்டார் என்று மனதிற்குள் நிம்மதி பிறந்தது. திரும்பி சென்று முன்பு அமர்ந்திருந்த மதகு மீது அமர்ந்தேன்.

அரை மணி நேரத்திற்கு பிறகு மாமா வந்தார். என்கிட்ட சம்பந்தம் பேச சொல்லி பல மாதங்கள் ஆச்சு. உன் கிட்ட சொன்னா, நீ வரல. இப்போ சங்கேந்தி பையனுக்கு அந்த பெண்ணை நிச்சயம் செய்துவிட்டார்கள் என்று என் மீது ஆத்திரப்பட்டார்.  

அந்த சங்கேந்தி பையன் என் நண்பன். கும்பகோணத்தில் அவனுடன் சில நாட்கள் தங்கி இருந்தேன். கொஞ்சம் முரடனாக இருந்தாலும் அவன் நல்லவன். அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையும் போது வாழ்த்தாமல் இருக்க முடியுமா? வாழ்க மணமக்கள் என்று மனதிற்குள் வாழ்த்தினேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...