Sunday, April 22, 2018

62 தம்பிக்கு பெண் பார்க்க சென்றார்கள்


என் சகோதரியின் பெயர் மலர்க்கொடி. எனக்கு நேர் மூத்தவர். அவர் ஞாபகமாக அவரது பெயர் விளங்குவது போல என் மகனுக்கு மலர்வண்ணன் என்று பெயர் வைத்தேன்.

அவன் பிறந்த முப்பதாவது நாள் பெயர் சூட்டு விழா முடிந்ததும், என் மனைவியையும், அவனையும் சென்னைக்கு அழைத்து வந்தேன். கோடம்பாக்கத்தில் இருந்த என் தம்பியின் சிறிய அறையில் என் மனைவி, மகன், நான், அம்மா, தம்பி நமசிவாயம், சித்தப்பார் மகன் வைரமூர்த்தி, அக்காள் மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கி இருந்தோம்

தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்த எம்மார் (எம்.ராஜாராம்) அவர்கள் விஜய் நடிப்பில் ‘வசந்த வாசல்’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கினார். அவரிடம் அக்காள் மகன் பாலகிருஷ்ணனை வேலைக்கு சேர்த்து விட்டேன்.

அவன், அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த கிச்சாஸ் அவர்களிடம் வைரமூர்த்தியை உதவியாளராக சேர்த்துவிட்டான். பாலகிருஷ்ணன் வேலை செய்த அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டான்.  வைரமூர்த்தி சில மாதங்களுக்கு பிறகு ஊருக்கு சென்றுவிட்டான்.

மகன் விளையாடுவதற்கு இட வசதி வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் இருந்து சூளைமேடு ஸ்ரீராமாபுரம் ஒன்னாவது தெருவுக்கு வேறு வீடு பார்த்து   சென்றோம்

கோடம்பாக்கம் கடை மூடிவிட்டதால், என் தம்பி சிவாவுக்கு பாரிமுனையில் கடை கொடுத்தார்கள். அங்கு பார் நடத்த தொடங்கியவன், தினமும் வீட்டுக்கு வந்து செல்ல கஷ்டப்பட்டான்.

அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். அதனால் உறவினர் வீடுகளில் பெண் பார்க்க சொல்லி இருந்தேன். அக்காவும், அண்ணனும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

எனது மனைவி வழி உறவினர் ஒருவரின் வீட்டு பெண் கொஞ்சம் படித்திருந்தாள். அமைதியானவள். மரியாதை தெரிந்தவள்.

நான் திருத்துறைப்பூண்டியில் கூல்டிரிங்ஸ் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவள் அந்த வழியாகத்தான் படிக்க செல்வாள். கடையை கடக்கும் போது சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிக் கொண்டு செல்வாள். என் முன்பு சைக்கிளில் அமர்ந்து செல்வது மரியாதைக் குறைவாக இருக்கும் என்று கருதினாள்.

அவளின் ஞாபகங்கள் மனதிற்குள் வர, அவளை தம்பிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று தோன்றியது.

அது விஷயமாக அவளது அம்மாவிடம் பேசினேன். என் தம்பியின் போட்டோவைப் பார்த்துவிட்டு, அவனைப் பிடித்திருப்பதாக சொன்னவர்,  ஜாதக குறிப்பு வாங்கிச் சென்றார்.

பிறகு, பொருத்தம் சரியாக இருக்கிறது. பெண் பார்க்க வாங்க என்று அழைப்பு வந்தது.

என்னுடைய ஆசையையும், விருப்பத்தையும் ஏற்கனவே அண்ணனிடமும், அக்காவிடமும் தெரிவித்திருந்தேன். அவர்கள் முதலில் சரி என்று சொன்னார்கள்.

பெண் பார்க்க சென்ற போது, வரதட்சனைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். பெண் பிடித்திருந்தால் சொல்லுங்கள். மற்ற விஷயங்களை நான் வந்து பேசிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தேன்.

ஒரு வேன் நிறைய ஆண்களும், பெண்களும் கூட்டமாக பெண் பார்க்க சென்றார்கள். அனைவருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. அதனால், செய்வதை சொன்னால், ஓலை எழுதிவிடலாம் என்று என்னுடைய ‘மச்சான்’ நாடிமுத்து பேச, அதெல்லாம் அவர் (பாலன்) பேசிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார் என்று பதில் கூறி இருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் பேசுவதைவிட நான்கு பேருக்கு முன்பு சபையில் வைத்து பேசுவது நல்லது. அதனால், மாப்பிளையின் பெரிய அண்ணன் இருக்கிறார். என்ன செய்கிறீர்களோ சொல்லுங்கள் என்று வாதிட்டிருக்கிறார் என் மாமா பக்கிரிசாமி.

அவர்கள் பக்கம் பதில் இல்லை. அதனால், பந்தி முடிந்து ஊருக்கு திரும்பிவிட்டார்கள்.

பெண் வீட்டார் தன்னை மதித்து பேசவில்லை என்று எனது அண்ணனுக்கு ஈகோ வந்துவிட்டது. அதனால் அந்த சம்பந்தம் அத்தோடு நின்று விட்டது. அண்ணனிடம் அதுப் பற்றி கேட்டதற்கு, ‘’மச்சான் இருக்கிற வீடா வேணும்பா’’ என்று புதிய கருத்தை முன் வைத்தார்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...