Sunday, April 22, 2018

22 கண்ணீரில் பதில் கிடைத்தது?


ஜி.பாலன் 
தங்கை திருமணத்தை முன் வைத்தே வீடு கட்டும் வேலையில் இறங்கிய நான், என் திருமணம் பற்றி அதுவரை நினைக்காமல் இருந்தேன். இப்போது, அவள் எனக்கு இல்லை என்றதும் ஏமாற்றமும் வேதனையையும் மனதை அழுத்தியது. ஒருவித தோல்வி என்னை வாட்டி வதைத்தது. 

உண்மையிலேயே என்னதான் சொன்னார்கள் என்று அண்ணனிடம் கேட்டதற்கு, அவருக்கு ரோசம் அதிகமாகி இருந்தது. ‘’அந்தப் பொண்ணு இல்லன்னா உனக்கு வேறு பொண்ணா கிடைக்காது’’ என்று வேறு பதிலை சொன்னார்.

எனக்கு திருமணம் செய்து வைய்யுங்கள் என்று நான் கேடக்கவில்லை. அவர்கள்தானே பெண் தருகிறேன் என்று சொன்னார்கள். இப்போது ஏன் என்னை பிடிக்காமல் போனது? எனக்கு சரியான பதில் தேவை என்று கேட்ட போது, அவருக்கு விடை தெரியவில்லை. ஒதுக்குகிறார்கள் என்று மட்டும் அவரால் சொல்ல முடிந்தது.

நான் சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு பறந்தேன். கட்டிலில் குப்புற படுத்து கால்கள் இரண்டையும் மேலும் கீழும் ஆட்டியபடி படுத்திருந்த அவள். என்னைக் கண்டதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து வீட்டுக்குள் ஓடினாள்.

மனம் கொதித்துக் கொண்டிருந்தது. வியர்வை உடம்பை நனைத்திருந்தது. கட்டிலில் அமர்ந்து வீட்டின் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த போட்டோக்களை பார்த்து கொண்டிருந்தேன்.

பக்கத்து வீட்டில் இருந்து வந்த பெண்மணி என்னைப் பார்த்து விசாரித்தாள். அவளுக்கு என்னை தெரிந்திருந்தாலும், கால ஓட்டம் மறக்க வைத்திருந்தது.

‘’ஓடிப் போன புள்ளையா?’’ என்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டு, ‘’அவுங்க ஆத்தா முத்துப்பேட்டையில் பெரிய பேத்தி வீட்டில் இருக்கிறார்’’ என்று பதில் சொன்னார்.

அவள் கை மட்டும் ஒரு செம்பை நீட்டியது. அந்த பெண்மணி செம்பை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

மனம் இல்லை என்றாலும் செம்பில் இருந்த தண்ணீரைக் குடித்தேன். அவளைப் பார்க்காதப் போது எத்தனை எத்தனை சிந்தனைகள் மனதில் எழுந்து உற்சாக மூட்டின. தூக்கத்தை விரட்டி அடித்த அந்த நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தன.

அவள் சம்மதம் மட்டும் இருந்திருந்தால் அப்போதே அவளை தூக்கி சென்றிருப்பேன். அவளோடு பேசியது கூட கிடையாதே?. என்ன செய்வது? மனதில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து முடிவின்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.

உள்ளே சென்ற அந்த பெண்மணி திரும்பி வந்து, காப்பியா? டீயா? என்று கேட்டாள்.

ஏதுவாக இருந்தாலும் பரவா இல்லை என்று பதில் சொன்னேன்.

சிறிது நேரத்தில் அவளுடைய அம்மா ஒரு கூடை நிறைய புல் கொண்டு வந்து இறக்கி வைத்தாள்.

என்னைப் கண்டதும் ‘’வாங்க தம்பி’’ என்று வரவேற்றவள், பிறகு மாட்டுக்கு புல் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தை அந்த பெண்மணியிடம் கூறி விட்டு, என் எதிரே வந்து நின்று மற்றவர்களின் நலனை விசாரித்தாள்.

மகள் திருமணம் பற்றி அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.

நேரடியாக பெண் தருவீர்களா என்று கேட்பதற்கு பதிலாக, எனக்கு பல இடங்களில் இருந்து வரன் வருகிறது. இன்று கூட தேவதானத்தில் இருந்து ‘பத்து மா’  பொண்ணோட பெயரில் நிலம் எழுதி வைத்து, சில்லறை நகைப் போட்டு எனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்கிறார்கள்.

அதனால், அத்தையிடம் ஆலோசனை கேட்டு போகலாம் என்று வந்தேன். அத்தை முத்துப்பேட்டை போயிருக்காராமே? என்று சொல்லி, அவரது முகத்தைப் பார்த்தேன்.

உனக்கு பத்துமா நிலத்தோடு சம்பந்தமா? என்று விழித்தவர், பிறகு ‘’அப்படியா தம்பி... நல்ல சம்பந்தமா இருந்தால் செய்யலாமே’’ என்று ஆலோசனை கூறினார். 

அந்த பதிலில் அவரது மனம் தெரிந்தது. 

உள்ளே இருந்து காபி வந்தது.

குடிக்க மனம் இல்லை.

மரியாதைக்காக வாங்கி வைத்தேன். பிறகு கடமைக்கு குடித்தேன். இனிப்பு அதிகமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத பதிலால் காபி கசந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு விடைபெற்று கிளம்பினேன். அடுத்த முக்கால் மணி நேரத்தில் முத்துப்பேட்டையில் இருந்தேன்.

நான் ஒரு ஓடுகாலி?.

சினிமா சினிமா என்று அலைபவன்?.

சென்னைக்கு சென்றவன் திரும்பி வரவில்லை என்றால் யார் பெண்ணை சுமப்பது?

அவனோ அக்காள்கள் திருமணத்தை முடித்துவிட்டு வசதியாக இருக்கிறான். இவனோ தங்கை திருமணம் நடத்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கிறான்?. இருக்க கூட வீடு இல்லை?

எத்தனையோ குறைகள் எடையில் தெரிந்ததால், என் உயரம் குறைந்து போனது?

பெண்ணின் தாயுக்கு என் சித்தப்பார் மகனுக்கு பெண் கொடுக்க ஆசை. பெண்ணின் பாட்டிக்கு எனக்கு பெண் கொடுக்க ஆசை. போட்டியில் தாய் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாட்டி கோவத்தில் இங்கு வந்து இருக்கிறார். இதுதான் பதில் என்று அவரது கண்ணீர் மட்டுமே சொல்லியது.

என் வீட்டு பெண் அழுதாள் என் மனம் என்ன பாடுபடும்?. அதுவரை இருந்த கோபம், அவரது கண்ணீரைக் கண்டு கரைந்து போனது.

நீங்கள் அழக் கூடாது? என்று அத்தைக்கு ஆறுதல் சொன்னேன்.

ஆனால், என் சித்தப்பா மகன், அவனுடைய மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளப் போவது, அப்போது அவர்களுக்கு தெரியாது?

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...