Sunday, April 22, 2018

6 திரையரங்கில் படத்தை நிறுத்திய அப்பா


ஜி.பாலன் 
சிறு வயதில் முதலில் பார்த்தப் படம் என்று நினைவுக்கு வருவது ‘தசாவதாரம்’. அதன் பிறகு ‘அன்னக்கிளி’, ‘பாலாபிஷேகம்’, ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘குறத்தி மகன்’ என சில படங்களை எடையூர் சரவணா திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.

‘அன்னக்கிளி’ படம் பார்த்த போது படத்தின் இறுதியில் தியேட்டர் எரிவது போல காட்சி இடம் பெறும். அப்போது உண்மையிலேயே தியேட்டர் எரிகிறது என்று நினைத்து பயந்து வெளியே தப்பித்து செல்ல முயன்றேன். பிறகு என்னை பிடித்து இழுத்து வந்து அமர வைத்த அம்மா, படத்தில் தான் அந்த காட்சி இடம்பெறுகிறது என்று உணர்த்தினார்.

‘குறத்தி மகன்’ படம் பார்த்த போது இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு நின்று கொண்டே படம் பார்த்தோம். இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அனுபவங்கள் இருக்கிறது. எல்லாம் சுவராஸ்யமானவை.

திரையரங்கில் ‘தில்லானா மோகனம்பாள்’ படம் ஓடிக்கொண்டிருத்த போது, எங்க வைத்தி மாமா மனைவி வனரோஜாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தாள் அதனால், அவளுக்கு மோகனாம்பாள் என்று பெயர் வைத்தார்கள்.

நாங்கள் படம் பார்க்க சென்றால், அப்பாவும் வந்து விடுவார். ஆனால், சைக்கிளில் தனியாக வருவார். அந்த காலத்தில் எங்கள் கிராமத்தில் மூன்று பேர்தான் சைக்கிள் வைத்திருந்தார்கள். அதில் எங்க அப்பாவும் ஒருவர். அது இங்கிலாண்டு சைக்கிள். சைக்கிளுக்கு காத்து அடிக்க உதவும் பம்பு, திரி வைத்த லாந்தர் விளக்கு என எல்லாம் அதில் இருந்தது.

எங்க அப்பா பெஞ்சு டிக்கெட் எடுத்து உள்ளே வந்திருக்கிறார். படம் போட்டு பத்து நிமிடம் ஆகி இருக்கும். அவருக்கு உட்கார  இடம் கிடைக்கவில்லை. திரையரங்கு ஊழியர்களிடம் சொல்லி இருக்கிறார். அவர்கள் கண்டு கொள்ள வில்லை.

புரஜக்டர் வழியாக திரைக்கு வரும் ஒளியை தோள் துண்டை எடுத்து சுருட்டி அதில் திணித்து மறைத்துவிட்டார். திரையில் ஒலி கேட்கிறது. படம் தெரியவில்லை என்றதும் ஒரே விசில் சத்தமும், கூச்சலுமாக இருந்தன.

ஆபரேட்டர் தூங்கிவிட்டார் என்று சிலர் கத்தினார்கள். பிறகு மின் விளக்குகள் எரிய, சத்தம் நின்றது. ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தார்கள். அப்பாவின் செய்கையை கண்டு அவர்கள் திகைத்தார்கள். அப்பாவின் முகத்தையும் கோபத்தையும், பார்த்த மேனேஜர் மிரண்டு போனார். பிறகு அப்பாவுக்கு ஸ்பெஷல் புதிய தகர நாற்காலி கொண்டு வந்து கொடுத்து அமர வைத்தார்கள். அதன் பிறகு படம் திரையிடப்பட்டது.

படம் பார்க்கவே விருப்பம் இல்லாத அப்பா, எங்களுக்காக படம் பார்க்க வருவார். ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்கிற அச்சம்

அப்பா இறந்த பிறகு, நண்பர்களுடன் இரவு காட்சி படம் பார்க்க தனியாக செல்வேன். அப்போது சரவணா டாக்கீஸ் பெயருக்கு பதிலாக பாலமுருகன் என திரையரங்கிற்கு பெயர் மாறியது.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் திருத்துறைப்பூண்டி பிரகநாயகி, வாசன் தியேட்டர்களில் மேட்னி ஷோ பார்க்க செல்வோம். சில சமயம் பட்டுக்கோட்டை வீரா, அய்யா, நீலா, ராஜாமணி போன்ற திரையரங்குகளுக்கு செல்வோம், ஒரே நாளில் மூன்று படம், நான்கு படம் என்று பார்த்துவிட்டு திரும்புவோம். 

திருத்துறைப்பூண்டி பிரகநாயகி, திரையரங்கில் மௌனகீதம், படம் பார்த்துவிட்டு வந்து மேடைகளில் ‘’டாடி டாடி ஒமை டாடி’’ பாடலை பாடி இருக்கிறேன்.

பிரகநாயகியில் அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்க்க செம கூட்டம். நானும் என் நண்பர்களும் ‘மன்னன்’ படத்தில் ரஜினி டிக்கெட் எடுக்க செல்வது போல, சென்றோம். நாங்கள் இடித்துக் கொண்டும் முந்திக் கொண்டும் செல்வதை பொறுக்க முடியாத ஒருவர், என் நண்பனை நெருக்கி தள்ளி விட்டார். 

டிக்கெட் எடுத்து வெளியே வந்ததும் அவனது கைகளில் ஏற்பட்ட சிராய்புகளை பார்த்து கோபம் வந்துவிட்டது. அதற்கு காரணமான அவரை எல்லோரும் சேர்ந்து அடிப்பது என்று முடிவு செய்தோம்.

வியர்வை சொட்ட, சொட்ட, சட்டையை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டு கவுன்டரைவிட்டு வெளியே வந்த அவரைப் பார்த்து கை காட்டினான் நண்பன்.

அவரைக் கண்டதும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவர் எனது உறவினார். ‘’டேய்.. அவர் எங்க ஓருர் வீரையா சித்தப்பாடா...’’ என்று கூறி அவர்களை தடுத்துவிட்டேன்.

இதெல்லாம் சித்தப்பாவுக்கு தெரியாது. அநேகமாக இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தால், கண்டிப்பாக சிரித்துக் கொள்வார்.

இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவரே, சினிமாவைப் பார்க்க சட்டையை கழட்டிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட படம் பார்க்க வந்தால், சினிமா எவ்வளவு ஈர்ப்புள்ள சாதனம் என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது.

அப்போதுதான் முதன் முதலாக பாரதிராஜா மனதிற்குள் வந்தார். படம் பார்த்துவிட்டு வந்த பின்னர் மனதில் அலைகள் ஓயவில்லை.

நாமும் சினிமாவுக்கு சென்று நடிக்க வேண்டும். இதே போல நமது கிராமத்து மக்கள் நமது படத்தையும் காண தியேட்டருக்கு வரவேண்டும் என்று மனதுக்குள் எழுந்தது சிந்தனை.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...