Sunday, April 22, 2018

4 எமதர்மன் கொடுத்த தண்டனை


Director SP. Muthuraman, G.Balan
ஒவ்வொரு முறையும் நாடகம் பார்த்துவிட்டு திரும்பும் போதும் அந்த நாடக காட்சிகள் மனதில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து ஞாபகத்திற்கு படுத்திக்கொண்டே இருந்தன. அதே போல நாமும் நடித்துப் பார்ப்போமே என்று அந்த வசனங்களை பேசிப் பார்த்தேன். தப்பு தப்பாக வசனங்கள் இருந்தாலும் அதை பேசிப் பார்ப்பேன். கதை முழுவதும் மனதில் இருப்பதால், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நடிகர்களும் என்ன பேசி இருந்தார்கள் என்று ஒரு குத்து மதிப்பாக வசனங்களை சுயமாக போட்டு பேசிப் பார்த்தேன்.

நான் மட்டுமே இயங்க முடியாது என்பதால், என்னுடைய விளையாட்டு தோழர், தோழிகளை அழைத்து, நீதான் வள்ளி, நீதான் கணேசன், நீதான் வள்ளியின் தோழி, நீதான் பப்பூன் என்று ஒவ்வொருவருக்கும் கதாப்பாத்திரங்களை ஒதுக்கி வசனம் பேசிப் பழக்குவேன். ஒருவனை தகர டின், சப்பாட்டு தட்டுக்கள், வெண்கல பாத்திரங்கள் கொண்டு அதில் கனமான குச்சியால் அடித்து ஒலி எழுப்ப வைத்து இசையமைக்க வைப்பேன்.

இதெல்லாம் என்னுடைய ஏழு வயதில் நடந்த சம்பவங்கள். சிலருக்கு அதில் ஆர்வம் இருந்ததில்லை. இருந்தாலும் நான் விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்பதால், பயந்து ஒத்துழைப்பார்கள்.

அட்டைகளில் கிரீடம், வேல், யானை தும்ம்பிக்கை, வீட்டில் உள்ள சேலை, பாவடை, தாவணி, வேஷ்டி, கண்ணாடி, சீப்பு, பூசரமாவு என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். கோடைகாலத்தில் வாய்க்கல்தான் எங்களுக்கு விளையாட சவுகரியமான இடம். வாய்க்காலின் இரு கரையை இணைத்து திரைகட்டி, ஒரு பக்கம் நடிகர்களும், இன்னொரு பக்கம்  வேடிக்கைப் பார்ப்பவர்களுமாக பிரித்து வைத்து எங்கள் நாடகம் அரங்கேறும்.

அப்படி ஆட்டம், பாட்டத்துடன் எங்கள் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த எனது அப்பா, எங்கள் நாடகத்தை பார்த்திருக்கிறார். அருகே வந்தால், நாங்கள் களைந்து சென்று விடுவோம் என்று யோசித்தவர், துரத்தில் மதகு மீது மறைவாக அமர்ந்து எங்கள் குரலையும் ஆட்டத்தையும் ரசித்திருக்கிறார்.

g.balan
நாடகத்தின் போது குரலை ஏத்தி இறக்கி அந்த மாடுலேசனோடு பாடுவதையும், பேசுவதையும் கேட்டு ரசித்திருக்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தை தவறாக பேசுபவர்களை நான் கண்டிப்பதையும் அவர் கேட்டிருக்கிறார். பிறகு வேறு வழியே வீட்டுக்கு சென்றவர், என்னுடைய நாடக ஆர்வத்தை நினைத்து சிரித்திருக்கிறார்.

நாங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடகம் போடுவோம். பயன் படுத்தாமல் கிடக்கும் பழைய வீடு, மாட்டுக் கொட்டகை, செடியும் முள்ளும் மண்டி கிடக்கிற மறைவான திடல்கள் என எங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் நாடகம் அரங்கேறும்.

புராண நாடகம் மட்டுமில்லாது, பாடப் புத்தகத்தில் வந்திருக்கும் தெய்வம் நேரில் வந்து தங்க கோடாலி கொடுத்த கதை, கடைகாரர் தாத்தா சொன்ன ஏமாளி அக்காவை சுரண்டி ஏமாற்றும் தங்கையின் கதை என பல கதைகளை நாடகமாக அரங்கேற்றி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க வைத்திருக்கிறோம்.

ஒரு முறை நடிக்க வேண்டிய ஒரு பெண் வராததால், நான் பாவடை ஜாக்கெட் அணிந்து நடித்துக் கொண்டிருந்த போது, கோவில் காளை அவ்வழியே வர, வேடிக்கைப் பார்த்தவர்களும், நடித்தவர்களும் நாலாப் பக்கமும் தெறித்து ஓட, நான் பாவாடையோடு வயலில் ஓடி, மரத்தில் ஏறியதை தெரு ஜனமே வேடிக்கைப் பார்த்திருக்கிறது.

சிலர் இப்பவும் அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தி பேசுகிறார்கள். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்.

ஒரு முறை எங்கள் ஊர் கோவில் திருவிழாவின் போது நாடகம் போட்டார்கள். நாடக கொட்டகை கட்ட ஆரம்பித்த நாள் முதல், நாடகம் முடிந்து நடிகர்கள் செல்லும் வரை அந்த இடம் தான் எனக்கு விருப்பமான இடமானது.

நடிகர், நடிகைகளின், உடைகள், அணிகலன்கள், மேக்கப், என எல்லாவற்றையும் நேரில் பார்த்து அசந்து போனேன். அதையெல்லாம் எங்கு வாங்குவது என்று அவர்களை கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு உதவியாக இருந்ததால், என்னிடம் அன்பு காட்டினார்கள். அனுசரணையாக பேசினார்கள்.

இரண்டாவது நாள் ‘சத்தியவான் சாவித்திரி’ நாடகம் நடந்த போது, சித்திரக் குப்தன் ஒலைசுவடியைப் பார்த்து தவறு செய்தவர்களை வரிசையாக பட்டியலிட, எமதர்மராஜா தண்டனை வழங்கும் காட்சி நடைபெற்றது. அந்தக் காட்சியில் நீ நடிக்க வேண்டும் என்று என்னை தள்ளிவிட்டார்கள்.

தலையில் கொம்பு முளைத்த இரண்டு கருத்த தடியன்கள் என்னை இழுத்து சென்று எமதர்மன் முன் நிறுத்த, முரட்டு மீசையும், மிரட்டும் பார்வையும் கொண்ட எமதர்மன், என்னைப் பார்த்து ‘’இவன் என்ன செய்தான் என்று?’’ கத்தி களேபரம் செய்து கேட்க, சித்திரக் குப்தன் ஓலைச்சுவடியைப் புரட்டி பார்த்து, ‘’பெற்ற தாயை காலால் எட்டி உதைத்தவன்’’ என்று பதில் சொல்ல, எமதர்மனுக்கு கோபம் வந்து பாட்டுப் பாடி, ‘’இவனை  கொதிக்கும் எண்ணையில் போட்டு வறுத்தெடு’’ என்று தண்டனை கொடுக்கிறார்.

அந்தக் காட்சியில் பயந்து அஞ்சி நடுங்கிய என் முகத்தை பார்த்த ஒரு நடிகர், பேசாமல் எங்களுடன்  புதுக்கோட்டை வந்துவிடு, நாடகத்தில் நடிக்கலாம் என்றார்.

மூன்று நாள் நாடகத்தை வெற்றிகரமாக முடித்து நாடக் குழு, விடைபெற்று கிளம்பும் போது, எனக்கு அவர்களை பிரிய மனமில்லை. ஆண்களும், பெண்களும் என்னை தட்டிக் கொடுத்தும், முத்தமிட்டு கொஞ்சியும் சென்றார்கள்.

ஆட்டம் காலி படுதா மிச்சம் என்பது போல, நாடக கொட்டகையின் ஸ்கிரீன் செட்டுகள், மட்டுமே இருந்தது. அதையும் மூட்டைக் கட்ட வேண்டியவர்கள் வந்தார்கள்.

அதுக்கு மேல அங்கிருக்க மனமில்லை. அடுத்த ஆண்டு திருவிழாவில்தான் அவர்களை காண முடியும் என்கிற வேதனை சுமையோடு வீட்டை நோக்கி நடந்தேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...