Sunday, April 22, 2018

60 தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் அழைப்பு


தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் 
திரைப் படங்களுக்கு போஸ்டர் டிசைன், ஃபோட்டோ கார்டு, பத்திரிகைகளுக்கான பட விளம்பர டிசைன் போன்ற விதவிதமான டிசைன்கள் செய்து கொடுத்தவர் டாக்டர் உபால்டு.

அந்த காலத்தில் கைகளால் வரைந்து, படங்களை கத்தரித்தி வெட்டி ஒட்டும் அழகு சார்ந்த வசீகரமான வேலை அது. ஒரு படத்தின் டிசைனைப் பார்த்தால் அந்தப் படத்தின் லட்சணம் என்ன என்று தெரிந்துவிடும், என்பார்கள். அதைப் போல படத்தின் முகமாக முதலில் மக்களுக்கு தெரிவது இந்த டிசைன்தான்.

போலீஸ் கதை என்றால் சிவப்பு, கிராமம் என்றால் பச்சை, காதல் என்றால் நீலம் என்று எந்த கதைக்கு என்ன மாதிரி பின்னணி நிறத்தில் டிசைன் செய்வது என்று அவர்களுக்கு அத்துப்படி.

அப்படி ஏராளமான படங்களுக்கு டிசைன் செய்து புகழ் பெற்று அதில் டாக்டர் பட்டம் பெற்றவர் உபால்டு. இவரது அலுவலகத்தில் சென்று, அவர் மூலம் வாய்ப்பு பெற்று திரைத் துறைக்கு வந்தவர்கள் பலர். அதில் கவியரசு வைரமுத்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசைனர் மேக்ஸ் 
அவருக்கு பிறகு, அவரது உதவியளர் மேக்ஸ், ஸ்ரீதர் என பலர் டிசைனர்களாக புகழ்ப் பெற்றார்கள். இதில் மேக்ஸ் எனது குருநாதர் டைமண்ட் பாபுவுக்கு நெருங்கிய நண்பர். டைமண்ட் பாபு நடத்தும் பல  விழாக்களுக்கு அவர்தான் டிசைன் வரைவார். அப்படி டைமண்ட் பாபுவுடன் அவரது அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று, மேக்ஸ் அலுவலமும் எனது  சொந்த அலுவலகம் போல ஆனது.

ஒரு சகோதரனைப் போல நலம் விசாரிப்பார் மேக்ஸ். ஆலோசனை சொல்வார். கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர். விஜயகாந்த் நடிக்கும் படங்கள், விஜய் நடிக்கும் படங்கள், ராஜ்கிரண் நடிக்கும் படங்கள், இராம.நாராயணன், வி.சேகர் இயக்கும் படங்கள் என பல முன்னணி பட நிறுவனங்கள், நடிகர்களின் படங்களுக்கு விளம்பர டிசைன்கள் செய்து கொடுத்து எப்போதும் பிஸியாக இருப்பார் மேக்ஸ்.

பல விளம்பர நிறுவனங்களும், லட்சுமன் ஸ்ருதி போன்று விழாக்கள் நடத்தும் அமைப்புகளும் அவரிடம்தான் டிசைன் செய்தனர். விளம்பரம் முதல், டிக்கெட், கார் பாஸ் வரை அனைத்தையும் மிகஅழகாக செய்து கொடுப்பார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் லோகோ வரைந்தது முதல், இப்பவும் திரையுலகம் சார்பில் நடக்கும் பல விழாக்களுக்கும் அவர்தான் டிசைன் வரைவார். நான் எழுதிய ஏழு புத்தகங்களுக்கும் அவர்தான் அட்டைப் படம் வரைந்து கொடுத்தார். அதற்காக எந்த உதவியும் பெற்றவர் கிடையாது. ஒரு தம்பியைப் போல அரவணைத்து செல்கிறவர்.

ஜி.பாலன் 
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இருந்து வேலையை விட்டு நான் நின்றுவிட்டேன் என்பதை  அவரிடம் தெரிவித்தேன். அமைதியாக கேட்ட மேக்ஸ், பிறகு கண்டிப்புடன், ‘’பிள்ளைகள் படிப்பு, வாடகை, சாப்பாட்டுக்கு வருமானத்திற்கு என்ன செய்யப் போறே’’ என்று உரிமையுடன் கேட்டார்.

அதைக் கேட்டுக் கொண்டே வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ், ‘’பாலனை விட்டுட்டுவோமா என்ன?’’ என்று பதில் சொல்லிக் கொண்டே நுழைந்தார்.

நான் எழுந்து நின்றேன். அவர் அமரச் சொன்னார்.

வீ.சேகர் இயக்கத்தில் பல வெற்றிப் படங்களை செ.கண்ணப்பனுடன் இணைந்து  திருவள்ளுவர் கலைக் கூடம் பட நிறுவனம் சார்பில் தயாரித்தவர், எஸ்.எஸ்.துரைராஜ்,

தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு அடிக்கடி வருவதால் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்.

வேலையைவிட்டு நின்றதற்கான காரணத்தை அவர் கேட்கவில்லை. இருந்தாலும் நான் அவரிடம் சொன்னேன்.

சங்கத்தில் தயாரிப்பாளர் ஒற்றுமையாக இருந்த போது நான் நல்லவனாக தெரிந்தேன். இப்போது தேர்தல் காரணமாக குழுவாக பிரிவதால், ஒரு பிரிவினருக்கு நான் கெட்டவனாக தெரிகிறேன். இதை கே.ஆர்.ஜியிடம் சென்று தெரிவித்தேன். அவர் பொறுமையாக இரு என்றார்.

ஆனால், கே.ஆர்.ஜி. தலைமையிலான அணியில் ராவுத்தர் தலைவராக போட்டியிட இருக்கிறார். அவருக்கு வாக்கு சேகரிக்க என்னை பயன் படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.  ஏதாவது ஒரு அணிக்கு எதிராக இருந்து செயல்படுவதைவிட, எல்லோருக்கும் நல்லவனாக வெளியேறுவதே மேல் என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் வேலையில் இருந்து விலகிவிட்டேன் என்று தெரிவித்தேன்.

சங்கத்தில் பார்த்தவரை உன்னுடைய வேலையில் எனக்கு முழு திருப்தி இருந்தது. அதனால், திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிக்கும் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக நீ வேலை செய்ய வா? என்று சொல்லி, தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் அழைத்தார்

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...