Sunday, April 22, 2018

42 செவாலியே விருதும், பாராட்டு விழாவும்



செவாலியர் விருது என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கி வரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957- ல் இருந்து ஆண்டு தோறும் வழங்கி வரும் மிக உயர்ந்த விருது.


கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு வழங்கினார்கள். இந்த விருதுக்கு சிவாஜி அவர்கள் தேர்வான கடிதம் கிடைத்த போது, அந்த செய்தியை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்து வர உதவியாளர் என்கிற முறையில் என்னை அனுப்பினார் சிவாஜியின் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்.

ஈகா திரையரங்கில் மதியம் இரண்டு மணிக்கு ஒரு மலையாள படமும், மாலை ஆறு மணிக்கு பிலிம் சேம்பர் திரையரங்கில் ஒரு தமிழ்ப் படமும் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு கட்ட வேண்டிய வேலையும் அவருக்கு இருந்தது. இந்த ’செவாலியே விருது’ பொது செய்தி என்பதால், பத்திரிகை அலுவலங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினேன்.

சரியான மழை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் நனைந்து கொண்டே பறந்தேன். படம் பார்க்க வேண்டிய ஆர்வமும் இருந்ததால், எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு வேகத்தில் சென்று அந்த செய்தியை கொடுத்தேன்.
படம் திரையிடுவதற்குள் வந்து சேர்ந்துவிட்டதால், பிலிம் நியூஸ் ஆனந்தன், என்னை நம்ப மறுத்தார். ’’முக்கியமான செய்தி, நான் வேணும்னா திரும்ப போவட்டுமா’’ என்று சந்தேகத்துடனே கேட்டார். மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்தப் பிறகுதான் நிம்மதி அடைந்தார்.

அந்த செய்தி தினத்தந்தியின் முதல் பக்கத்தில் கார்டூன் படத்திற்கு கீழே நான்கு காளம் செய்தியாக பெரிதாக இடம் பெற்றிருந்தது.  பத்திரிகைகளில் செய்தி வந்த மறுநாள், நடிகை ராதிகா அவர்கள், அந்த விருதின் பெருமைப் பற்றி பெரிய பேட்டி ஒன்றை தந்தி பத்திரிகைக்கு கொடுத்திருந்தார்.

அதுவரை அது ஏதோ ஒரு சாதாரன அமைப்பு புகழ் பெறுவதற்காக கொடுத்த விருது என்று நினைத்தவர்கள், அந்த விருதின் பெருமை தெரிந்ததும் வியந்து போனார்கள். திரையுலகினர் பலர் சிவாஜி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

செவாலியே விருது பெற்ற சிவாஜி அவர்களை பாராட்டும் விதமாக ஒட்டு மொத்த திரையுலகம் சார்பில் அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த விழா குழுவுக்கு திரு ஏவி.எம்.சரவணன் தலைவராக இருந்தார். திரு கே.ஆர்.ஜி., திரு சிந்தாமணி முருகேசன், திரு.அபிராமி ராமநாதன் என ஒரு பெரிய விழா குழு உருவானது.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலைமையில், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், மற்ற மாநில முதல்வர்கள் என பலர் அழைக்கப்பட்டு, ரஜினி, கமல் என தென்னிந்திய திரையுலகின்  முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட மிக பிரமாண்டமான விழா  நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு எனது குருநாதர் திரு டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.

மக்கள் தொடர்பாளராகவும், டைமண்ட் பாபு, பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோரின் உதவியாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மக்கள் தொடர்பாளர் என்கிற முறையிலும் எனக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தது.

இந்த விழா குறித்து அடிக்கடி நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு கொடுப்பது, திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைப்பது என்று காலை ஐந்து மணி முதல் இரவு பணிரெண்டு மணி வரை பல நாட்கள் தூங்காமல் கூட நேரம் காலம் பார்க்காமல் வேலைப் பார்க்க வேண்டிய அனுபவத்தை அப்போது பெற்றேன்.

என்னைப் போலவே, ஏவி.எம். நிறுவன ஊழியர்களான விஸ்வநாதன், அர்ஜுனன், சண்முகம், பெரு.துளசி பழனிவேல் என பலர் இந்த வேலையில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்தனர்.

சிவாஜி அவர்கள் ஒப்பற்ற பெரிய நடிகர். பழகுவதற்கு இனிமையானவர். உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மரியாதை கொடுப்பதில், உண்மையாக பேசுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

தி.நகரில் உள்ள அன்னை இல்லத்திற்கு கே.ஆர்.ஜி., அவர்களுடன் செல்லும் போது அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். கே.ஆர்.ஜி. அவர்களை ’’முதலாளி’’ என்றுதான் அழைப்பார் சிவாஜி. தயாரிப்பாளர் என்றால் அப்படி ஒரு மரியாதை. ‘’என்ன சாப்பிடுறிய’’ என்று அன்போடு கேட்பார். ’உங்களுக்கு’ என்று என்னைப் பார்ப்பார்.

ஒரு முறை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் அங்கு வேலைப் பார்த்த அருள் என்கிற பையனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது காரில் வந்து இறங்கி சிவாஜி, எங்களைப் பார்த்தார்.

நாங்கள் வணக்கம் வைத்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து தலையாட்டி, பிறகு இடத்தை சுற்றிப் பார்த்தார். சில இடங்களில் பேப்பர் போன்ற குப்பைகள் கிடந்தன. அதை அவரே கீழே குனிந்து எடுத்து ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு திரும்பினார். அருளுக்கு பயத்தில் அக்கில் வேர்த்தது.

’’என்னப்பா… ஆபிஸை இப்படி குப்பையா வச்சிருக்கீங்க’’ என்று கேட்டுவிட்டு, மாடிக்கு செல்லும் படிகளை நோக்கி சென்றார்.

அவர் இருக்குமிடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற அனுபவத்தை அங்கு தெரிந்து கொண்டேன். அவருடய படங்களை பார்க்கும் போதும், போட்டோக்களை பார்க்கும் போதும் அவரது நினைவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம், அவரை சந்தித்து பேசி இருக்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...