Thursday, July 9, 2015

203 அபிநயா கிரியேஷன்ஸ்

என்னுடைய வைரப்ப பெரியப்பாவுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் பிறந்தார்கள். வருமானத்தை பெருக்க பெரியப்பா அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுவார். அதனால், பிள்ளைகளை வளர்க்க பட்டு பெரியம்மாள் அதிகம் கஷ்டப்பட்டார்.

பெரியக்கா சிவஞானத்தை மிகுந்த சிரமத்திற்கிடையில் உறவினரான ஆதிரங்கம் ராமசாமி என்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். கணவனும் மனைவியுமாக இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார்கள். அதன் விளைவாக வளர்ச்சியும் முன்னேற்றமும் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்தது.

அனைவருக்கும் பன்னீர் செல்வம், தமிழ்ச் செல்வம், தாமரைச் செல்வம், கலைச்செல்வம் என செல்வமாக பெயர் வைத்து, அவர்ளை படிக்க வைத்து நல்ல செல்வ வாழ்க்கைகையை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்களும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

அதே போல சின்ன அக்காள் காந்திமதிக்கு, பெரியக்காவே வரன் பார்த்து அருகில் உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்கிற பாட்டாளிக்கு திருமணம் செய்து வைத்தார்.

சின்ன அக்கா காந்திமதியும் அவரைப் போலவே பாடுபட்டு கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறினார். தனது கொழுந்தன் கணேசன், நாத்தினார் மகன் என பலரை வெளிநாடு அனுப்பி அவர்கள் சம்பாதிக்க உதவியாக இருந்தார்.

அக்காள் தங்கை உறவு விட்டுப் போகக் கூடாது என்று எங்களுடைய அகமுடைய இனத்தில் தாய் மாமன் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

அப்படி எதிர்ப்பார்து ஏமாந்து போனார் பெரிய அண்ணன் சிவராமன். அவரது மகள் ராணி, எங்க செல்லத்தை, அக்காள் தனது மகன்களில் ஒருவருக்கு எடுத்துக் கொள்வார் என நினைத்தார்.

ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க எந்த தாயுக்குத்தான் மனம் வரும். மூத்தமகனுக்கு எப்படி வசதியாக பெண் எடுத்தாரோ, அதற்கு குறைவில்லாமல் அனைத்து மகன்களுக்கும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

அதனால் ஏழையான எங்கள் குடும்பத்தில் அவர் பெண் எடுக்கவில்லை. பெரிய அக்கா பெண் எடுக்கவில்லை என்றால் என்ன? நான் இருக்கேன் என்று உதவ முன் வந்தார், சின்ன அக்காள் காந்திமதி.

வெளிநாட்டில் இருந்து வந்த அவரது கொழுந்தன் கணேசனுக்கு, அண்ணன் மகள் ராணியை திருமணம் செய்து வைத்தார்.

உங்களுக்கு மட்டும்தான் பெரிய மனதா? எனக்கும் இருக்கிறது என்று அண்ணன் மகன் ரமேஷ், மச்சான் சுதாகர் ஆகியோரை வெளிநாட்டுக்கு அழைத்துக் கொண்டார் கணேசன்.

கூரை வீட்டில் இருந்த இவர்கள், இப்போது மாடி வீடு கட்டி உயர்ந்திருக்கின்றனர். தனது மாமனார் மட்டுமல்லாது சின்ன மாமனார் வீட்டு திருமணங்களுக்கு கூட தன்னால் இயன்ற பொருள் உதவிகளை வழங்கியிருக்கிறார் கணேசன்.

ராணி இப்போது மகா ராணியாக இருக்கிறார். எங்கள் ராணி, வெங்கடேஷ், சந்தோஷ் என இரு தங்கங்களை பெற்றேடுத்திருக்கிறது. எங்க தங்கம் பெற்ற தங்கங்கள் ’’டேய் கிழவா’’ என்று என்னை உரிமையோடு அழைக்கிறார்கள்.

ஆனாலும் பெரிய அக்காவுக்கு, சின்ன அக்கா காந்திமதி மீது கோபம் இருக்கிறது. அவர் செய்யாத உரிமையை இவர் செய்து புண்ணியம் கட்டிக் கொண்டார் என்று நாங்கள் நடந்து கொள்வதாக கோபம்.

எங்கள் மீது அன்பு காட்டி எங்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்த சின்ன அக்கா மீது நாங்களும் அதிக நன்றியோடு இருப்பதால் கூட இருக்கலாம்.

பெரியக்காவை அப்படி நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. அவரும் எங்க வீட்டு மகள்தான். பொறந்த பொறாப்பு என்றும் விட்டுப் போகாது. அப்படி யாரும் நினைக்கவில்லை. அவர்கள் வீட்டு மருமகள்கள் எங்களுக்கு உறவினர்கள் இல்லை.

அதனால் எங்கள் மகள் வீடு என்று உரிமையோடு அந்த வீட்டுக்கு அடிக்கடி செல்ல வாய்ப்பு இல்லை. அது ஒரு குறையே தவிர மற்றபடி பாசம் குறைந்து விடுமா என்ன?

பெரியக்கா சிவஞானம், சின்ன அக்கா காந்திமதி இருவரையும் நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்பதை எனது அக்காள் வைரக்கண்ணு அனுபவ ரீதியாக உணர்ந்தவர். அதனால், தனது மகன்களில் யாருக்காவது எனது அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடத்தில் இருந்தது.

எனது அண்ணனை பிடிக்கிற அளவுக்கு என்னுடைய அண்ணியை எங்க அக்காவுக்கு பிடிக்காது. அன்பு காட்டுவதிலும், மரியாதை கொடுப்பதிலும் குறைகள் கிடையாது. அதே சமயம் அவர் எதிர்ப் பார்க்கிற மாதிரி அண்ணி நடந்து கொள்ளவில்லை என்று பெரும் குறை அவரிடத்தில் உண்டு.

என்னுடைய அண்ணி வெளியில் இருந்து வந்தவ்ர் கிடையாது. என்னுடைய அம்மாவின் அக்காள் பேத்தி. எங்களுக்கு அக்கா மகள். இப்படி ஒண்ணுக்குள் ஒண்ணாக இருந்தாலும், அண்ணியிடம் ஒரு வாய் தண்ணீர் கூட வாங்கி அக்கா குடித்தது கிடையாது. காலம் அவரை அவருக்கு சம்பந்தி ஆக்கியது.

அதற்கு நானும், அண்ணனும், தம்பியும், தங்கையும், என் மனைவியும் இருக்கிற நம்பிக்கையே காரணம்

என் உடல் நிலைப் பற்றி விசாரிக்க அண்ணன் வந்திருப்பதை அறிந்து அக்காவும் என் வீட்டுக்கு வந்தார். நலம் விசாரிப்புகளுக்கு பிறகு குமார் - செல்வி திருமணம் பற்றிய பேச்சு ஆரம்பமானது.

என்னைப் போலவே ஏற்கனவே அக்காவும் அந்த எண்ணத்தில் இருந்ததால், எல்லாம் சுலபமானது. தம்பியிடமும் கலந்து பேசிவிட்டு நிச்சயதார்த்திற்கான நாள் குறிக்க ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

அதே சமயம் மாப்பிள்ளை குமாரிடமும், மகள் செல்வியிடம் திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்டப் பிறகே முடிவு செய்தேன்
.

எங்கள் வீட்டு திருமணம் முடிவான போது , நான் திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரித்த ’நம்ம வீட்டு கல்யாணம்’ படத்தில் மக்கள் தொடர்பாளராக வேலை செய்து கொண்டிருந்தேன்.

                         (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...