Saturday, July 11, 2015

206 சரவணனின் குரு சரவணன்?

சென்ற கட்டுரையில் சத்தியமங்கலம் சரவணன், இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக வேலை செய்ததைப் பற்றி தெரிவித்திருந்தேன். அவற்றை பதிவு செய்யும் போது இன்னொரு ஞாபகமும் நினைவுக்கு வருகிறது.

வெங்கடேஸ்வராலயம் என்கிற பட நிறுவனத்தையும், ‘காதல் மன்னன்’ என்கிற படப் பெயரையும் பதிவு செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வந்திருந்தார் தயாரிப்பாளர் சத்யநாராயணா. ஏற்கனவே அது மாதிரி பெயர்கள் இருக்கிறதா என்பதை சரி பார்த்து, அவற்றை பதிவு ரசீது போட்டுக் கொடுத்தேன்.

கதாநாயகன் யார், இயக்குனர் யார் என்று அவரிடம் கேட்ட போது, அஜீத்திடம் பேசி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறோம். இயக்குனர் புதுசு. கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருப்பவர். சரவணன் என்று தெரிவித்தார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் கவிதாலாயா நிறுவனத்தில் இருந்து மேனேஜர் சந்தானம் தொலைபேசியில் அழைத்து ஒரு தகவல் கேட்டார்.

அதற்கு பதில் சொல்லிவிட்டு, இயக்குனரின் உதவியாளர் சரவணனுக்கு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என்று தெரிவித்தேன்.

அப்படியா? என்று ஆச்சர்யத்துடன் கேட்டவர், சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் தொலைபேசியில் அழைத்து, இயக்குனரிடம் இதுப் பற்றி எதுவும் சரவணன் சொல்லவில்லை. எல்லாம் முழுமையாக முடிவான பிறகு சொல்வதற்காக இருக்கிறார். நீங்கள் வேறு யாரிடமும் இந்த தகவலை பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் சந்தானம்.
 
சரவணன், சரண் என்கிற பெயரில் காதல் மன்னன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அமர்க்களம், அட்டகாசம், ஜேஜே, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வட்டாரம், அசல் என பல படங்களை இயக்கினார். முனி போன்ற படங்ளையும் தயாரித்தார்.
 
திரையுலகிற்கு வருவதற்கு முன்பு ஒரு வார இதழில் நகைச்சுவை துணுக்குகளுக்கு சரண் என்கிற பெயரில் படம் வரைந்தவர்.

அவரிடம் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான என் மண்ணின் மைந்தன் திருவாரூர் பாபு உதவியாளராக இருந்து பயிற்சி பெற்று தனியாக வந்து படம் இயக்கினார்.

அதே போல அவரது பட்டறையில் இருந்து சரவணன் வந்து படம் இயக்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. 

‘’நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் ஆகிறோம். நாம் இனி என்ன ஆகப் போகிறோம் என்பதையும் அதுதான் தீர்மானிக்கிறது என்கிறார்’’  அறிஞர் காப்மேயர்.


அதை உணர்ந்தவர்கள் பலர். அதில் சரவணனும் ஒருவர் . 
 

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...