ஏவி.எம். ஸ்டூடியோவில்
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் பிரபு நடித்த ‘மிஸ்டர் மெட்ராஸ்’
படத்தின் துவக்க விழா. அந்த விழாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். விடுமுறைக்கு
ஊரில் இருந்து வந்திருந்த எனது அக்காள் மகன் சங்கர் என்னைப் பார்த்துக்
கொண்டிருந்தான்
அவனுக்கு சினிமா
நடிகர்களையும், ஸ்டுடியோவையும் காட்ட வேண்டும் என்கிற ஆவல் காரணமாக
அவனையும் அழைத்துச் சென்றேன். அந்த விழாவுக்கு சென்று தலைவர் கே.ஆர்.ஜி.யை
வரவேற்று, நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரை அனுப்பி வைத்துவிட்டு, அந்த மாத செயற்குழு
கூட்டத்திற்கான அழைப்பிதழை தயாரிப்பாளர்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று
கொடுத்து வர வேண்டிய வேலை இருந்தது.
விழா முடிந்த பிறகு
ஒவ்வொரு செயற்குழு உறுப்பினர் அலுவலகத்திற்கும் அழைப்பிதழ் கொடுக்க சென்றேன். என்
கூடவே சங்கர் வந்தான். லட்சுமி மூவி மேக்கர்ஸ் அலுவலகம் சென்ற போது, மேனஜர் முருகானந்தம்
என்பவரிடம், சங்கரை பார்த்துக்க சொல்லிவிட்டு, திரும்பி வரும் போது
அழைத்து செல்கிறேன் என்று தெரிவித்து விட்டு சென்றேன்.
திரும்பி வருவதற்குள்
அவனுடன் பேசி பழகி இருக்கிறார் முருகானந்தம். அவன் துருதுரு என்று இருப்பது
அவருக்கு பிடித்திருந்தது. அதனால், அவன் இங்கேயே இருக்கட்டும். விட்டுட்டு போண்ணே என்று
பிடிவாதம் பிடித்தார்.
இவன் படிக்கிற பையன்.
விடுமுறையில்தான் வந்திருக்கிறான். அதனால், அவனது அண்ணன் குமார்
ஊரில் இருக்கிறார் அவரை அழைத்து வந்து விடுகிறேன் என்று கூறினேன்.
அதே போல சங்கரை ஊரில்
விட்டு திரும்பிய போது, குமாரை அழைத்து வந்து முருகானந்தத்திடம்
சேர்த்துவிட்டேன்.
காலம் உருண்டோடியாது.
எஸ்.கே.கிருஷ்ணகாந்த்
என்கிற பெயரில் இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன் என்கிற என்கிற பட நிறுவனத்தை
துவங்கி விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து
சரவணன், துஷ்யந்த் நடித்த மச்சி, சிம்பு நடித்த மன்மதன், விவேக் நடித்த சொல்லி
அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்து தயாரிப்பாளராக உயர்ந்தார் முருகானந்தம்.
கிங் படம்
துவங்குவதற்கு முன்பு அலுவலகம் பார்த்து முன்பணம் கொடுத்து, அந்த அலுவலகத்திற்கு
கணபதி ஹோமம் செய்ய என் வீட்டில் இருந்து பொருட்கள் எடுத்து வந்த போது, அப்போது ஊரில் இருந்து
வந்திருந்த சங்கரையும் உதவிக்கு அழைத்துச் சென்றேன்.
சங்கரை மீண்டும்
பார்த்த முருகானந்தம், அவன் என்னுடனே இருக்கட்டும் என்று மீண்டும் சொன்னார்.
அவனை கூடவே வைத்துக் கொண்டார். மேலே சொன்ன படங்களில் அவருக்கு உதவியாக இருந்ததுடன்
மச்சி படத்தில் கதாநாயகனின் நண்பனாகவும் நடித்தார் சங்கர்.
அதன் பிறகு நல்லமுத்து
தயாரிப்பில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்த நாளை படத்தில் அலுவலக நிர்வாகியாக
வேலைப் பார்த்தவர், விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து அம்மா
கிரியேஷ்னஸ் டி.சிவா தயாரித்த மரியாதை படத்தில் தயாரிப்பு நிர்வாகியின் உதவியாளராக
பணியாற்றினார்.
கமல் நடித்த உன்னைப்
போல் ஒருவன், கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா, பிரியாணி போன்ற
படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகி அந்தோனியிடம் உதவியாளராக இருந்தவர், கார்த்தி நடித்த
மெட்ராஸ் படத்தின் மூலம் தயாரிப்பு நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு
கொம்பன், படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக வேலைப்
பார்த்தார்.
அன்று பிரபு நடித்த
‘மிஸ்டர் மெட்ராஸ்’ படத்தின் துவக்க விழாவிற்கு இவரை ஒரு விருந்தினராக கை பிடித்து
அழைத்து சென்றேன். இன்று கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாக
உயர்ந்து அந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துச்
சென்றார். வாழ்த்தி வந்தேன்.
அவருடைய நேர்மை, உண்மை, உழைப்பு, திறமை அவரை வழி நடத்தி
செல்கிறது. காலம் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிற ஆசான். எனக்கும் கற்றுக் கொடுத்தது.
(என்
திரையுலக வாழ்க்கை
அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment