திரைப்படத் துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, பாராட்டு விழா என பல
திரை விழாக்களில் புகைப்படம் எடுத்தவர் சித்ரா சுவாமிநாதன். திரைப் படங்களுக்கு
வேலை செய்ததில்லை அவர்.
பட விழாக்களுக்கு தலைமை
தாங்க, குத்து விளக்கேற்றி பாராட்ட வேண்டிய பொறுப்பில்
தலைவர் கே.ஆர்.ஜி. இருந்ததால், அடிக்கடி விழாக்களுக்கு அவருடன் சென்று வர வேண்டிய
நிலையில் இருந்தேன். அதனால் சித்ரா சுவாமிநாதனுடன் அதிகமான பழக்கம் ஏற்பட்டது.
தயாரிப்பாளர் சங்க
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கும் அவரை புகைப்படம் எடுக்க
அழைத்து நாளடைவில் சங்க ஊழியர் போல ஆகிப் போனார் சித்ரா சுவாமிநாதன்.
என்னையும், அவரையும் தொடர்பு கொள்ள
இருவருக்கும் அப்போது பிரபலமாகி இருந்த பேஜர் வாங்கி கொடுத்திருந்தார் தலைவர்
கே.ஆர்.ஜி.
தயாரிப்பாளர்
சங்கத்திற்கு வந்த பிறகு மேலும் பிரபலமானார் சித்ரா சுவாமிநாதன். எனக்கு குடும்ப
நண்பராகவும் ஆனார். அவரை நான் மாப்பிளை என்றும், அவரது மனைவியை அக்கா
என்றும் உரிமையோடு அழைப்பேன்
ஒரு நாள் டிசைனர்
மேக்ஸ் அவர்களின் அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது, வெளியில் இருந்து வந்த
டிசைனர் மேக்ஸ் அவர்களும், நண்பர் ரவிராஜா அவர்களும் சித்ரா சுவாமிநாதனுக்கு
உடல்நிலை சரியில்லாமல் சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துமனையில்
சேர்த்திருக்கிறார்கள் என்கிற தகவலைச் சொன்னார்.
பதறிப் போனேன். உடனே
வீட்டுக்குச் சென்று என் மனைவியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு
விரைந்தேன்.
அவசர சிகிச்சைப்
பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்ததால் அவரைப் பார்க்க அனுமதிக்க வில்லை. பொது
வார்டுக்கு வந்த பிறகுதான் பார்க்க முடியும் என்றார்கள்.
அதனால், அங்கு இருந்த அவரது
மனைவி, பெரிய மகள் இருவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சிறிது
நேரத்திற்கு பிறகு திரும்பினேன்.
அவரது பெரிய மகள் இரவு
பத்து மணியளவில் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார்.
அப்பாவை ராமச்சந்திரா
மருத்துவமனை கொண்டு சென்று ஆஞ்சியோ பரிசோதனை எடுக்கச் சொல்கிறார்கள். நகைகள்
எல்லாம் அடகு வைத்து கொண்டு வந்த பணம் எல்லாம் சரியாகிவிட்டது. மேலும் செலவுக்கு
பணம் இல்லை. ஆஞ்சியோ பரிசோதனைக்கு மட்டும் இருபத்தி ஐந்தாரம் செலவாகும் என்று
தெரிவித்தார்.
கவலைப்பட வேண்டாம்.
காலையில் அதற்கான தொகையை திரட்டிவிடலாம் என்று கூறிவிட்டு யோசிக்க ஆரம்பித்தேன்.
தயாரிப்பாளர்
சங்கத்தைப் போலவே, நடிகர் விஜயகாந்த், இசையமைப்பாளர் தேவா
ஆகியோருக்கும் அடிக்கடி படம் எடுக்க செல்பவர் சித்ரா சுவாமிநாதன். அவர்களிடத்தில்
உதவி கேட்கலாமா என்று மனதில் சிந்தனை ஓடியது.
காலையில் எழுந்ததும், முதல் வேலையாக
தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்த கே.விஜயகுமார் அவர்கள் வீட்டுக்கு சென்றேன்.
அவரிடம் சித்ரா சுவாமிநாதன் உடல் நிலை குறித்த தகவலை தெரிவித்தேன்.
விஜயகாந்த் வட
இந்தியாவில் படப்பிடிப்பில் இருப்பதால், அவரிடம் உடனே உதவி பெற முடியாது. அதனால், தயாரிப்பாளர் சங்க
அறக்கட்டளை மூலம் உதவி பெற தலைவர் கே.ஆர்.ஜி.யை நேரில் சென்று கேளு என்று ஆலோசனை
கூறினார்.
சித்ரா சுவாமிநாதனின்
மகன் ஜானை அழைத்துக் கொண்டு ஒரு கடிதம் எழுதி எடுத்துக் கொண்டு தலைவர் கே.ஆர்.ஜி.
அவர்களை சந்தித்தேன்.
‘தொப்பிக்கு உடல் நிலைய
சரி இல்லையா?’ என்று அதிர்ந்து போனவர், பிறகு என்னிடம் பணம்
இல்லையே என்று யோசித்தார். அறக்கட்டளைக்கு உதவி கேட்டு எழுதிய கடிதத்தை அவரிடம்
கொடுத்தேன்.
வாங்கிப் பார்த்தவர், பிறகு கேயாரிடம்
விவரத்தை சொல்லி ஒரு கையெழுத்து வாங்கி வர பணித்தார்.
தயாரிப்பாளர் சங்க
அறக்கட்டளை கணக்குக்கு தலைவர் கே.ஆர்.ஜியும், கேயாரும் இணைந்து
காசோலையில் கையெழுத்து போடுவார்கள். அப்போது இருவருக்குள்ளும் சுமூகமான நட்பு
இல்லை.
தொலைபேசியில் கேயார்
அவர்களை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அனுமதி கேட்டேன். வீட்டில் இருந்து வெளியே
செல்வதாகவும், பிலிம் சேம்பர் அலுவலகத்திற்கு வரும்படியும்
கூறினார்.
அப்போது ‘உழைக்கும்
திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்’ துவங்கி இருந்த சமயம். தலைவராக எம்.பி.மணி, செயலாளராக ஜெ.பிஸ்மி
பதவி வகித்தனர். அதில் நான், சித்ரா சுவாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்
உறுப்பினர்களாக இருந்தோம்.
தனி மனித முயற்சியைவிட
ஒரு பத்திரிகையாளனுக்கு, பத்திரிகையாளர் சங்கம் செய்ய வேண்டிய உதவியாக கொண்டு
செல்ல வேண்டும் என்று எண்ணம் பிறந்தது. உடனே அவர்களுக்கு தொலைபேசியில் தகவலை
தெரிவித்தேன்.
அவர்கள் இருவரும் உடனே
புறப்பட்டு பிலிம் சேம்பர் வந்தனர். அவர்கள் இருவரும் கேயார் அவர்களிடம் பேசிக்
கொண்டு இருக்கும் போது, நான் சித்ரா சுவாமிநாதன் மகன் ஜானுடன் சென்றேன்.
சித்ரா சுவாமிநாதன்
நிலையை அறிந்து வேதனையை தெரிவித்த கேயார், எம்.பி.மணி, பிஸ்மி இருவரும் சித்ரா சுவாமிநாதன் பற்றி மேலும்
எடுத்து சொன்னதும், உடனடியாக மேனஜரிடம் காசோலை எடுத்து வரச் சொல்லி
கையெழுத்திட்டுக் கொடுத்தார். தலைவர் கே.ஆர்.ஜி.யும் கையெழுத்திட்டார்.
இருபத்தி ஐந்தாயிரம்
காசோலை சித்ரா சுவாமிநாதன் பெயரில் கிடைத்தது.
அவர் வங்கிக்கு சென்று எடுக்க முடியாது என்பதால், வேறு யாரிடமாவது கடனாக
இருபத்தி ஐந்தாயிரம் பெற்று தரமுடியுமா? என்று இருவரிடமும் கேட்டேன்.
உடனே பிரகாஷ்ராஜ்
மேனேஜர் வெங்கட் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார் பிஸ்மி.
அவர் பத்தாயிரம்
உதவியாக தருவதாக கூறினார். அதனால், அவரது அலுவலகத்திற்கு சென்றோம்.
பிஸ்மியும், எம்.பி.மணியும்
ஆலோசித்து சில உறுப்பினர்களை தொடர்பு கொண்டு வரச் சொன்னார்கள்.
வி.கே.சுந்தர், ஆர்.டி.சக்திவேல், ராமானுஜம் என மேலும்
நான்கு பேர் சேர்ந்தனர்.
செல்லும் வழியில்
அருணாசலம் ஸ்டூடியோவில் நடித்துக் கொண்டிருத விவேக் அவர்களை சந்தித்தோம். அவர்
சார்பாக ஐந்தாயிரம், லட்சுமி மூவி மேக்கர் பட நிறுவனம் ஐந்தாயிரம், தயாரிப்பாளர்
காஜாமைதீன் பத்தாயிரம் என பணம் வசூல் ஆனது.
ஆஞ்சோயோ பரிசோதனைக்கு
ரொக்கமாக பணம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி எனக்குள் ஏற்பட்டது.
இவ்வளவு தூரம்
வந்துவிட்டோம். அருகில் ஆஸ்கார் மூவிஸ் அலுவலகம் இருக்கிறது. அங்கும் சென்று
வரலாம் என்று யோசனை சொன்னார்கள்.
அதன் படி அங்கு
சென்றோம். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எங்களை வரவேற்று அமரச் சொன்னவர், எல்லோரும் சேர்ந்து
வந்திருக்கீங்க. ஏதோ நல்ல விஷயத்திற்காக வந்தது போல தெரிகிறது. என்ன செய்யணும்
என்று உரிமையோடு கேட்டார்.
சித்ரா சுவாமிநாதன்
உடல் நிலைப் பற்றி தெரிவித்து, ‘’ஆஞ்சியோ செலவுக்கு முதலில் இருபத்தி ஐந்தாயிரம்
காட்டச் சொல்லி இருக்கிறார்கள்...‘’ என்று
முழுமையாக சக்திவேல் சொல்லி முடிப்பதற்குள், ‘’சுரேஷ் இருபத்தி
ஐந்தாரம் எடுத்து வா’’ என்று அவரது தம்பிக்கு கட்டளை பிறப்பித்தார் ரவி.
எங்களுக்கு என்ன
சொல்வதென்றே தெரியவில்லை. நன்றி தெரிவித்து வீட்டைப் பெற்றோம்.
மருத்துவமனைக்கு
அப்படியே அனைவரும் சென்றோம். சித்ரா சுவாமிநாதன் மனைவியிடம் இருபத்தி ஐந்தாயிரம்
காசோலை, ஐம்பத்தி ஐந்தாயிரம் ரொக்கம் என மொத்தம் என்பதாயிரத்துக்கான
நிதியை தலைவர் எம்.பி.மணியும், செயலாளர் பிஸ்மியும் வழங்கினார்கள்.
அந்தத் தொகையை பெற்ற
போது, அடிவயிற்றில் இருந்து வந்த அழுகையை அடக்க முடியாமல்
வீறிட்டு அழுதார் அந்த அக்காள்.
அழுத அழுகையை மறக்கவே
முடியாது. அப்படி ஒரு அழுகை அது.
கூட பிறந்த பிறப்பே
வந்து பார்க்காத போது, யார் பெத்த பிள்ளைகளோ நண்பர்கள் என்று முன் வந்து
நின்று உதவுகிறீர்களே என்று கதறி, குமுறி அழுதார்.
அவரை ஆறுதல் படுத்தி, மருத்துவரை நேரில்
சந்தித்து அவரது உடல் நலம் பற்றி தெரிந்து கொண்டு, மேலும் சிறப்பாக
சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டு திரும்பினோம்.
அதன் பிறகு அவர்
சிகிச்சை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்.
சாதி, மாதம் பார்க்காமல்
பத்திரிகையாளன் என்கிற முறையில் அவருக்கு உதவ முன் வந்து முயற்சி எடுத்தது சங்கம்.
அதை மறக்க முடியாது.
முதல் நாள் இரவு
யாரிடம் உதவி கேட்க செல்வது என்று தூங்க விடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த என்
மனம், மறு நாள் நிம்மதியான துக்கத்தை கொடுத்தது.
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment