’கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் நான் |
அன்று நடந்த அனைத்து சம்பவங்களும் கனவு போல இருந்தது. இரவு தூக்கம்
வரவில்லை. காலையில் ஆரம்பித்தது முதல், இரவு திரும்பும் வரை என்ன நடந்தது என்று ஒவ்வொன்றாக
நினைத்துப் பார்த்து மனதில் அசைப்போட்டபடியே படுத்திருந்தேன்.
காலை எழுந்ததும், படப்பிடிப்பில் பார்த்த சம்பவங்களை சுவராஸ்யமாக
எழுதினேன். அதை திரு.டைமண்ட் பாபு அவர்களிடம் படித்துக் காட்டிய போது, அருமையாக
இருக்கிறது. இதை, நாளை ’மன்னன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கும் போது கொடுத்துவிடாலாம்
என்று கூறினார்.
சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு சென்றோம். பத்திரிகையாளர் சந்திப்பு
விஷயமாக திரு.ராம்குமார் அவர்களிடம் பேசிய அவர், பிறகு திரு.ராம்குமார்
அவர்களிடமும், சிவாஜி பிலிம்ஸ் குமார் அவர்களிடமும்
என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பிறகு, தி.நகர் பசுல்லா சாலையில் இருந்த அன்னலட்சுமி அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு கார்த்திக்,
பானுப்பிரியா நடிப்பில் ராஜேஸ்வர் இயக்கிய ’அமரன்’ படத்தின் வேலைகள். அங்கிருந்து ராவுத்தர் பிலிம்ஸ்
அலுவலகம்.
திரைப் படத் துறையில்,
மக்கள் தொடர்பாளர் என்கிற பணியை துவங்க காரணமாக இருந்தவர் திரு.பிலிம் நியூஸ்
ஆனந்தன். அவருடைய மூத்த மகன் இந்த டைமண்ட் பாபு. வங்கியில் வேலைக்கு சேர்ந்தவரை,
திரையுலகிறகு அழைத்து வந்தவர் திரைப்படத் தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ஆபாவணன்.
திரைப்படக் கல்லூரி மாணவர்களை திரையுலகம் திரும்பிப் பார்க்க வைத்த ’ஊமைவிழிகள்’ படத்தை
தயாரித்தவர் திரு.ஆபாவணன். இந்தப் படத்தில் பல தொழில் நுட்பக் கலைஞர்களை, வாரிசுகளாக அறிமுகப் படுத்தியவர், மக்கள் தொடர்பாளரும்
வாரிசாக இருக்க வேண்டும் என்று திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் மகனான, திரு டைமண்ட் பாபு அவர்களை மக்கள் தொடர்பாளராக ’ஊமைவிழிகள்’
படத்தில் அறிமுகப்படுத்தினார்.
’ஊமைவிழிகள்’ படத்தில் விஜயகாந்தின் நட்பு கிடைக்க, தொடர்ந்து
விஜயகாந்த் படங்கள், பிரபு, கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர்கள், முன்னணி
இயக்குநர்கள், முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் என,
அவரது மக்கள் தொடர்பு பணி பெருகி வளர்ந்து, திரையுலகில், முன்னணி மக்கள் தொடர்பாளராக விளங்கினார்.
அவருடைய அலுவலக முகவரி போல சிவாஜி பிலிம்ஸ், ராவுத்தர் பிலிம்ஸ், கலைப்புலி
இண்டர்நேஷனல் அலுவலகங்கள் இருந்தன. காலை பதினொரு மணி வரை சிவாஜி பிலிம்ஸ், மதியம் இரண்டு மணிவரை ராவுத்தர்
பிலிம்ஸ் அலுவலங்களில் அவரை சந்திக்கலாம்.
தினமும் என்னுடைய வேலையும் அவரை சார்ந்து இருந்ததால், இந்த அலுவலகங்கள் திரையுலகில்
என்னுடைய தாய் வீடு போல ஆனது.
பெரும்பகுதி நேரத்தை இங்கு கழிப்பதால், அங்கு வேலைப் பார்க்கும் மேனஜர்,
ஊழியர், டிரைவர்கள் என்று அனைவருடனும் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. திரையுலகையும்,
பத்திரிகையுலகையும் இணைக்கும் வேலை என்பதால், எனது வேலைக்கு மதிப்பும்
மரியாதையையும் அதிகமாக இருந்தது.
ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகம்தான் திரு.விஜயகாந்துக்கும் அலுவலகம்.
படப்பிடிப்பு இல்லை என்றால் திரு.விஜயகாந்த்தும் வந்து விடுவார். அவரைப் சந்திக்கவும், திரு.இப்ராஹிம்
ராவுத்தரை
சந்திக்கவும், இயக்குநர்கள் திரு ஆர்.சுந்தராஜன்,
திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.லியாகத் அலிகான் என பல இயக்குநர்கள் வருவார்கள்.
அப்போது வெற்றிகரமாக ’கேப்டன் பிரபாகரன்’ படம் ஓடிக் கொண்டிருந்தது.
திரு டைமண்ட் பாபு அவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் முடியாது என்று
சொல்லமாட்டார். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். அதனால்,
வேலைப் பளு அவருக்கு அதிகம் இருந்தது.
திரையுலகில் திரு.டைமண்ட் பாபு அவர்களிடம்
உதவியாளராக சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எனது தம்பி சிவாவுக்கு
கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன்.
’’நீ
இல்லாமல், தீபாவளி - பொங்கல்
போன்ற பண்டிகையை பல வருடங்கள் வீட்டில் மகிழ்சியாக கொண்டாடியதில்லை. அதனால்,
பொங்கலுக்கு ஊருக்கு வந்துவிடு’’ என்று பதில் கடிதம்
எழுதி இருந்தான் சிவா.
பொங்கலுக்கு அமரன், மன்னன் படங்கள் வெளியாவதால், பத்திரிக்கையாளர்களுக்கு
சிறப்பு காட்சி திரையிட வேண்டும். அதனால், பொங்கலுக்கு போக முடியாது என்று கூறிவிட்டார்
திரு.டைமண்ட் பாபு.
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment