அப்போது தயாரிப்பாளர்
சங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த ஆண்டு ஆயுதபூஜை விழாவை சிறப்பாக
நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி.
அதன்படி முதல் நாளே
நிர்வாக குழு, செயற்குழு, ஆலோசனைக் குழு, சிறப்பு அழைப்பாளர்கள்
என முப்பது தயாரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தேன்.
அனைத்து
உறுப்பினர்களுக்கும் கொடுத்து அனுப்பும் அளவிற்கு சக்கரைப் பொங்கல், சுண்டல், பொறி, பழங்கள் என எல்லாம்
தயாராகி இருந்தது.
அலுவல ஊழியர்கள், வேலைக்கார பெண்
ஆகியோரிடம் அலுவலகத்தை சுத்தம் செய்கிற வேலையை வாங்கிக் கொண்டிருந்தேன்.
ஒரு தயாரிப்பாளர்
இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, கே.ராஜன் அவர்கள் வரும்
போது அவரிடம் கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றிருந்தார்.
வேலைகளில் கவனமாக
இருந்த நான், பணத்தை பத்திரமாக வைக்க மறந்துவிட்டேன். தயாரிப்பாளர்
கே.ராஜன் அவர்கள் வந்து கேட்ட போதுதான் பணம் பற்றிய ஞாபகமே வந்தது.
மேஜைகள் நாற்காலிகள்
எல்லாம் வெளியே கிடந்தது. மேஜை உள்ளே இருக்கும் போது, பணத்தை வாங்கி மேஜையில்
வைத்த நான், சாமி படத்தை அப்படி துடைக்க வேண்டும், இப்படி துடைக்க
வேண்டும் என்று துடைக்க பையனிடம் ஆலோசனை சொல்ல அருகில் சென்று, அப்படியே துடைக்க
ஐக்கியமானேன். அதனால், பணத்தை டிராவில் வைத்து பூட்ட மறந்துவிட்டேன்.
இப்போது கே.ராஜன்
அவர்கள் பணம் கேட்டதும் தேட ஆரம்பித்தேன். அப்போது அங்கு இருந்த ஐந்து பேரும்
என்னோடு சேர்ந்து பணத்தை தேடினார்கள். கிடைக்கவில்லை. போலீசுக்கு போகலாமா? என்றார் கே.ராஜன்.
கவனக் குறைவாக இருந்தது
என் தவறு. அதனால் மற்றவர்கள் மீது பழி போட நான் தயாராக இல்லை. பணத்தை எடுத்தவர்கள்
கண்டிப்பாக கொடுப்பார்கள். கொடுக்கவில்லை என்றால் நான் சீட்டு போட்டிருக்கிறேன்.
அதை எடுத்து கொடுத்துவிடலாம் என்று மனம் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.
‘’என்ன பாலா
கேட்கிறேன். பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய்’’ என்று திரும்ப கேட்டார் கே.ராஜன்.
சிறிது நேரத்தில் ஆயுத
பூஜை விழாவுக்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். அவர்கள் வரும் போது பணம் தொலைந்து
போய்விட்டது என்கிற தகவல் தெரிந்தால், எல்லோர் மனதிலும் அந்த விஷயமே பெரிதாக இருக்கும்.
அதனால், விழா முடிந்த பிறகு இதுப் பற்றி பேசிக்கலாம் சார்
என்று கேட்டுக் கொண்டேன்.
மேனேஜர் சீனிவாசன் தவிர
அங்கு வேலை செய்த அனைவருமே என் சிபாரிசு காரணமாக வேலைக்கு சேர்ந்தவர்கள். அதனால், அவர்கள் யாரையும்
என்னால் சந்தேகிக்க முடியவில்லை. ஏமாந்தது, கவனக் குறைவாக இருந்தது
என் தவறு என்று மட்டுமே எனக்கு மனதில் பட்டது. அதே நேரம் கிடைக்கும் என்கிற
நம்பிக்கையும் இருந்தது.
அது போல சிறிது
நேரத்திற்கு பிறகு பணம் கிடைத்து விட்டது. குப்பையில் கிடந்ததாக கொண்டு வந்து
கொடுத்தார்கள். நான் குப்பையில் தேடிய போது கிடைக்காத பணம், மீண்டும் எப்படி குப்பைக்
கூடைக்கு சென்றது என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
மனசாட்சிக்கு பயந்து
கவரை பிரித்துக் கூட பார்க்காமல் கொண்டு போய் போட்டுவிட்டார்கள் என்பது மட்டும்
தெரிந்தது. அவருக்கு நன்றி சொல்லிக்
கொண்டேன்.
அதே சமயம், யார் மீதும் பழி
சுமத்திக் கொண்டு, சந்தேகப்பட்டுக் கொண்டு இருக்காமல் வேலையைப்
பாருங்கள் என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டேன்.
பணம் கிடைத்தாலும், மனம் என்னைக்
கண்டித்துக் கொண்டிருந்தது.
சில மணி நேரத்திற்குள்
தயாரிப்பாளர்கள் கூடினார்கள். ஆயுத பூஜை விழா தொடங்கியது. புரோகிதர் ஒவ்வொரு
கடவுளர் படத்தையும் வரிசையாக பார்த்து அர்ச்சனை செய்து ‘நமக’ என்று சொல்லிக்
கொண்டு வந்தவர், குருவாயூரப்பன் படத்தைப் பார்த்ததும் நமக சொல்ல
தயங்கினார். அந்த கடவுளரின் பெயர் அவருக்கு தெரியவில்லை.
நான் அதை புரிந்து
‘’குருவாயூரப்பான்’’ என்று சொன்னதும், அவர் அதை வாங்கிக் கொண்டு ‘’குருவாயூரப்பான் நமக’’
என்று அர்ச்சனை செய்தார்.
இதைப் பார்த்து சில
தயாரிப்பாளர்கள் சிரித்து விட்டனர்.
அதுவரை மன சங்கடத்தில்
இருந்த எனக்கு கூட சிரிப்பு வந்துவிட்டது.
குருவாயூரப்பான் கூட
அந்த புரோகிதருக்கு தெரியவில்லை என்று சிலர் கேளியாக பேசிக் கொண்டனர்.
அப்போது என
ஞாபகத்திற்கு வந்தது, எல்லாம் தெரிந்தவர் எவரும் கிடையாது?.
நான் கூட இன்று ஒன்று
கற்றுக் கொண்டேன். கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்பதை?.
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment