Thursday, July 9, 2015

201 பையன்


லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த மிஸ்டர் மெட்ராஸ், தர்மச்சக்கரம், கொகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னை நினைத்து, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ஒருவன், தாஸ், பிரியமுடன், வீரம் வெளஞ்ச மண்ணு ஆகிய படங்களில் அலுவலக உதவியாளராக இருந்த குமார், விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் ’உதவி தயாரிப்பு நிர்வாகியாக’ பதவி உயர்வு பெற்றார்.

திருப்பதி, பஞ்சாமிர்தம், அனேகன், சண்டிவீரன், உட்பட பல படங்களுக்கு உதவி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர், அழகேசன், ஆடுபுலி, மருதன் போன்ற படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்திருக்கிறார்.

அவரது தம்பி பாலகிருஷ்ணன் அருணா ஆடியோ நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். சின்ன தம்பி சங்கர் முந்தைய கட்டுரையில் சொன்னது போல எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரித்தப் paபல படங்களில் வேலைப் பார்த்து வந்தார்.

எனது அக்காவுக்கு குமார், பாலகிருஷ்ணன், சங்கர் என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் திரையுலகில் வேலைப் பார்த்தனர். அவர்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்று எனது அக்காவும் சென்னை வருவதாக தெரிவித்தார்

நான் வசித்த வீடு இருந்த தெரு அருகில் ஒரு வீடு பார்த்து அக்காவையும், அத்தானையும் அழைத்து வந்தேன். இரண்டு வருடங்கள் நன்றாக இருந்தார். அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டார். சொந்தமாக டீக்கடை நடத்திய போது பணம் இல்லாமல் வருபவர்களுக்கும் கூட நல்ல உணவு அளித்து வயிறு நிறைய சாப்பிட வைத்து அனுப்பியவர், தனது வயிற்றை கவனிக்க மறந்தார்.

நெருப்பிலும், அதன் அனலிலும் கிடந்து உழைத்தவர், வயிற்றை காயப் போட்டாதால், அல்சர் வந்து அமர்ந்து கொண்டது. காலமெல்லாம் கஷ்டப்பட்டவர், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் போது நோயின் தாக்குதலுக்கு ஆளானார். 

மருத்துமனைக்கு அழைத்து சென்றேன். வயிற்றில் இருக்கும் வியாதிக்கு மருத்துவம் பார்க்காமல் வாயுக்கும், தொண்டைக்கும் மட்டுமே மருத்துவம் பார்த்தார்கள். பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். வைத்தியம் நடந்ததே தவிர குணமடையவில்லை.

நாள் ஆக ஆக நோயின் தீவிரம் எனக்கு பயத்தை அதிகப்படுத்தியது. தினமும் வேதனையும் அழுகையும் அதிகமானது. ஏற்கனவே ஒரு சகோதரியை இழந்தவன். மீண்டும் ஒருவரை இழக்க போகிறோமோ என்கிற பயம் மனதை கொன்றது.

என்னுடைய சகோதரி எனக்கு அக்கா மட்டும் அல்ல. அவர் எனக்கு இன்னொரு தாய். நான் பிறந்த போது என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால், பிறந்த அறையில் இருந்து என்னை தூக்கியவர், நான் வளர்ந்து பெரியவன் ஆனது வரை என்னை தனது மகனைப் போலவே பாவித்து வளர்த்தவர். 

அவருக்கு மூன்று மகன்கள் இருந்தாலும் என்னை மூத்த மகனாக இன்றும் கருதுபவர். அதே போல நானும் என் உயிராகத்தான் அவரை நினைப்பேன். எனது அத்தான் ஒரு சிறு விஷயத்திற்காக அவரது கவனக் குறையால், அக்கா மீது கோபப்பட்டு அக்கா முரட்டுதனமாக அடித்தார். சிறு வயதில் அதை நேரில் பார்த்து அதிர்ந்து போனேன்.

இன்றும் அந்த அடியும், அதன் வலியும் என் இதயத்தின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு ஞாபகப்படுத்துகிறது. அன்றிலிருந்து இன்று வரை எனது அத்தானை எனக்கு பிடிக்காது. அவரைப் பார்த்தாலே அவர் எனது அக்காவை அடித்த அந்த காட்சி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. தவிக்கவே முடியவில்லை. 

என் அக்காவின் அறிவுக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் தகுந்த சரியான துணையை என் தந்தை அமைத்துக் கொடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் கோபம் இன்றும் என்னிடத்தில் இருக்கிறது. இந்த கட்டுரையை பதிவு செய்யும் போது கூட வெம்பி வெடிக்கிறேன்.

எனக்கு அத்தான் மீது மரியாதை வர காரணமாக இருந்தது, அவர் கொண்டு வந்து கொடுத்த ஒரு மருத்துவரின் முகவரி. அந்த முகவரி மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் என அக்காவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இழந்திருப்பேன்.

அவர் கொடுத்த முகவரியில் இருந்த மருத்துவரை சந்தித்த போதுதான் என்னுடைய அக்காவின் உண்மையான நோய் பற்றிய விபரம் தெரிந்து. குடலில் அல்சர் முற்றி கேன்சருக்கு செல்லப் போகும் அபாய கட்டத்தை நெருங்கும் போது அந்த மருத்துவரை சந்தித்தோம்.

மருத்துவர் என்னை அழைத்து விபரத்தை சொன்ன போது அதிர்ந்துவிட்டேன். எனக்கு தலை சுற்றியது. மயக்க நிலைக்கு ஆளானேன்.  மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது கூட பாதி மயக்க நிலையிலேயே இருந்தேன். புத்தி சுவாதீனம் இல்லாதவனாக அன்று முழுவதும் இருந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு வடிகாலாக இருந்தவள் என மனைவி தமிழ்ச் செல்வி.

இது பற்றி என் மனைவியிடம் தெரிவித்த போது அவளும் அழுதுவிட்டாள். அவளை தேற்ற கஷ்டப்பட்டேன். பிறகு அக்காவை வேலை செய்ய விடக் கூடாது. வீட்டு வேலைகள் அனைத்தையும் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் வேலை செய்ய ஆரம்பித்தது. அதன் தீவிரம் தாங்க முடியாமல் படாத பாடுபட்டார் என அக்காள். அந்த நாட்களை நினைத்தாலே கண்கள் குளமாகிறது.

நோய் பற்றிய எந்த விவரத்தையும் அக்காள் மகன்களிடம் உடனே தெரிவிக்கவில்லை. கூட பிறந்த நானே ஒரு நாள் முழுக்க நொறுங்கி போனேன். அவர்களுக்கு தெரிந்தால் உடைந்து போவார்கள் என்று மறைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு மூத்தமகன் குமாரிடம் தெரிவித்தேன். அவரும் இடிந்து போனார்.

அக்காவுக்கு என் மனைவியும், என் தம்பி மனைவியும் உதவியாக இருந்து வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டனர். இருந்தாலும் எத்தனை நாளைக்கு இப்படி செல்வது?.


அதனால், மூத்தவர் குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...