தயாரிப்பாளர்
சங்கத்தில் மக்கள் தொடர்பாளராக வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், சிறுகதைகள், நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தேன்.
நக்கீரன் குழுமத்தில்
இருந்து வெளிவரும் உதயம் இதழில் மூன்று குறுநாவல்கள் எழுதி இருக்கிறேன். நாவலின்
முடிவின் போது ‘கதையின் கதை’ என்று கதை எழுதியவரின் புகைப்படம், கதை எழுத தூண்டிய
அனுபவம், அந்த எழுத்தாளரின் முகவரி ஆகியவற்றையும்
வெளியிடுவார்கள்.
1997 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் வெளியான உதயம் இதழில் ‘காதலிக்கலாம் வா’ என்கிற குறுநாவல் ஒன்றை
எழுதி இருந்தேன். அதைப் பாராட்டி படித்துவிட்டு பல வாசகர்கள் பத்திரிக்கை
அலுவலகத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். எனது முகவரிக்கும் சிலர் கடிதம் எழுதி
இருந்தனர். அதில் சத்தியமங்கலம் சரவணன் என்கிற வாசகர் எழுதிய கடிதம் என்னை அதிகம்
ஈர்த்தது. அவரது வர்ணனை, புகழ்ந்திருந்த விதம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது.
அதனால், அவருக்கு நன்றி சொல்லி
கடிதம் எழுதி இருந்தேன். வீடு காலி செய்கிற மாதிரி சூழல் இருந்ததால், என்னுடைய பெயருக்கும்
கீழே தயாரிப்பாளர் சங்க முகவரியை எழுதி
அனுப்பி இருந்தேன்.
திரைப்படத் துறைக்கு
செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த சரவணனுக்கு எனது தயாரிப்பாளர் சங்க முகவரி
பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. உடனே உதவி இயக்குனராக சேர வேண்டும் என்கிற
தனது ஆர்வத்தை தெரிவித்து மறுபடியும் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
வாய்ப்பு வரும் போது
அழைக்கிறேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை.
ஆர்வத்தில் புறப்பட்டு வந்துவிட்டார்.
உன்னை நம்பி குடும்பம்
இருக்கிறதா? என்று கேட்டேன். ‘இல்லை’ என்றார். அப்பா தபால்
துறையில் வேலை செய்கிறார். என் திறமையை அங்கீகரிப்பவர். அதனால்தான் என்னை அனுப்பி
வைத்தார் என்றார்.
இப்போதிலிருந்து உதவி
இயக்குனர் வாய்ப்பு பெற்ற பிறகும் உனது சொந்த செலவில் தங்கி, சாப்பிட்டுக் கொள்ள
வேண்டும். அதே போல இயக்குனர்களை சென்று சந்தித்து வர உனது செலவுக்கு பணம் வேண்டும்.
அதனை உருவாக்கிக் கொள். நான் விசாரித்துக் கொண்டு இருக்கிறேன். அதுவரை எங்கேயாவது
உனக்கு தெரிந்த வேலையை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
சரி என்று சென்றார்.
பிறகு ஒரு நாள் தொடர்பு கொண்டு, ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருப்பதையும், அங்குள்ள தொலைபேசி
என்னையும் தெரிவித்தார்.
அதன் பிறகு ஒரு நாள்
தொடர்பு கொண்டு உடல்நிலை சரியில்லாமல் ஊருக்கு சென்றுவிட்டதாகவும், விரைவில் வருவதாகவும்
தெரிவித்தார்.
காலை ஒன்பது மணிக்கு
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற போது, வாசலில் பெற்றோருடன்
காத்திருந்தார் சரவணன். அருகில் நின்ற
அலுவலக உதவியாளரிடம் சாவியை கொடுத்து திறக்க சொல்லிவிட்டு, அவர்களை வரவேற்றேன்.
’’எனக்கு ஒரே பையன்.
இந்த துறைக்குத்தான் வருவேன் என்கிறான். அவன் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன்.
இப்போது தனியார் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிறான். அதற்கு
ஆறு மாத பயிற்சிக்கு இத்தனை ஆயிரங்கள் கட்டணமாக கேட்கிறார்களாம். அதில் படித்தால்
வேலை கிடைக்குமா? உங்களை கேட்டு, நீங்கள் சரி என்று
சொன்னால் அவனை சேர்த்துவிட்டு செல்கிறேன்’’ என்று அவனுடைய தந்தை என்னிடம் கேட்ட
போது எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
சினிமா வாய்ப்பு
கிடைத்து அதில் நமது திறமையை வெளிப்படுதினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அந்த
வெற்றிதான் நமது உயர்வை தெரிவிக்கும். அதுவரை போராட்டம்தான் என்று சொல்ல வேண்டும்.
அதை எந்த பெற்றோர்
ஏற்றுக் கொள்வார்கள். உத்திரவாதம் இல்லாத வேலைக்கு செல் என்று எந்த பெற்றோர்தான்
மகனை மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள்.
பராசக்தி காலத்தில்
இருந்தே வாய்ப்பு கிடைக்காமல் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருப்பவர்கள் ஏராளம்?. அதை இவர்களிடம் எப்படி
சொல்வது? அதே சமயம் அவனுடைய ஆர்வத்தையும் கனவையும் சிதைக்க
விடாமல் இருக்க எப்படி பதில் சொல்வது என்று திண்டாடினேன்.
ரிட்டையர் ஆகும் போது
மகனை தனது வேலையில் சேர்த்து விட வேண்டும் என்பது தந்தையின் கனவு. திரையுலகில் தன்னை ஒரு பெரும் புகழ் பெற்ற
இயக்குனராக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது மகனின் கனவு. இங்கு கனவுகள்
மெய்ப்பட வேண்டும். அதே சமயம் சினிமா சிந்தனை உள்ளவன் சினிமா தவிர, வேறு எந்த வேலையிலும்
தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள மாட்டான் என்பது என அனுபவம்.
அதனால், எடிட்டிங் துறையில்
சேர்த்து விடுங்கள். அங்கு பயிற்சி பெற்று வந்ததும், இங்குள்ள ஸ்டூடியோ
ஒன்றில் அவனை சேர்த்து விடுகிறேன். அங்கு அனுபவம் பெற்று அப்படியே பெரிய எடிட்டராக
வருவான். அது அவன் திறமையைப் பொறுத்து நல்ல வருமானத்தை பெற்று தரும். என்று
நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தினேன்.
பிறகு அவர்களை
அழைத்துச் சென்று சாப்பிட வைத்து அனுப்பி வைத்தேன்.
தனியார் திரைப்படக் கல்லூரியில்
சேர்ந்த பிறகு தகவல் தெரிவித்தார் சரவணன். பிறகு கோர்ஸ் முடியப் போகிறது தேர்வு
எழுதப் போகிறேன் என்று தெரிவித்தார். பிறகு ஒரு நாள் முடித்துவிட்டேன். என்னை
எப்போது வேலைக்கு சேர்த்துவிடப் போகிறீர்கள் என்று கேட்டார்.
பல வெற்றிப் படங்களை
தயாரித்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி அவர்களிடம், சரவணனை அழைத்துச்
சென்று அறிமுகப்படுத்தி அவரது ஸ்டூடியோவில் எடிட்டிங் உதவியாளராக சேர்த்துக்
கொள்ளுமாறு உதவி கேட்ட போது, மறுப்பேதும் சொல்லாமல் உடனே சேர்த்துக் கொண்டார்.
காலை ஒன்பது மணிக்கு
போன் செய்து, ‘’அண்ணே நேற்று இரவு ஒரு நிகழ்ச்சியை நான் எடிட்
செய்தேன்’’ என்று பெருமையாக சொல்வார் சரவணன். கேட்க மகிழ்ச்சியாக இருக்கும்.
அதே போல பல தடவை அவரது
வேலையைப் பற்றி போனில் ஆர்வத்துடன் சொல்வார். அதை கேட்கும் போது, ஒரு தாயைப் போல மனம்
பொங்கி மகிழும். தட்டிக் கொடுத்து பாராட்டுவேன்.
சில மாதங்களுக்கு பிறகு
திடீர் என செல்போனில் தொடர்பு கொண்டு, ‘’அண்ணே நான் இப்போ எஸ்.எஸ்.மியூசிக்கில் எட்டிட்டராக
ஜாயிண்ட் பண்ணிருக்கேன்’’ என்பார். ஒரு நாள் போன் செய்து ஹாங்காங்கில் ஒளிபரப்பு
வேலையில் இருக்கேன் என்பார். இப்படி அவ்வப்போது அலைபேசியில் அழைத்து இன்ப
அதிர்ச்சியான தகவலை என்னிடம் தெரிவிப்பார்.
அஜித் நடிக்கும் ’அசல்’
படத்தின் துவக்க விழாவுக்கு நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்திற்கு சென்ற போது, அங்கு திடீரென என்
எதிரில் வந்து நின்று, ‘’அண்ணே என்னை வாழ்த்துங்க. நான் இந்தப் படத்தில்
இயக்குனர் சரண் சாரிடம் இணை இயக்குனராக வேலை செய்கிறேன்’’ என்றார். வாழ்த்தினேன்.
இப்போது ஒரு படத்தை
இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சரவணன். வாழ்த்துவோம்.
(என்
திரையுலக வாழ்க்கை
அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment