வள்ளுவர் கோட்டம் அருகில் தோழர்களுடன் நடந்து பேசிக் கொண்டு சென்ற போது, வழியில்
சைக்கிளில் சென்ற ஒருவர் என் அருகே வந்து, ’’நீங்க பாலு தானே?’’ என்று இன்ப அதிர்ச்சியுடன்
கேட்டார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ’ஆமாம்’ என்று பதில் சொல்ல முடியாமல் குழப்பத்துடன்
அவரைப் பார்த்தேன்.
’’என்னை தெரியல… நான்தான் ராமச்சந்திரன்…. எக்கல் அக்கா மகன்…’’ என்று ஞாபகப்
படுத்தினார்.
நண்பர்கள் பாலன், பாலா என்று அழைத்து பழக்கப்பட்டு போனதால், என்னை கிராமத்தில்
பாலு என்று கூப்பிடுவதையே மறந்தே போயிருந்தேன். பிறகு முழித்துக் கொண்டு பார்த்தேன்.
‘’உங்க கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா வீட்டு இடத்தில் குடி இருந்தோமே…” என்று மறுபடியும்
ஞாபகப்படுத்தினார்.
சுத்தமாக அவர் என் நினைவுகளுக்கு வரவில்லை. அவரை மறந்தே போயிருந்தேன். நமது
கிராமத்துக்காரர் என்பது மட்டும் புரிந்தது.
சினிமாவில் வெற்றிப் பெற்ற பிறகே ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
அதனால், ஒரு கடித தொடர்பு கூட வைத்துக் கொள்ளாமல் இருந்தேன். நான்கு ஆண்டுகள் ஒடிப்போனது.
இப்போது இவர் கிராமத்தைப் பற்றியும், எங்கள் குடும்ப நிலவரத்தையும் எடுத்துச் சொன்னார்.
என்னை தேடுகிறேன். தேடுகிறேன் என்று என் அண்ணன் சம்பாதித்ததை எல்லாம் செலவு
செய்து விட்டாராம். சிலர் நான் திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆகிவிட்டதாக
சொன்னார்களாம். சிலர் நான் இறந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார்கள். இப்படி என்னைப் பற்றிய
வதந்தி ஊருக்குள் நிலவியதையும், தங்கை திருமண வயதில் இருக்கிறார் என்பதையும் தெரிவித்தார்
ராமச்சந்திரன்.
என் மனம் முழுக்க பாரமாக இருந்தது. வெற்றியோடு கிராமத்திற்கு செல்ல நினைத்த
நான், தோல்வி முகத்தோடு எப்படி செல்வது என்கிற மனப் போராட்டத்துடன் நண்பன் செல்வக்குமார்
வீட்டுக்கு சென்றேன். எனது குழப்பமான நிலையின் போது, அவனது ஓட்டேரி வீட்டுக்கு சென்று
பிரச்சனைகளை சொல்வேன். அவனிடம் பேசினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.
அவனது ஆலோசனைகள் என்னால் உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயக்க வேலைகளில் கவனம்
செலுத்தினேன். என்னதான் இங்கு இருந்து கொண்டு இயக்க வேலைகளில் ஈடுபட்டாலும் மனம் தங்கை
திருமணம் பற்றியே சுற்றி வந்தது. அதனால், ஊருக்கு செல்ல முடிவு செய்தேன்.
’கொண்டு வரவிட்டாலும் தாய்’ என்பதைப் போல என்னை ஏற்றுக்கொண்டார் என் அன்னை.
தங்கையின் திருமண கடமை முன் நின்றது. அதற்காக உழைக்க வேண்டிய நாட்கள் தேவைப்பட்டது.
கிராமத்தில் வேலை செய்தால், வரவுக்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். அதனால்,
மீண்டும் சென்னை வந்து கடையில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
அதற்கு குடும்பத்தினர் சம்மதிக்க வில்லை.
ஒடுகிறவனுக்கு ஒன்பதுல குருன்னு சொல்வாங்க. நீ ஓடிப் போய் திரும்பி வந்துவிட்டாய்.
அதனால், நீ இங்குதான் வேலை செய்ய வேண்டும் என்று சிலர் அறிவுறுத்தினார்கள்.
எனது உறவுக்கார பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்து மாப்பிள்ளை ஆக பார்க்க
ஆசைப்பட்டார் என் அண்ணன். அதனால், மீண்டும்
சென்னை செல்வதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
நான் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு தகுந்த மாதிரி என்னை தயார்படுத்திக்
கொள்ள பழக்கப்பட்டவன். கிராமத்தில் உள்ள விவசாய வேலை எல்லாம் எனக்கு தெரியும்.
தண்ணி இறைப்பேன். மம்பட்டி பிடித்து கொத்துவேன். நாத்து பறிப்பேன். களை எடுப்பேன்.
கட்டு தூக்குவேன். கதிர் அறுப்பேன். கதிர் அடிப்பேன். நெல்லு தூத்துவேன். மூட்டை தூக்குவேன்.
வண்டி ஓட்டுவேன். இப்படி கிராமத்து வேலைகள் எல்லாம் எனக்கு அத்துபடி. எல்லா வேலைகலையும்
ஆர்வத்துடன் சுத்தமாக செய்வேன். அப்படி செய்தால்தான் எனக்கு பிடிக்கும்.
தங்கையை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மீண்டும் நாம் ஆசைப்பட்ட சினிமாவுக்கு
சென்று இயக்குநர் ஆவது என்கிற லட்சியம் மனதில் தீயாய் கணன்றது. நான் மட்டும் வேலை செய்தால்
உடனே திருமணம் செய்து வைக்க முடியாது. அதனால், தம்பியையும் சம்பாதிக்க வைக்க வேண்டும்
என்று மனதில் சிந்தனை எழுந்தது.
என்னுடைய தந்தை வைத்து சென்ற ’நான்கு மா’ (மூன்று மா என்பது ஒரு ஏக்கர்) நிலத்தில்,
’இரண்டு மா’ நிலத்தை அடகு வைத்துவிட்டு, ’இரண்டு மா’ நிலத்தை அண்ணன் சாகுபடி செய்து
கொண்டிருந்தார். அவர் குடும்பம் தனியாக இருந்தது.
அண்ணனிடம் பேசி ’ஒரு மா’ நிலத்தை ஒருவரிடம் ’ஒத்தி’ வைத்துவிட்டு, இரண்டாயிரம்
ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, எனது தம்பிக்கு தொழில் வைத்துக் கொடுக்க சென்றேன்.
என் தம்பி சிவாவும், என் சித்தப்பா மகன் ரவியும், நான் கோயம்புத்தூரில் இருக்கும்
போதே என்னை தேடி வந்தவர்கள். அங்கு ஒரு கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டிருந்தேன். அவர்கள்
பிறகு சமோசா கம்பெனியில் தொழில் கற்றனர். ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பாளையத்தில்
தனியாக கடை போட்டான் ரவி. ஈரோடு, குமராபாளையம் போன்ற பகுதிகளுக்கு சமோசா விற்பனை செய்ய
அவனுக்கு உதவியாக இருந்தான் என் தம்பி சிவா.
என் தம்பி சிவாவை அழைத்துக் கொண்டு திருச்சங்கோடு அருகில் வீடு எடுத்து அங்கு
தனியாக சமோசா கம்பெனி வைத்துக் கொடுத்தேன். முதலில் திருச்சங்கோடு நகரத்திற்கு மட்டும்
சமோசா சப்ளை செய்ய ஆரம்பித்து, பிறகு ராசிபுரம், சங்ககிரி என்று அதன் அருகில் உள்ள
நகரங்களிலும் சப்ளை செய்தான். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சமோசா வியாபரத்திற்கு சென்றது.
ராஜீவ் காந்தி இறந்தது தெரியாமல், வழக்கம் போல அதிகாலையில் எழுந்து ஆட்கள் வேலை
செய்தனர். விடிந்ததும் ராஜீவ் காந்தி இறந்தது தெரிந்ததும் பொறித்த இரண்டாயிரம் சமோசாவும்
விற்பனைக்கு செல்லவில்லை. இதனால் பெரும் நஷ்டம் உண்டானது.
நான் ராசிபுரத்திற்கு வியாபார விஷயமாக சென்ற போது, ஒரு நாள் தினத்தந்தி பத்திரிகையில்
வந்த வரிவிளம்பரத்தைப் பார்த்தேன். அதில் சினிமாவுக்கு உதவி இயக்குனர், நடிகர்கள் தேவை
என்கிற விளம்பரம் இருந்தது. உடனே அந்த முகவரிக்கு என் விருப்பத்தை தெரிவித்து கடிதம்
எழுதினேன். கடிதம் எழுதிய மறுவாரமே சினிமாவில் சேர அழைப்பு வந்தது.
(என் திரையுலக வாழ்க்கை
அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment