வடபாதி ஜெயராமன், காந்திமதி தம்பதியினர் |
பெரியக்கா சிவஞானத்தை மிகுந்த சிரமத்திற்கிடையில் உறவினரான ஆதிரங்கம் ராமசாமி
என்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். கணவனும் மனைவியுமாக இரவு பகல் பாராது
கடுமையாக உழைத்தார்கள். அதன் விளைவாக வளர்ச்சியும் முன்னேற்றமும் வாழ்க்கையில்
அவர்களுக்கு கிடைத்தது.
அனைவருக்கும் பன்னீர் செல்வம், தமிழ்ச் செல்வம், தாமரைச் செல்வம், கலைச்செல்வம் என செல்வமாக பெயர் வைத்து, அவர்ளை படிக்க வைத்து நல்ல செல்வ வாழ்க்கைகையை அமைத்துக் கொடுத்தார்கள்.
அவர்களும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
அதே போல சின்ன அக்காள் காந்திமதிக்கு,
பெரியக்காவே வரன் பார்த்து அருகில் உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன்
என்கிற பாட்டாளிக்கு திருமணம் செய்து வைத்தார்.
சின்ன அக்கா காந்திமதியும் அவரைப் போலவே பாடுபட்டு கடுமையாக உழைத்து
வாழ்க்கையில் முன்னேறினார். தனது கொழுந்தன் கணேசன்,
நாத்தினார் மகன் என பலரை வெளிநாடு அனுப்பி அவர்கள் சம்பாதிக்க உதவியாக இருந்தார்.
அக்காள் தங்கை உறவு விட்டுப் போகக் கூடாது என்று எங்களுடைய அகமுடைய
இனத்தில் தாய் மாமன் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
அப்படி எதிர்ப்பார்து ஏமாந்து போனார் பெரிய அண்ணன் சிவராமன். அவரது மகள்
ராணி, எங்க செல்லத்தை, அக்காள்
தனது மகன்களில் ஒருவருக்கு எடுத்துக் கொள்வார் என நினைத்தார்.
ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க எந்த
தாயுக்குத்தான் மனம் வரும். மூத்தமகனுக்கு எப்படி வசதியாக பெண் எடுத்தாரோ, அதற்கு குறைவில்லாமல் அனைத்து மகன்களுக்கும் வரன் பார்த்து திருமணம் செய்து
வைத்தார்.
அதனால் ஏழையான எங்கள் குடும்பத்தில் அவர் பெண் எடுக்கவில்லை. பெரிய அக்கா
பெண் எடுக்கவில்லை என்றால் என்ன? நான் இருக்கேன் என்று உதவ முன் வந்தார், சின்ன அக்காள் காந்திமதி.
வெளிநாட்டில் இருந்து வந்த அவரது கொழுந்தன் கணேசனுக்கு, அண்ணன் மகள் ராணியை திருமணம் செய்து வைத்தார்.
உங்களுக்கு மட்டும்தான் பெரிய மனதா?
எனக்கும் இருக்கிறது என்று அண்ணன் மகன் ரமேஷ்,
மச்சான் சுதாகர் ஆகியோரை வெளிநாட்டுக்கு அழைத்துக் கொண்டார் கணேசன்.
கூரை வீட்டில் இருந்த இவர்கள், இப்போது மாடி வீடு கட்டி
உயர்ந்திருக்கின்றனர். தனது மாமனார் மட்டுமல்லாது சின்ன மாமனார் வீட்டு
திருமணங்களுக்கு கூட தன்னால் இயன்ற பொருள் உதவிகளை வழங்கியிருக்கிறார் கணேசன்.
ராணி இப்போது மகா ராணியாக இருக்கிறார். எங்கள் ராணி, வெங்கடேஷ், சந்தோஷ் என இரு தங்கங்களை
பெற்றேடுத்திருக்கிறது. எங்க தங்கம் பெற்ற தங்கங்கள் ‘’டேய்
கிழவா’’ என்று என்னை உரிமையோடு அழைக்கிறார்கள்.
ஆனாலும் பெரிய அக்காவுக்கு, சின்ன அக்கா காந்திமதி
மீது கோபம் இருக்கிறது. அவர் செய்யாத உரிமையை இவர் செய்து புண்ணியம் கட்டிக்
கொண்டார் என்று நாங்கள் நடந்து கொள்வதாக கோபம்.
எங்கள் மீது அன்பு காட்டி எங்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்த சின்ன
அக்கா மீது நாங்களும் அதிக நன்றியோடு இருப்பதால் கூட இருக்கலாம்.
பெரியக்காவை அப்படி நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. அவரும் எங்க வீட்டு
மகள்தான். பொறந்த பொறாப்பு என்றும் விட்டுப் போகாது. அப்படி யாரும் நினைக்கவில்லை.
அவர்கள் வீட்டு மருமகள்கள் எங்களுக்கு உறவினர்கள் இல்லை. அந்நியம்.
அதனால் எங்கள் மகள் வீடு என்று உரிமையோடு அந்த வீட்டுக்கு அடிக்கடி செல்ல
வாய்ப்பு இல்லை. அது ஒரு குறையே தவிர மற்றபடி பாசம் குறைந்து விடுமா என்ன?
சரி, இந்த உயர்ந்த உள்ளத்துக்கு
சொந்தக்காரர்கள பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், குறுகிய மனம் படைத்தவர்கள் பற்றி
சொல்வதற்குதான். மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுப்பது என்பது ஒரு வாய்ப்பு.
அதை எத்தனை பேர் செயல் படுத்தினார்கள்?
சினிமாக்காரன் என்பதால் எனக்கு
பெண் கொடுக்க பயந்தார்கள்? அந்த அனுபவத்தை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.
(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment